நல்லூர் பிரதேச சபை தலைவர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும் யாழ். மாவட்டத்தில் உள்ள பிரதேச மற்றும் நகர சபைகளில் இன்று காலை 10 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கண்டனப் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
யாழ்.மாவட்டத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள பிரதேச சபைகள்,நகர சபைகளில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
கொக்குவில் பகுதியில் வைத்து கடந்த 14 ஆம் திகதி நல்லூர் பிரதேச சபை தலைவர் ப.வசந்தகுமார் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டிருந்தார்.
இந்த தாக்குதல் சம்பவத்கைக் கண்டித்து, இனிமேலும் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்பதை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
அனைத்து பிரதேச சபைகள்,நகர சபைகளிலும் கூடிய உறுப்பினர்களும் பொது மக்களும் "வடக்கு கிழக்கு தமிழர் தாயகம்", "அரசியல் கைதிகளை விடுதலை செய்", "எமது நிலம் எமக்கு வேண்டும்", "மக்கள் ஆட்சியை மதித்து நட" , "வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு" போன்ற சுலோகங்களை தாங்கி, கோஷங்களை உரக்கக் கத்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தப் போராட்டம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழுள்ள வேலணை, நெடுந்தீவு மற்றும் ஊர்காவல்துறை ஆகிய பிரதேச சபைகளை தவிர அனைத்து பிரதேச சபைகளிலும் நடைபெற்றது.
போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிரங்கமாக அழைப்பு விடுத்த போதிலும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை என பிரதேச சபை தவிசாளர்கள் தெரிவித்தனர்.
எனினும் சில பிரதேச சபைகளுக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விட புலனாய்வாளர்களும் பொலிஸாருமே அதிகமானவர்களாக குவிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை கடந்த 17 ஆம் திகதி தவிசாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து யாழ். நகர்ப்பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment