Translate

Saturday 15 September 2012

மீண்டும் நழுவிப்போகும் வரலாற்றுச் சந்தர்ப்பம்?

மீண்டும் நழுவிப்போகும் வரலாற்றுச் சந்தர்ப்பம்?

- தோழர் சுகு- ஸ்ரீதரன் (பத்மநாபா ஈபிஆர்எல்எஃப்)
கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ,முஸ்லீம் காங்கிரசும் இணைந்து ஆட்சி அமைக்க முடியுமனால் அது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமையலாம்.இலங்கையை பல்லின நாடாக மாற்றும் ஜனநாயக கோரிக்கைக்கு வலுச் சேர்ப்பதாக அமையலாம்.


இன்று இலங்கையை ஜனநாயக மயப்படுத்துதல் இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையான தேசிய சமூ கங்களான தமிழர்கள், முஸ்லீம்கள் ,மலையக மக்கள் ,பறங்கி ,மலாய் இன மக்கள் பெரும்பான்மைச் சமூகத்தின் ஜனநாயக உணர்வு கொண்ட பெருவாரியான மக்கள் இணந்து செயற்படவேண்டிய தேவை இருக்கிறது. அந்த வகையில் தமிழ் முஸ்லீம் கட்சிகள் கிழக்கில் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு வாராது வந்துற்ற சந்தர்ப்பம் இதுவாகும்.

கடந்த காலத்தில் முஸ்லீம் மக்களுக்கு தமிழர் தரப்பிலிருந்து அநீதிகள் இழைக்கப்பட்டடுள்ளன. பாரதூரமான தவறுகள் நேர்ந்துள்ளன.

இந்த அநீதிகள் தவறுகள் தொடர்பாக பகிரங்க சுயவிமரிசனம் தமிழர் தரப்பிலிருந்து செய்யப்படவேண்டியிருக்கிறது.

கிழக்கு மாகாண சபையில் முஸ்லீம் ஒருவர்; முதலமைச்சராக வருவதை தமிழ் தரப்பு ஆதரிக்கவேண்டும் .இது பல மனச்சங்கடங்கள், கசப்புக்கள், நெருடல்கள் நீங்குவதற்கு, இரு சமூகங்களிடையேயும் நல்லுறவு ஏற்படுவதற்கான தருணமாகவும் அமையும்.

இந்த சந்தர்ப்பமும் நழுவ விடப்படக் கூடாது. முஸ்லீம் தமிழ் சமூகங்களின் இருப்பு நீண்டகால நலன்கள் அன்றாட சவால்கள் பிரச்சனைகள் தொடர்பில் பலமாகவும் ஆக்க பூர்வமாகவும் செயற்படுவதற்கு இது பெரும் வாய்ப்பாகும்

இனப்பிரச்சனை தீர்வு என்று வரும் போது இஸ்லாமிய , மலையக மக்களுடன் பேசாமல் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது. இந்த அடிப்படையான எளிமையான உண்மை தமிழர் தரப்பில் பல சந்தர்ப்பங்களில் விளங்கிக் கொள்ளப்படுவதில்லை. விளங்கிக் கொள்ள விரும்புவதும் இல்லை.

இனப்பிரச்சனை தீர்வு என்று வரும் போது இலங்கையில் பல்வேறு மொழிகலாச்சார மத சமூகங்கள் இருக்கின்றன என்பதை முதலில் மனதில் இருத்தியாக வேண்டும்.

இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாக தமிழர் தரப்பு இலங்கை அரசுடன் பேசும் கடப்பாட்டை கொண்டிருப்பது போல் முஸ்லீம் ,மலையகதமிழ் சமூகங்களுடன் பேசியே ஆகவேண்டும். ஏதோ ஒரு இடத்திலாவது இணைந்து பணியாற்றினால்தான் நல்லெண்ணங்கள் வளரும்.

தனித் தனி தீவுகளாக சமூகங்கள் இருந்து கொண்டு காழ்ப்பையும், விரோதத்ததையும் உமிழ்ந்து கொண்டு தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகங்களை மேலும் துன்பத்தில ஆழ்த்துவதை தமிழ் முஸ்லீம் தரப்புக்கள் தவிர்க்கவேண்டும்.

கிழக்கு மகாண சபைத் தேர்தலில் முஸ்லீம் ,தமிழ் தரப்புக்கள் இன சமூக அபிலாசைகளைப் பிரதானப்படுத்தியே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டன.

அந்த தேர்தல் வாக்குறுதிகள் மழைக்கு முளைத்த காளான்கள் என்ற மன நிலை மாறவேண்டும். “அந்தோனியாருக்கு பகிடியும் விளங்காது வெற்றியும் விளங்காது” என்ற சிலேடை மாதிரி இருக்கக் கூடாது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு மதிப்புக் கொடுக்கவேண்டும். இருதரப்பு மக்களுக்குமே நிலப்பிரச்சனை இருக்கிறது. கலாச்சார ஆக்கிரமிப்பு ,இராணுவமயமக்கல் என்பன பிரச்சனையாக இருக்கின்றன.

சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீட்டை முஸ்லீம் தலைவர்களும் ஆட்சேபிக்கிறார்கள். முஸ்லிம் ,தமிழ் உறவு அரசு தரப்பினால் விரும்பப்படுவதுமில்லை. சமூகங்களை மோதவிட்டு ஆட்சி அதிகாரத்தை பலப்படுத்துவது என்னவோ இலங்கையின் அரசியல் பாரம்பரியம்.

முரண்பாடுகள் பிரச்சனைகள அவ்வப்போது எழத்தான் செய்யும் . ஆனால் பேசுதல் ,கலந்துரையாடுதல், பரஸ்பர விட்டுக் கொடுப்பு போன்ற முறைகள் இடையறாது பின்பற்றப்படவேண்டும்.

பேரினவாதம் மற்றும் யாழ்மையவாத சிந்தனையின் செல்வாக்கை தவிர்த்து இலங்கையின் வௌ;வேறு சமூக யதார்த்தங்கள் அபிலாசைகளை கருத்திலெடுத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுயலவேண்டும் .

மாகாண சபை உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கும் முயற்சி , அச்சுறுத்தல் இவற்றுக்குப் பணிவது வாக்களித்த மக்களை இழிவு படுத்தும் செயல் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. சிறுபான்மைச் சமூகங்களின் போராட்டங்களின் பின்னடைவு -தோல்விகளின் பிரதான காரணி இந்த சமூகங்களிடையேயும் ,சமூகங்களுக்குள்ளேயும் அடிப்படைபுரிந்துணர்வு இன்மையே.

கற்பிதமான விரேதங்கள் களையப்படவேண்டும் . “சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ” என்ற மனநிலைவேண்டும்.

சாதாரண மக்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்த இந்த அரசியல் வாதிகள் பங்களித்தால் அது ஒரு மாபெரும் வரலாற்றுக் கடமையாக இருக்கும் .

கிழக்கு மாகாண சபை இவ்இரு சமூகங்களின் இணைவுடன் அமையுதோ இல்லையோ நல்லெண்ண முயற்சிகள் தொடரவேண்டும். வரலாறு வாய்ப்புக்களை உருவாக்கி தந்திருக்கிறது . நாம் தான் பற்றிப் பிடிக்கவேண்டும் . கிழக்கின் அனைத்து சமூகங்களும் ஜனநாயக பண்பாட்டின் அடிப்படையில் வாழ்வதற்கான நிலைமையை ஏற்படுத்துவது இலங்கை தழுவிய ஜனநாயக அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடியது. “சிறு பொறி பெருங்காட்டுத்தீயை மூட்டலாம்”;.

இலங்கை ஒரு பல்லினங்களின் நாடாக மாறுவது தானே நம் விருப்பம்.

No comments:

Post a Comment