Translate

Friday, 30 November 2012

கூட்டமைப்பு ஒரு போதும் 13 ஐ நிராகரிக்கவில்லை; அரச ஊடகங்கள் பொய்ப்பிரசாரம் - சுமந்திரன்

news
தமிழர்களுக்கு முழுமையான அதிகாரப்பகிர்வை வழங்க அத்திபாரமாக அமையும் 13ஆவது திருத்தச் சட்டத்தை தாம் ஒருபோதும் நிராகரித்ததில்லை என உறுதிபடத் தெரிவித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

தமது நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்த பின்னரும் அரச ஊடகங்கள் தொடர்ச்சியாகப் பொய்ப் பிரசாரங்களைச் செய்வது விஷமத்தனமானது என்றும் குறிப்பிட்டது. 


"13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு, அதிலிருந்து அர்த்தமற்றதை நீக்கி அர்த்தமானதை உள்வாங்க வேண்டும். சகல மக்களுக்கும் சரியான முறையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால் மாத்திரமே இலங்கை ஐக்கிய ஒற்றுமையுடைய நாடாக மாறும்" என்று தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கொழும்பு அஸாத் சாலி நிலையத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற "அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்" என்ற இயக்கத்தின் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
கடந்த வாரம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தை தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு நிராகரிக்கிறது என நான் கருத்துத் தெரிவித்தேன் என்று அரச பத்திரிகைகள் பலவாறாக செய்தி வெளியிட்டிருந்தன.

இதனை மறுத்துக் கருத்துத் தெரிவித்த நான், நாடாளுமன்றத்திலும் எமது நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்தேன். 13ஆவது திருத்தச் சட்டத்தைத் தாம் நிராகரிக்கவில்லை எனத் தெரிவித்த பின்னரும் அரச அச்சு ஊடகங்கள்  தொடர்ச்சியாகச் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதனால் மீண்டுமொரு முறை 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் எமது நிலைப்பாட்டை நான் தெரிவிக்கின்றேன். 13ஆவது திருத்தச் சட்டமானது தமிழர்களுக்கான முழுமையான அதிகாரப் பகிர்வை நிர்ணயிக்கும் காரணி அல்ல. அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாததே இப்போது பிரச்சினையாக இருக்கிறது.

எனவே, அரசு அதனை உடனடியாக முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். அதிலிருந்து அர்த்தமற்றதை நீக்கி அர்த்தமுள்ளதை உள்வாங்கவேண்டும். 13ஆவது திருத்தச் சட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிக்கின்றது என்று அரச ஊடகங்கள் இனிமேலும் பொய்ச் செய்திகளை வெளியிடுமாயின் அது விஷமத்தனமான செயலாகும்.

வடக்குத் தேர்தல்
வட மாகாணசபைத் தேர்தல் அடுத்த வருடம் செப்ரெம்பர் மாதம் நடத்தப்படும் என அரசு கூறியுள்ளது. ஏன் அதனை உடனடியாக நடத்த முடியாது?

நாளை நாளை என்பது இல்லைஎன்றே பொருள்படும். அரசின் கடந்தகால நகர்வுகள் இதனையே எடுத்தியம்புகின்றன. 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலும், பொதுத் தேர்தலும் வடக்கில் நடத்தப்பட்டன. கடந்த வருடம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களும் நடத்தப்பட்டன. ஏன் வட மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு மட்டும் அரசு காலத்தை இழுத்தடிக்கிறது?

வட மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் தாம் நிச்சயமாகத் தோற்றுவிடுவோம் என்பதை நன்றாக அறிந்துள்ளதாலேயே அரசு அங்கு தேர்தலை நடத்தப் பின்னடிக்கின்றது.

இலங்கை ஐக்கிய ஒற்றுமையுடன் கூடிய நாடாக மாறவேண்டும் எனில், அனைத்து மக்களுக்கும் சரியான முறையில் அதிகாரம் பகிரப்படவேண்டும் என்று சுமந்திரன் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment