Translate

Tuesday, 2 October 2012

உதட்டளவில் தமிழர் உள்ளத்தில் மஹிந்தர்;

உதட்டளவில் தமிழர் உள்ளத்தில் மஹிந்தர்; மு.காவின் செயல் பற்றி அரியநேத்திரன் கருத்து
news
 உதட்டால் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்திக் கொண்டு உள்ளத்தால் மஹிந்த ராஜபக்ஷவை திருப்திப்படுத்துகிறது முஸ்லிம் காங்கிரஸ் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தமிழ் இளைஞர்கள் செய்த தியாகமே முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரைப் பெறமுடிந்தது என்ற முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் கருத்தை வரவேற்றிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், இதனை அவர்கள் செயல்வடிவில் காட்டத் தவறிவிட்டனர் என்றும் தெரிவித்தார். 
மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கடந்த சனிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின்போதே இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துத் தொடர்பில் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
தமிழ், முஸ்லிம் இனங்கள் இணைந்த ஆட்சியொன்றைக் கிழக்கில் ஏற்படுத்துவதையே தமிழ்க் கூட்டமைப்பு விரும்பியிருந்தது. அதற்கான அழைப்பையும் நாம் மு.காவுக்கு விடுத்திருந்தோம். ஆனால், அந்தச் சந்தர்ப்பத்தை அடையமுடியாமல் போய் விட்டமை மிகக் கவலைக்குரிய விடயமே.
மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்திருக்கும் கருத்து உண்மையில் பாராட்டப்படவேண்டியது; வரவேற்கப்படவேண்டியது. ஆனால், அந்தக் கருத்தை அவரும், அவர் சார்ந்த கட்சியும் செயற்படுத்த முன்வராமை வேதனைக்குரிய விடயமாகும்.
உண்மையையும், யதார்த்தத்தையும் உணர்ந்துள்ள ஹரீஸ், அவரது மு.கா. கட்சியும் கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கு நிர்வாகத்தை முன்னெடுத்திருக்குமாயின், அது இரு இனங்களினதும் ஒற்றுமைக்கு மேலும் வலுச்சேர்த்திருக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்க மு.கா. முன்வரவில்லை என்பதற்காகவே அக்கட்சியை நாம் கடுமையாக விமர்சிக்கிறோம் என்று மு.கா. நினைத்துக்கொள்ளக்கூடாது. 
மு.கா. கூட்டமைப்பு இணைப்பைத்தான் நாங்கள் வலியுறுத்திக் கருத்துத் தெரிவிக்கிறோமே தவிர, அவர்களை நாம் தூற்றவில்லை. ஆட்சியமைக்கக் கிடைத்த ஓர் அரிய சந்தர்ப்பத்தை இழந்துவிட்டோமே என்ற ஆதங்கத்தைத்தான் நாம் வெளிப்படுத்துகிறோம்.
உண்மையை உணர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள ஹரீஸ் போன்றவர்கள் எதிர்காலத்திலாவது தமிழ் முஸ்லிம் இணைந்த ஒரு நிர்வாகத்தைத் தோற்றுவிக்க முன்வரவேண்டும். தீர்வு விடயத்தில் முஸ்லிம் மக்களையும் அரவணைத்துக் கொண்டே நாம் செல்வோம். என்றார். 

No comments:

Post a Comment