ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசியாவுக்கான களச்செயற்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பிரிவின் தலைவரான ஹின்னி மெகாலி மற்றும் அவரது அணியின் அங்கத்தவர்களை ஐ.நா வதிவிட இணைப்பாளர் சுபினே நந்தியின் அலுவலகத்தில் வைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சந்திப்பின்போது, வடக்கில் வலிகாமம், கிழக்கில் சம்பூர் உள்ளிட்ட பாதுகாப்பு வலயங்கள் குறித்தும், அந்தப் பிரதேசங்களில் மக்களை மீளக்குடியேறவிடாது தடுத்தல், அவர்களின் நிலங்களை இராணுவ தேவைக்காக கைப்பற்றுதல், அபிவிருத்திக்கு என கூறிக்கொண்டு பெரும்பான்மையின மக்களை குடியேற்றுதல், தமிழ் மக்களை அவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு போகவிடாது தடுத்தல், வடக்கு கிழக்கில் சனத்தொகை விகிதாசாரத்தை மாற்றுதல், காணாமல் போதல், தடுப்பில் உள்ளோர், பொறுப்புக் கூறுதல், ஏற்புடைய அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா குழுவுக்கு எடுத்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், ஐ.நா மனித உரிமைப் பேரவையில் கடந்த மார்ச் மாதம் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பற்றியும்அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தவுள்ளதா என்பது பற்றியும் இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பொன்.செல்வராசா ஆகியோர் பங்கு பற்றியதாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment