Translate

Tuesday, 18 September 2012

நபிகள் நாயகத்தை அவமதிக்கும் திரைப்படத்தை தடை செய்க - சீமான் அறிக்

நபிகள் நாயகத்தை சிறுமைபடுத்தும் படத்தை அமெரிக்கா தடை செய்ய வேண்டும்நாம் தமிழர் கட்சி

இஸ்லாமிய மக்களால் போற்றுதலுடன் கடைபிடிக்கப்படும் குர் ஆனை அருளிய இறைவனின் தூதர் நபிகள் நாயகத்தை சிறுமைப்படுத்தும் ஒரு திரைப்படத்திற்கு கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் வெளியிட அனுமதி வழங்கியுள்ள அமெரிக்க அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியதாகும்.
 
மானுடத்தின் வழிகாட்டிய ஏற்றுக்கொள்ளப்பட்ட பெருமகன் ஒருவரை விமர்சனத்திற்கு உட்படுத்துகிறோம் என்கிற பெயரில் புத்தகம் வெளியிடுவது, திரைப்படம் எடுப்பது என்பது போன்ற நடவடிக்கைகள் அனைத்தும் அடிப்படையில் உள்நோக்கம் கொண்டவை என்பது கடந்த காலங்களில் உறுதியாகியிருக்கிறது. உலக மக்கள் யாவரும் சகோதரத்துவ மனப்பான்மையுடன் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்று நோக்குடன், ஒரு பரந்துபட்ட, விரிவான ஒத்திசைவுடன் வாழ்வதற்கான பன்முகத்தன்மை கொண்ட புரிந்துணர்வு வலுப்பெற்றுவரும் ஒரு சூழலில், மக்களிடையே பிளவையும், மோதலையும், வெறுப்புணர்வையும் உருவாக்கும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளை கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அனுமதிப்பது என்பது நாகரீக சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத, நிச்சயமான உள்நோக்கம் கொண்ட செயலாகும்.

நாகரீகத்தின் உச்சாணிக்கொம்பில் இருப்பதாக பறைசாற்றிக்கொள்ளும் மேற்கத்திய நாடுகளில் இருந்துதான், மானுடத்தை பிளவுபடுத்தி மோதவிடும் இப்படிப்பட்ட படைப்புகள் வெளியாகின்றன. ஒரு பக்கம் இஸ்லாமிய நாடுகளின் வளங்களுக்காக அவைகளோடு அரசு ரீதியிலான நட்பு பாராட்டுவதும், மறுபக்கத்தில் அந்நாடுகளின் மக்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடிய படைப்புக்களை அனுமதிப்பதும் கடைந்தெடுத்த பொருளாதார சுய நல அரசியல் ஆகும். அதனை நன்கு புரிந்துகொண்டதனால்தான் உலக அளவில் அந்தத் திரைப்படத்திற்கு கடுமையான எதிர்ப்பு தோன்றியுள்ளது. இதனை அமெரிக்க அரசு புரிந்துகொண்டு, அந்தத் திரைப்படத்திற்கு தடை விதிப்பதுடன், இப்படிப்பட்ட படைப்புகள் எதிர்காலத்தில் வெளிவராமல் தடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்.

நாம் தமிழர் கட்சிக்காக,


செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

No comments:

Post a Comment