Translate

Thursday, 18 October 2012

இலங்கைப் போர்: இந்தியாவின் கையை மீறி நிகழ்ந்தது – விகடனுக்கு நிருபமா ராவ் செவ்வி

நிருபமா ராவ்... அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கு இந்திய அரசு அனுப்பும் 'நட்புத் தோழி’. அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றிவரும் நிருபமா ராவுக்கு உலகின் ஆற்றல்மிக்க 100 பெண்கள் பட்டியலில் இடம் உண்டு. தமிழர் பிரச்னைகளில் நம்முடைய வெளியுறவுத்துறை அக்கறை காட்டுவதே இல்லை என்ற குற்றச்சாட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெங்களூரு வந்திருந்த‌ நிருபமா ராவைச் சந்தித்தேன்.

''பெங்களூரு காலேஜ்ல படிக்கும்போது தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். இப்போ எல்லாம் மறந்துபோச்சு'' என்றவர், எந்தப் பிரச்னைக்கும் நிதானமாக எளிய வார்த்தைகளில் லாவகமாகப் பதில் சொல்லித் 'தப்பிக்கிறார்’.

''கெடுபிடியான டிப்ளமெட்டாகவே உங்களைப் பார்த்து வருகிறோம். உங்கள் இன்னொரு பக்கம் என்ன?'' 
''இந்தக் கேள்வி என்னை ஆச்சர்யப்படுத்துகிறது. இப்படி ஒரு கேள்விக்குப் பதில் சொல்லி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. புதுப் புது மனிதர்களையும் அவர்களின் கலாசாரங்களையும் பற்றித் தெரிந்து கொள்வது, புதிய இடங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வது தான் என் இதயத்துக்கு நெருக்கமான உலகம்.

ஆனால், இப்போது கடமைகளும் பொறுப்புகளும்தான் என் அடுத்த நொடியைக் கூடத் தீர்மானிப்பதால், வேறு எதையும் யோசிக்கக்கூட முடிவது இல்லை. நன்றாகக் கவிதை எழுதுவேன். ஷேக்ஸ்பியர் புத்தகங்களை எப்போதும் என் பையில் வைத்திருப்பேன். எப்போதேனும் நேரம் கிடைத்தால் புத்தகங்கள், கவிதை வாசிப்பு, பிளாக் எழுதுவது போன்றவை ஓரளவு என் ஏக்கத்தைச் சமாதானப்படுத்தும்.''

''அது என்ன... எந்த நாட்டுடன் பிரச்னை என்றாலும் இந்திய அரசாங்கம் உங்களையே பேச்சுவார்த்தைக்கு அனுப்புகிறது. நிருபமா ராவின் பலம் என்ன?''

''உலகின் அத்தனை பிரச்னைகளுக்கும் அறிவார்ந்த பேச்சுவார்த்தை மூலம் அமைதி காணமுடியும் என்ற என் அழுத்தமான நம்பிக்கையே காரணமாக இருக்கலாம்.''

''பேச்சுவார்த்தையின் மூலம் எல்லாப் பிரச்னைகளையும் தீர்க்க முடியும் என்றால், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான், சீனா ஆகியவை இந்தியாவுக்கு ஏன் விரோதமாகவே இருக்கின்றன?' 
''அது உண்மைதான். அதற்குப் பல காரணங்கள். முக்கியமானதாக நான் நினைப்பது அந்தந்த நாட்டு உளவுத்துறைகளின் தலையீடுதான். அதனை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். நல்ல முன்னேற்றம் கண்டுவந்த இந்திய - பாகிஸ்தான் நட்புறவில் 26/11 மும்பைத் தாக்குதல் சம்பவம் பெரும் தாக்கத்தையும் எதிர்பாராத அதிர்வையும் ஏற்படுத்தியது. பாகிஸ்தானோ, சீனாவோ யாருடனும் இந்தியா நட்பு பாராட்டத்தான் விரும்புகிறது. ஏனென்றால், நமது தேசம் காந்திய வழியிலேயே பயணிக்க விரும்புகிறது.''

''எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் உங்களுக்குப் பிடித்த ஒபாமாவே ஜெயிப்பாரா?''

''ஹா... ஹா... பெர்சனலாக பராக் ஒபாமாவை எனக்குப் பிடிக்கும். மற்றவர்களிடம் எப்படிப் பணிவுடன் பழகுவது என்பதை அவரிடம் கற்றுக்கொள்ளலாம். மற்றபடி அமெரிக்கத் தேர்தல் தொடர்பாக நான் கருத்து கூறுவது சரியல்ல.''

''விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக்கு உதவி செய்து, தற்போது இந்தியாவுக்குத் தெற்கேயும் சீனா வலுவாகக் காலூன்றி இருப்பது நமக்குப் பெரிய ஆபத்தாயிற்றே?''

''இந்தியாவைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பாதுகாப்புத்துறையும் வெளியுறவு அமைச்சகமும் 24 மணி நேரமும் உன்னிப்பாகக் கவனிக்கின்றன. இலங்கையின் வட பகுதிகளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய இடங்களுக்கு முதன்முதலாகச் சென்று வந்த வெளியுறவுச் செயலர் என்ற முறையில் சொல்கிறேன். அங்கே சீனாவின் ஆதிக்கம் இல்லை. சாலை போடுவதில் தொடங்கி வீடு கட்டித் தருவது வரை 500 கோடி ரூபாய் செலவில் மறு சீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவற்றை இந்தியாவே செய்து கொண்டிருக்கிறது.''

''வெளியுறவுத் துறைச் செயலராக இலங்கை சென்று தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினீர்கள். ஆனால், இன்னமும் மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கைக் கடற்படை நிறுத்தவில்லையே?'' 
''தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது துரதிருஷ்டவசமானது. 2009-10 காலகட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபக்ச, வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் வெளியுறவுத் துறைச் செயலர் சி.ஆர்.ஜெயசிங்க உள்ளிட்டோருடன் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

'இந்தியக் கடல் எல்லையில் இருந்து சர்வதேசக் கடல் எல்லை மிகவும் அருகில் 18 நாட்டிக்கல் மைல் தொலைவில் அமைந்திருப்பதே தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதற்குக் காரணமாக இருக்கிறது. அதற்காகச் சட்டப்படி வழக்குகளைப் பதியலாம். எக்காரணம் கொண்டும் தாக்கக் கூடாது’ என்று இந்திய அரசின் சார்பாகவும் 'இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இரட்டை மடிப்பு வலை, விசைப் படகுகள் ஆகியவை இலங்கையின் வட பகுதியில் நாட்டுப் படகுகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கும் பெரும்பாலான தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது என்பதோடு இலங்கையின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவும் இருக்கிறது’ என்ற இலங்கை அரசின் வாதத்தை முன்வைத்தும் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

ஆனால், ஒரு முடிவுக்கு வராமலேயே அந்தப் பேச்சுவார்த்தை பாதியில் நின்று விட்டது. தமிழக மீனவர்களின் சிக்கல்களையும் இல‌ங்கை மீனவர்களின் சிக்கல்களையும் தெளிவாகப் புரிந்து கொண்டு இரு நாட்டு அரசாங்கங்களும் மீனவ அமைப்புகளுடன் பேசி, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வடிவமைத்துக் கையெழுத்திட்டால் தான் தீர்வு காணமுடியும். இப்போது போர் முடிந்து இலங்கையில் அமைதி நிலவுவதால், அதற்கான சாத்தியங்கள் அதிகம்.''

''2009 இலங்கைப் போரில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என ஐ.நா. சபையே சொல்கிறது. போர் நடந்தபோது அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்ததும், போரில் இலங்கைக்கு இந்திய‌ அரசு உதவி செய்ததும் தார்மீக ரீதியில் சரிதானா?'' 
(கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே பேசத் துவங்குகிறார்) ''முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கை என்பது இந்தியாவின் நட்பு நாடு. அதனால், அவர்களுக்கு இந்தியா சில உதவிகள் செய்ததாக அறிகிறேன். அண்டை நாடு என்ற முறையில் இந்தியா, இலங்கைக்கு ஆலோசனை கூற முடியுமே தவிர, ஆணையிட முடியாது.

'விடுதலைப் புலிகள் உடனான போரில் அப்பாவிப் பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது. போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்’ என இந்தியாவின் பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் வேண்டுகோள் வைத்தனர். நானும் பாதுகாப்புச் செயலர் சிவசங்கர மேனனும் பல முறை அலரி மாளிகையில் இலங்கை அதிபரை இது தொடர்பாகச் சந்தித்துப் பேசினோம்.

'விடுதலைப் புலிகளுக்கு எதிராக மட்டுமே போர் நடக்கிறது. அப்பாவி மக்கள் மீது எங்களுக்கு என்ன கோபம்? விடுதலைப் புலிகள் மனித கேடயமாகப் பயன்படுத்திய சில நூறு அப்பாவிகள் மட்டுமே இறந்திருக்கிறார்கள்’ என ஒட்டுமொத்த ராஜபக்ச அமைச்சரவையே சொன்னது. அதனை இந்தியாவும் நம்பியது.''

''அப்படியென்றால், கொடூரமாகக் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான க‌ர்ப்பிணித் தாய்மார்களையும் பச்சிளங் குழந்தைகளையும்கூட விடுதலைப் புலிகள் என நம்பச் சொல்கிறீர்களா?'' 
(முகம் மாறுகிறது) ''நீங்கள் ஒரு பத்திரிகையாளராக இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை என நினைக்கிறேன். தமிழர் என்ற உணர்வின் காரணமாகக் கேட்கிறீர்கள். இலங்கைப் போர் முற்றிலும் இந்தியாவின் கையை மீறி நிகழ்ந்த ஒன்று. எனக்கு விமானத்துக்கு நேரம் ஆகிவிட்டது. பை... பை...!'' (என்றபடி எழுந்து நடக்க ஆரம்பிக்கிறார்)

''ஒரு பத்திரிகையாளனாக அல்ல... ஒரு மனிதனாகக் கேட்கிறேன். வெளியுறவுத்துறைச் செயலராக இல்லாமல் ஒரு பெண்ணாக நீங்கள் பதில் சொல்லலாமே மேடம்?''

''மரணம்... எல்லாவித‌ சமாதானத்துக்கும் சமாளிப்புக்கும் அப்பாற்பட்டது என்பதை இந்த உலகம் உணர வேண்டும். போரின்போது அப்பாவிகள் பாதிக்கப்படும் துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும்!''

- சொல்லிக்கொண்டே காரில் ஏறிச் சென்றுவிட்டார் நிருபமா ராவ். 

No comments:

Post a Comment