Add caption |
சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்னதாக காணாமல் மனநிலை பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் நேற்று(04) காரைநகரின் கண்டல் காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்டவர் சங்கானை சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 27வயதுடைய இராசதுரை கஜேந்தினி என அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்.காரைநகரில் உள்ள பாலகாட்டுப் பகுதியில் இலங்கை கடற்படையினரது படைமுகாமிற்கு அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் இருந்து இந்த இளம் யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதி மனநலம் பாதிக்கப்பட்டமையினால் தெல்லிப்பளை மனநல வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 6ஆம் திகதி அவர் வைத்தியசாலையிலிருந்து காணாமல் போயிருந்தார்.
காணமல் போன யுவதி காரைநகர் ஆலையடி கோவிலில் தனிமையில் இருந்ததை அவதானித்த அப்பகுதி மக்கள் கிராம சேவகரின் உதவியுடன் வட்டுக்கோட்டை காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
அங்கு சென்ற காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் யுவதியை அங்கிருந்து காரைநகர் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த வைத்திய சாலையில் குறித்த யுவதி மனநலம் குண்றியவர் என்பதால் அங்கு சிகிச்சை அளிக்க முடியாது எனக் கூறி திருப்பி அனுப்பியுள்ளார்.
இவ்வாறு யுவதியுடன் அங்கும் இங்கும் அலைந்துதிரிந்த காவல்துறை அதிகாரி யுவதியை அன்றிவு 1.30மணியளவில் காரைநகர் வலந்தலைச் சந்தியில் அநாதரவாக விட்டுவிட்டு சென்றுள்ளார். அன்றில் இருந்து குறித்த யுவதி தொடர்பில் எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இன்று மேற்குறித்த சனநடமாட்டம் அற்ற காட்டுப் பகுதிக்கு வேட்டைக்கு சென்றவர்களால் அங்கிருந்த பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. சடலத்தின் உள்ளாடைகள் எதுவும் இல்லாது உடல் தனியே மீட்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த யுவதி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கலாமென சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
யுவதியின் சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகாமையில் கடற்டையினரின் படைமுகாம் அமைந்துள்ளது. மேலும் குறித்த யுவதியின் சலடம் மீட்கப்பட்ட பற்றைக் காட்டிற்குச் செல்லும் வழியின் ஆரம்பத்தில் ஒரு கிணறு காணப்பட்ட போதும் அடர்ந்த பற்றைக்குள் உள்ள கிணற்றிற்குள் சென்று யுவதி விழுந்து தற்கொலை செய்வதற்கும் வாய்ப்பில்லை.
இதுதவிர சடலத்தை மீட்கும் போது பற்றைகள் வெட்டப்பட்ட பின்னரே கிணற்றுக்குள் இருந்த சடலத்தினை மீட்க முடிந்துள்ளது. இந்நிலையில் யுவதி கொலை செய்த பின்னரே அங்கு கொண்டு வந்து போடப்பட்டுள்ளமை; தெளிவாக தெரிகின்றது.
இதுமட்டுமல்லாமல் யுவதியின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் கடற்டையினரைத் தவிர பொது மக்கள் நடமாடுவதில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே காரைநகரில் மனநிலை பிறழ்வுக்குள்ளான யுவதி நடமாடும் வர்த்தகர்கள் இருவரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமொன்று காரைநகரில் நடந்திருந்தது. தொடர்ந்து மண்டைதீவில் சிறுமி பாலியல் வல்லுறவின் பின்னர் கொலை செய்யப்பட்டு இருந்தார். நெடுந்தீவிலும் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவின் பின்னர் கொலையென தீவு பகுதி அதிர்ந்து போயுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment