Translate

Tuesday, 11 September 2012

கிழக்கு ஆட்சியில் சிறுபான்மையினரின் செய்தியும், முஸ்லிம்களின் முடிவும் - ஒமர் பாறுக்


கிழக்கு ஆட்சியில் சிறுபான்மையினரின் செய்தியும், முஸ்லிம்களின் முடிவும் - ஒமர் பாறுக்
 கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஏன்?
 கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட்டு அதன் முடிவுகளும் வெளியாகியாகிவிட்டது. தேர்தல் நடத்தப்பட்ட முறை முன்னைய காலங்களைவிட திருப்திகரமாக இருந்தாலும் முழுமையான தேர்தல் மரபுகள் பேணப்பட்ட ஒரு தேர்தலாக இந்தத் தேர்தல் அமைந்திருந்ததா என்றால் விடை கேள்விக்குறிதான்.

எந்தவொரு செயலினதும் அடைவும் அந்தச் செயலின் நோக்கத்தின் அடியாகத்தான் அளக்கப்பட வேண்டும் என்கின்ற அடிப்படையில் இந்தத் தேர்தலின் அடைவுகள் அமைந்திருந்ததா என்று சற்று நேக்குவோம்.

கிழக்கு மாகாண சபையில் மாகாணத்தை உரிய காலத்துக்கு முன்னதாகக் கலைப்பதற்கு எதிராகத் தீர்மனம் நிறைவேற்றப்பட்டிருந்த போதும் அரசு அதனை உரிய காலத்துக்கு முன்னரே கலைத்திருந்தது. மேலும் முழு அரச எந்திரமும் கிழக்கில் கழமிறக்கப்பட்டு ஆளும் தரப்புக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. முழு அரச உடைமைகளும் அப்பட்டமாகவே ஆளும் தரப்புக்கு ஆதரவாக பயன்படுத்தப்பட்டன. போதாததற்கு இறுதியில் ஜனாதிபதி கூட ஒரு சுற்றுச் சுற்றி வந்தார்.

இவை இந்தத் தேர்தலை நடாத்தியதன் மூலம் அரசு அடைந்த கொள்ள நினைத்த அடைவு பெறுமதிவாய்ந்ததும் தேவையானதுமாக இருந்தது என்பதனைக் காட்டுகின்றது. அது என்ன?

மூன்று இனங்களும் ஏறத்தாளச் சமனாக வாழும் கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றுவதன் மூலம் சிறுபான்மை மக்கள் தன்னோடு இருப்பதாகச் சித்தரித்து இலங்கையில் சிறுபான்மையினருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற ஒரு செய்தியை சர்வதேசத்துக்குச் சொல்ல நினைத்தது அரசு. கடந்த மாகாணசபை போல பெரும்பன்மைப் பலம் தனக்குக் கிடைக்கும் என அரசு எண்ணியது. இதற்கு மு.கா.வின் உடனிருப்பை பலமாக அரசு கருதியதும், பின்னர் நடந்த சங்கதிகளும் நாம் அறிந்ததே.

தேர்தலின் இலக்கை அரசு அடைந்ததா?

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மூலம் அரசு எதிர்பாத்தது நடக்கவில்லை என்பது தேர்தல் முடிவுகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் ஒருவருக்கு நன்கு புலப்படும்.

கிழக்கு மாகாணத்தில் மொத்தம் பத்து தேர்தல் தொகுதிகள் காணப்படுகின்றன. இவற்றுள் இரண்டு தொகுதிகளை மாத்திரமே அரசினால் கைப்பற்ற முடிந்தது. ஏனய எட்டுத் தொகுதிகளும் ஒன்றில் தமிழர்கள் அல்லது முஸ்லிம்கள் ஆகிய இலங்கையின் சிறுபான்மை இனங்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளாகும். இந்தத் தொகுதிகள் அனைத்திலும் 2008 மாகாண சபைத் தேர்தலோடு ஒப்பிடுகையில் ஆளும் தப்பும் அதன் பங்காளிக் கட்சிகளும் அவர்களது சொந்த வாக்கு வங்கியிலிருந்து அதிகபட்ஷமாக 59.93 (பொத்துவில் தொகுதி) வீதமும், குறைந்தபட்ஷமாக 29.48 வீதமும் (மூதூர் தொகுதி) வாக்கு வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றன.

மட்டுமல்லாது, அரசினால் கைப்பற்றப்பட்ட சிங்களவர் பெரும்பான்மையாக வாழும் இரு தொகுதிகளை எடுத்துக் கொண்டாலும் அரசினதும் அதன் பங்காளிக் கட்சியினதும் வாக்கு வங்கியில் வீழ்ச்சியே அவதானிக்கப்படுகின்றது. அம்பாறையில் 1.92 வீத வீச்சியும், சேருவிலவில் 18.85 வீத வீழ்சியும் ஆளும் தரப்புக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதே வேளை அம்பாறையில் ஐ.தே.க. யின் வாக்கு வங்கியில் 13.36 வீத அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது. (இதில் தொகுதி வாரியாக எண்ணப்படாத தபால்மூல வாக்குகள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.)

சிறுபான்மையினங்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளில் பாரிய வீழ்ச்சியும். பெரும்பான்மையினர் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியும் ஆளும் கூட்டணிக்கும் அதன் பங்காளிக் கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கின்றது. அதாவது பத்து தொகுதிகளிலும் அரசு செல்வாக்கு இழந்து நிற்கின்றது.

மொத்தத்தில் 2008 இலும் பார்க்க 2012 இல் திகாமடுல்லவில் 19.30 வீத வாக்கு வீழ்ச்சியையும், மட்டக்களப்பில் 26.92 வீத வாக்கு வீழ்ச்சியையும், திருகோணமலையில் 22.99 வீத வாக்கு வீழ்ச்சியையும் அரசு எதிர் கொண்டுள்ளது.

சொல்லப்படும் செய்திகள் என்ன?

இந்த முடிவு தேசத்துக்கும் சர்வ தேசத்திற்கும் ஒரு செய்தியை அழுத்தமாகச் சொல்லியிருக்கின்றது. “பொதுவாக கிழக்கு மக்கள் குறிப்பாக சிறுபான்மை இன மக்கள் அரசை நிராகரித்திருக்கின்றார்கள்” என்பதே அந்தச் செய்தியாகும். இங்கு இந்தத் தேர்தல் மூலமான தனது நோக்கத்தில் அரசு தோல்வி கண்டிருக்கின்றது. இந்தச் செய்தி சிறுபான்மை இனங்கள் ஒருமித்துச் சொன்ன செய்தியாகும்.

தேர்தலில் களமிறங்கிய கட்சிகள் அரச தரப்பு – எதிர்த் தரப்பு என தலா 15 ஆசனங்களுடன் ஆட்சியமைக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்ற போது 7 ஆசனங்களை தனதாக்கிக் கொண்டுள்ள மு.கா. மாகாணத்தின் தீர்மானிக்கும் சக்தியாக எழுந்து நிற்கின்றது.

இந்த நிலைமையினை ஏற்படுத்தியதன் மூலம் இலங்கையின் இரண்டாவது சிறுபான்மையான முஸ்லிம் சமூகம் முதலிரண்டு பெரும்பான்மைகளையும் பார்த்து ஒரு செய்தியைச் சொல்லியிருக்கின்றது. “கிழக்கில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட முடியாத ஒரு சமூகம். வடக்கு கிழக்கு மற்றும் இன முரண்பாடு போன்ற எந்த ஒரு பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளின் போதும் முஸ்லிம்களும் அதன் கௌரவமான பங்காளிகளா அடையாளப்படுத்தப்பட வேண்டும்,” என்பதே அந்தச் செய்தியாகும்.

இது தவிரவும் 2008 தேர்தலில் அரசின் வசம் இருந்த சம்மாந்துறை, பொத்துவில் தொகுதிகளை மீண்டும் மு.கா.விடம் ஒப்படைத்ததன் மூலம் அரசின் பிராந்திய முகவராகத் திகழும் அமைச்சர் அதாஉல்லா அவர்களுக்கு திகாமடுல்ல முஸ்லிம் மக்கள் ஒரு செய்தியைச் சொல்லியிருக்கின்றார்கள். “உங்களை நாங்கள் நிராகரிக்கின்றோம்” என்பதுதான் அந்தச் செய்தி. தனது தரப்புக்கு வெற்றிலைச் சின்னத்தில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் மூவர் வெற்றி பெற்றிருப்பதாக அமைச்சர் அதாஉல்லா சமாதானம் சொல்லலாம். ஆனால் அவ்வாறான ஒரு அடைவை அவர் அவரது குதிரைச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டு அடைந்திருந்தால் அவரது சமாதானத்தில் மு.கா.வுடன் சம தானம் இருப்பதாக ஒத்துக் கொள்ளலாம்.

இத்தேர்தலில் 46,409 வாக்ககுகளை தனித்து நின்று வழங்கிய அம்பாரைத் தொகுதி ஆளும் தரப்பு வாக்காளர்கள் 40,779 வாக்குகளை இணைந்து வழங்கிய திகாமடுல்லவின் ஏனய மூன்று தொகுதி ஆளும்தரப்பு வாக்காளர்களிடம் தோற்று போனார்கள் என்பதும் ஒரு செய்தியாகும்.

ஆக தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டாலும் வெளிவந்துள்ள முடிவுகளின் படி கிழக்கு மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் தமிழர்களுடன் சேர்ந்தும் தனித்தும் சர்வதேச, தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களில் ஒவ்வொரு செய்தியைச் சொல்லியிருக்கின்றார்கள்.

இனி என்ன?

இனி கிழக்கில் ஆட்சியமைப்பது தொடர்பான காய் நகர்த்தல்கள் நடக்கும். நடக்கின்றன. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் சிறுபான்மை மக்கள் ஜனநாகய ரீதியாக தமது உரிமைகளுக்காக பயன்படுத்த வேண்டிய ஆயுதமாகவும் சந்தர்ப்பமாகவும் இந்தத் தேர்தல் அமைந்திருக்கின்றது. அதிலும் குறிப்பாக இலங்கயைின் இன முறுகலுக்கான எந்தவொரு தீர்வு முயற்சியின் போதும் அன்றிலிருந்து இன்று வரை புறக்கணிக்கப்பட்டு வரும் முஸ்லிம்கள் இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தியாக வேண்டும்.

அரசுடன் சேர்ந்து ஆட்சியமைத்தல்.

இந்த விடயத்தை ஆதரிக்கும் தரப்பினர் “ஆட்சி மாற்றத்திற்கான ஒரு அறிகுறி இல்லாத நிலைமையில் அரசுக்கே ஆதரவளிக்க வேண்டும்” என்றும், “அரசுக்கு எதிரக எடுக்கும் முடிவு கிழக்குக்கு வெளியே வாழும் மூன்றில் முஸ்லிம்களைப் பாதிக்கும்” என்றும் கருத்துத் சொல்கின்றனர்.

அரசு 18வது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்த போது அதனை வென்று கொள்வதற்கான பாரிய பங்பகளிப்பை மு.கா. செய்திருந்தது. அவ்வாறனதொரு செயலுக்கு அரசு செய்திருக்கும் நன்றிக் கடன்தான் என்ன? அம்பாறை மாவட்ட வேட்பாளர் பட்டியலில் மு.கா கேட்ட 6 ஒதுக்கீட்டைக் கூட இந்த ஆளும் தரப்பு தர மறுத்தது. கிழக்கில் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலைமை அரசுக்கு ஏற்பட்டதற்கு அவர்களின் இந்த நன்றி கெட்ட புறக்கணிப்பும் ஒரு காரணம்.

இலங்கை அரசுக்கு மிக நெருக்கடி மிக்க இக்கட்டான சந்தர்ப்பமாக அமைந்த ஜெனீவா பிரேரணச் சந்தர்ப்பத்தில் அரசுக்காக முஸ்லிம்கள் உள்நாட்டில் வீதிக்கு வந்தும், முஸ்லிம் அரசியல் மற்றும் சமயத் தலைவர்கள் ஜெனீவாவுக்குச் சென்றும் ஆதரவு திரட்டிக் கொடுத்த கைக்கு நாட்டில் கிடைத்த பரிசுதான் என்ன? நாட்டிலுள்ள பள்ளிவாயல்களின் மீது தாக்குதலும், பள்ளிவாயல்களின் நடவடிக்கைகளுக்கு தடையும் தடங்கலும் ஏற்படுத்தும் செயற்பாடுகமே அந்தப் பரிசுகளாகும். அரசு சொல்வது போல அரசுக்கு இந்தச் சம்பவங்களில் சம்பந்தம் இல்லை என்று எடுத்துக்கொண்டாலும் அரசின் இந்த வாதத்தின் மீது சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வண்ணம் இலங்கையின் அரசியல் அமைப்பின் பிரகாரம் குற்றவாளிகளான இந்த தீவிரவாதிகளை அரசு சட்டத்தின் முன்னர் நிறுத்தத் தயங்குகின்றது. பின்நிற்கின்றது.

அரசின் இந்த நிலைப்பாடுகள் சிறுபான்மைகளுக்குச் சொல்லும் செய்தி என்ன?

இன்று அரசின் செல்நெறியைத் தீர்மானிக்கின்ற பேரினவாத மற்றும் சந்தர்ப்பவாத அரசியவாதிகளின் செல்வாக்கு மிகைத்திருக்கும் காலமெல்லாம் இந்த அரசிலிருந்து சிறுபான்மையினர் உரிமைகள் எதனையும் எதிர்பார்க்கவோ அடைந்து கொள்ளவோ முடியாது என்பதாகும். இதனையே தேர்தலுக்கு முன்னதாக “மு.கா. வின் ஆதரவு எமக்குத் தேவையில்லை” அமைச்சர் பஸில் ராஜபக்ஷ எடுத்தெறிந்து பேசியதும், தேர்தலுக்குப் பின்னர் “மு.கா. வின் அழுத்தங்களுக்கு அடிபணியாதீர்” என அமைச்சர் சம்பிக ரணவக்க அரசை இனவாதம் தொனிக்க எச்செரித்திருப்பதும், “மு.கா. அரசின் பங்காளி, எனவே கிழக்கில் ஆட்சியமைப்பதில் சிக்கல் இல்லை” என்று மேட்டுக்குடித் தொனியில் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கருத்துத் தெரிவித்திருப்பதும் அரசின் முஸ்லிம்கள் தொடர்பான நிலைப்பாட்டுக்கு கட்டியம் கூறுவதாக அமைகின்றன.

கிழக்கில் ஆட்சியமைப்பது தொடர்பாக மு.கா.வுக்கு அரசு அழைப்பு விடுத்திருக்கின்ற போதும், குறிப்பாக கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் அடைந்து கொள்ள வேண்டிய அல்லது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாத்தியதைகள் தொடர்பாக அரசு எந்தவொரு தெளிவையும் இன்னும் வாக்களித்தவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதும் நோக்கப்பட வேண்டியதாகும்.
த.தே.கூ. உடன் சேர்ந்து ஆட்சியமைத்தல்
பன்மைச் சமூகம் வாழும் ஒரு நாட்டில் எந்தவொரு சமூகமும் அது பெரும்பான்மையாக அல்லது சிறுபான்மையாக இருந்தாலும் சரியே தனித்து வாழ்வது என்பது சாத்தியமற்றது. அதிலும் குறிப்பாக தமிழர்களைப் போலல்லாது நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் பரந்து வாழும் முஸ்லிம்களுக்கு அது சாத்தியமற்றதாகும். ஏனெனில் முஸ்லிம்களுக்கு கிழக்கில் எப்படித் தமிழர்களோ கிழக்குக்கு வெளியில் சிங்களவரும் அப்படியே. தம்முடன் வாழும் பேரினத்தோடு உடமைகள் உரிமைகள் விடயத்தில் இரண்டறக் கலந்த நிலைமையையே நாம் முஸ்லிம் தேசியத்தில் காண்கின்றோம்.

அந்த வகையில் குறித்த மாகாணத்தைப் பொறுத்தவரை தமிழர்களுடனான பரஸ்பர புரிந்துணர்வுடனான வாழ்க்கை என்பது தவிர்க்க முடியாது. பல முஸ்லிம் தலைவர்கள் சொல்வதைப்போல தமிழர்களும் முஸ்லிம்களும் “பிட்டும் தேங்காயும் போல”, “ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல” ஒரே தாய்மொழியையும், பின்னிப் பிணைந்த வாழ்வியலையும், பகிர்ந்து கொண்ட வளங்களையும் கொண்டமைந்த இரு தேசியங்களாகும்.

இந்த நிலைமை தந்தை செல்வாவுக்குப் பின்வந்த தமிழர் அரசியல் மற்றும் போராட்டத் தலைமைகள் அவ்வப்போது எடுத்துக் கொண்ட நிலைப்பாடுகளால் சிதைக்கப்பட்டமை வரலாறாகும். பெரும்பான்மையினத்தின் நெருக்கவாரங்களுக்கு எதிராப் போராடிய ஒரு சமூகம் மற்றொரு சிறுபான்மையை நெருக்குவாரத்துக்கு உட்படுத்தியது எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியதது. அதிலும் பெரும்பான்மையினால் தன்போலவே பாரபட்ஷம் காட்டப்படுகின்ற, தன்னோடு இணங்கி வாழ்கின்ற முஸ்லிம்களை தமிழர்கள் வஞ்சித்தது அவர்களது வரலாற்றுத் தவறாகும். அப்போது மு.கா. வின் தோற்றுதலுக்கும், இப்போது தமிழர்களின் தோற்றலுக்கும் காரணம் தமிழர்கள் முஸ்லிம்கள் மீது எடுத்துக் கொண்ட நிலைப்பாடுகளே.

ஆயுதப் போராட்டத் தலைமைகள் எடுத்துக் கொண்ட முடிவுகளுக்கு அரசியல் போராட்டத் தலைமைகளினால் எதுவும் செய்ய முடியாமல் போனது என்பதை நியாயமாகக் காட்டுவது போல தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகளின் நிலைப்பாடு தெரிகின்றது. தோற்கடிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத் தலைமைகள் விட்ட தவறுகளிலிருந்து பாடம் படித்துக் கொண்டு முஸ்லிம்களின் உரிமைகளையும் அங்கீகரிக்கின்ற ஒரு நிலைப்பாட்டுக்கு தமிழ் தலைமைகள் வந்திருப்பதனை நாம் காண்கின்றோம்.

மு.கா. வுடன் அதிகபட்ஷ விட்டுக் கொடுப்புடன் இணைந்து பணியாற்ற தாம் தயார் என த.தே.கூ. தேர்தலுக்கு முன்னர் இருந்தே கூறிவருகின்றது. ஆனால் அரச தரப்போ எடுத்தெறிந்தே பேசி வந்திருக்கின்றது. தேர்தலுக்குப் பின்னர் அரசு எவ்வித தார்மீக ரீதியான அனுசரிப்புப் பற்றியும் பேசாதிருக்கும் போது தமிழர் தரப்பு “முதலமைச்சர் பதவியை வழங்கத் தயார்”, “மாகாண அமைச்சுக்களிலும் பங்கு தரத் தயார்” “வடக்குத் தேர்தல் என்றொன்று வரும்போதும் உரிய பாத்தியதையைக் கொடுப்போம்” என இருகரம் நீட்டி அழைக்கிறது. இவை நமது சமூகத்தின் தேவைகளுக்கான நிரந்தரத் தீர்வாக இல்லை என்றிருந்தாலும் இவற்றின் மூலம் ஒரு இடைக்கால ஒத்ததடம் கிடைக்கும்.
ஆனால் “இன முறுகலுக்கான ஒரு தீர்வு..
ஆனால் “இன முறுகலுக்கான ஒரு தீர்வு அடையப்படும் போது முஸ்லிம்களின் உரிமைகளுக்கு மதிப்பளிப்போம் தேவைப்பட்டால் தனியலகு பற்றியும் பேசுவோம்” என தமிழர் தரப்பு கைகாட்டி நிற்பது ஒரு நல்ல குறிகாட்டியாகவே தெரிகின்றது. முஸ்லிம் சமூகத்திடமிருந்து தேவையான அனைத்தையும் பெற்றுக் கொண்டு முஸ்லிம்களின் வாழ்வுரிமை, மதவழிபாட்டுச் சுதந்திரம் என்பன கேள்விக் குறியாக்கப்படும் போது மௌனம் சாதித்துக் கொண்டு இனவாதிகளுக்காக மெத்தனப் போக்கைக் கைக் கொள்ளும் அரசைவிட இனப் பிரச்சினைக்கான தீர்விலும் பங்குதருவதாகக் கூறும் தமிழர் தரப்பு உயர்ந்து நிற்பதாகத் தெரிகின்றது. இது அவர்களது புரிதலின் விளைவா அல்லது சர்வதேசத்தினாலும், புலம்பெயர் தமிழர் புலத்தினாலும் இவர்கள் மீது ஏற்படுத்தப்படும் நிர்ப்பந்தத்தின் பிரதிபலிப்பா என்பதும் இங்கு கேட்கப்பட வேண்டிய கேள்வியாகும்.

எது எப்படிப் போனாலும், தமிழர்கள் ஜனநாயக வழியில் தமது போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் முக்கியமான ஒரு மைல்கல்லை எட்டியிருக்கின்றார்கள். தமிழர்களைப் போலவே பெரும்பான்மையினரின் பாரபட்ஷங்களுக்கு இலக்காக்கப்பட்டிருக்கின்ற, தாமும் தம்மோடும் பகிர்ந்து வாழும் தேவையுள்ள முஸ்லிம்களினது ஆதரவை அவர்கள் கேட்கின்றார்கள். அதற்காக தேவையான அனைத்து விட்டுக் கொடுப்புக்களுக்கும் தயாராக இருக்கின்றார்கள்.

இதுவரை காலமும் நம்மை அங்கீகரிக்கத் தயாராக இல்லாத நிலைப்பாட்டைப் கொண்டிருந்த தமிழர் தலைமைகளிடம் இன்று ஏற்பட்டிருக்கின்ற மாற்றத்தை அங்கீகரித்து தமிழர் போராட்டத்தை மலினப்படுத்தாது வலுவுப்படுத்தி நேரடியாக முஸ்லிம்களோடு ஒன்றித்து வாழும் தமிழர்களோடு பேசி உரிமைகளைப் பெற்றுக் கொண்டு நேசத்தோடு வாழப் போகின்றோமா! அல்லது அபிவிருத்தி, சலுகைகள், பதவிகள், பேரினனவாத புச்சாண்டிகள் அடக்குமுறைகளுக்குக் கட்டுப்பட்டு அரசோடு வழமைபோல  ஒட்டிக்கொண்டு உறவாடப்போகின்றோமா?

முஸ்லிம் சமூகத்தின் முடிவு என்ன?

இரண்டு தரப்பில் எந்தத் தரப்புடன் மு.கா. இணைந்தாலும் அதன் பேரம் பேசும் சக்தி கொண்டு தேவையானதைப் பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னாலும் கூட இருப்பவனை மலினப்படுத்திவிட்டு அவற்றை அடைந்து கொள்ள வேண்டியதில்லை.

மு.கா. எந்த முடிவை எடுத்தாலும் அதில் நூறு வீதம் சாதகங்கள் மாத்திரம் இருக்கப் போவதில்லை. எனவே அதிகப்படியாகன சாதகங்களைத் தருகின்ற ஒரு முடிவை மு.கா. எடுக்க வேண்டும்.

மு.கா. எடுக்கின்ற முடிவு எதிர்காலத்தில் இனமுறுகலுக்கான தீர்வொன்று முன்வைக்கப்படும் போது முஸ்லிம்களின் பாத்தியதையைக் கேள்விக்குறியாக்கிவிடக் கூடாது என்பதே மு.கா.வின் தீர்மானத்தின் இலக்காக இருக்க வேண்டும்.

தீர்க்கமான முடிவு ஒன்றுக்கு மு.கா. தலைமை வருவதற்குரிய தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை மு.கா.வின் உயர் சபை உறுப்பினர்களிடம் மாத்திரம் விட்டுவிடாமல் குறிப்பாகக் கிழக்கிலும், கிழக்குக்கு வெளியேயும் உள்ள முஸ்லிம் புத்திஜீவிகள், பிரமுகர்கள் ஆகியோர் உரிய ஆலோசனைகளையும் பிரேரணைகளையும் மு.காவுக்கு வழங்க வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் இவர்கள் இந்தப் பொறுப்பிலிருந்து நழுவுவார்களாக இருந்தால் நாளை முழு முஸ்லிம் சமூகத்துக்கும் ஏற்படப்போகும் இக்கட்டான நிலைமைக்கு அனைவரும் பொறுப்புச் சொல்ல வேண்டும். இன்று தள்ளியிருந்துவிட்டு நாளை ஹகீமை மாத்திரம் குற்றம் சொல்வதில் புண்ணியம் ஒன்றுமில்லை.
பொறுப்புள்ளவர்கள் பொறுப்பேற்பார்களா..?..

No comments:

Post a Comment