Translate

Saturday, 21 May 2011

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் செயலகச் செய்தி கையளிக்கப்பட்டது !

Rudra.jpgதமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் செல்வி ஜெயலிலாவுக்கு நாடுகடந்த தமிழிழ அரசாங்கத்தின் பிரதமர் செயலகத்தின் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. 
பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிபீடத்தில் ஏறியிருக்கும் செல்வி ஜெயலலிதா ஈழதமிழர் பிரச்சனை குறித்து கூறிய கூற்றுக்கள் பரவலாக பலரது கவனத்தைப் பெற்றிருக்கின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் செயலகத்தின் கடிதத்தின் முழுவிபரம் :

நீயு யோர்க் 16, 2011

மதிப்புக்குரிய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு!
நடைபெற்று முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியடைந்து தமிழ்நாட்டின் முதல்வராக, தாங்கள் பதவியேற்கும் இத்தருணத்தில் ஈழத் தமிழ் மக்கள் சார்பில் தங்களை வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பெருமகிழ்வடைகிறது.

ஈழத் தமிழர் தேசம்; தமது தாயகத்தை பாதுகாத்துக் கொள்ளவும், கௌரவமான வாழ்வை மீட்டெடுத்துக் கொள்ளவும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் நீதி கோரவும் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்ளை எதிர்த்து ஜனநாயக வழியில், அரசியல் இராஜதந்திர வழிமுறைகளில் போராடும் இன்றைய தருணத்தில் தங்களது வரலாற்று வெற்றி ஈழத் தமிழ் மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தினையும் தந்திருக்கிறது.
இலங்கைத்தீவில், ஈழத் தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு தமது அரசியல் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான அரசியல்வெளி முற்றாக மறுக்கப்பட்டு உள்ள ஒரு சூழலில் இலங்கைத்தீவுக்கு வெளியே புலம் பெயர்ந்து வாழும்; ஈழத் தமிழ் மக்களாகிய நாம் எமது அரசியல் பெருவிருப்பாகிய சுதந்திரத் தமிழீழ அரசினை உருவாக்கிக் கொள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம். ஒரு தேசத்துக்குரிய தகைமை கொண்ட ஈழத் தமிழினம் சிங்கள பேரினவாதத்தின் திட்டமிட்ட இனஅழிப்பு முயற்சியிலிருந்து நிரந்தரப் பாதுகாப்பினைப் பெற்றுக் கொள்வதற்கு தனியரசினை அமைப்பதைத் தவிர வேறு வழியேதுமில்லை என்பதனை வரலாறு எமக்கு உணர்த்தி நிற்கிறது. உலகெங்கும் சிதறிப்பரவி வாழும் ஒரு மில்லியன் எண்ணிக்கை கொண்ட ஈழத் தமிழ் புலம் பெயர் மக்களும் உலகின் 80 மில்லியன் தமிழ் மக்களும் ஒருங்குகூடிச் செயற்படுவதன் மூலம் இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ நாம் வழிவகுக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் நாம் செயற்பட்டு வருகிறோம்.
இலங்கைத் தீவில் சிங்கள இனவாதத்தின் திட்டமிட்ட இனஅழிப்பு நடவடிக்கைகளிலிருந்து தனது இருப்பினை பாதுகாத்துக்கொள்வதற்காக தமிழினம் நாளும் நடாத்தும் போராட்டத்தினை தாங்கள் நன்கறிவீர்கள். தமிழர் தாயகம் சிங்கள ஆக்கிரமிப்புப் ப+மியாக மாற்றப்பட்டிருப்பதையும், அங்கு தமிழர் வாழ்வு பெரும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்டிருப்பதையும் பல தடவைகள் வெளிப்படுத்தியும் உள்ளீர்கள். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது வெற்றி பெற்று தங்கள் கட்சியின் ஆதரவில் மத்தியில் அரசாங்கம் அமையும் சூழ்நிலை தோன்றின் ஈழத்தமிழரின் சுதந்திரமான பாதுகாப்பான வாழ்வுக்கு சுதந்திரத் தமிழீழம் அமைவதுதான் ஒரேவழி என மத்திய அரசுடன் வாதாடி அதனை வென்றெடுப்பேன் எனத் துணிச்சலுடன் தெரிவித்திருந்தீர்கள். தற்போது சட்டசபைத் தேர்தலில் பெருவெற்றி பெற்ற பின்னர் போர்க்குற்றவாளியான  சிறிலங்கா ஜனாதிபதியினையும் அவர்தம் தரப்பையும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவும்,
சிறிலங்கா மீது பொருளாதாரத் தடையினைக் கொண்டுவரவும் இந்திய மத்திய அரசினை வலியுறுத்துவேன் என மிக உறுதிபடக் கூறியுள்ளீர்கள். வேறு பல அரசியல் தலைவர்கள் போல் சொல்லொன்று செயலொன்றாக இல்லாமல் - கருத்தை துணிச்சலுடன் சொல்வது மட்டுமன்றி அதனை செயல்படுத்தும் ஆற்றலும் கொண்டவர் தாங்கள் என ஈழத் தமிழ் மக்கள் நம்புகிறார்கள். இதனால் தாங்கள் முதல்வராவதை மகிழ்வுடன் வரவேற்கிறார்கள்
இலங்கையில் சிங்கள இனவாதம் தமிழர்களை சமத்துவமாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கான வாய்ப்பெதனையும் கடந்த காலங்களில் விட்டு வைத்ததில்லை. இனியும் விட்டு வைக்கப் போவதில்லை. தமிழர்களின் அடையாளத்தை அழித்து, மெல்ல மெல்ல அவர்களை சிங்கள இனத்துடன் கரையப் பண்ணி இனக் கபளீகரம் செய்யும்  முயற்சியினை சிங்கள அரசு மேற்கொண்டு வருகிறது. ஈழத் தாயகத்தில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளின் ஊடாகத் தமிழரின் பாதுகாப்பான, கௌரவமான வாழ்வுக்கான ஏற்பாடு ஒன்றை எட்டுவதற்கு எடுக்கும் முயற்ககைளைச் சந்தர்ப்பம் பார்த்து உரிய நேரத்தில் சிங்கள இனவாதம் தனது இரும்புச் சப்பாத்துக்களால் துவம்சம் செய்து விடும். இந்த நிலை தமிழீழத் தனியரசினைத் தவிர வேறு மார்க்கம் ஏதுமில்லை என்பதனை உலகுக்கு முரசறைந்து சொல்லும்.
இத்தகைய ஒரு போக்கில் வரலாறு முன்னேறும் தருணத்தில் தாங்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருப்பது தமக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக அமையும் என ஈழத் தமிழ் மக்கள் கருதுகிறார்;கள். தாங்கள் முதல்வராக இருந்த போதுதான் ஈழத் தமிழ் மக்களின் கௌரவமான வாழ்வும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது என்பது வரலாற்றில் நிலைபெறும் வகையில் தாங்கள் செயற்பட வேண்டும் என்பதே எமது விருப்பாகும்.
தங்கள் தலைமையில் அமையும் தமிழக அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழ் மக்களுக்கும் வசந்தத்தைத் தரும்  காலமாக அமையட்டும் என வாழ்த்தி  நிற்கிறோம்.
நன்றி.
விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment