Translate

Wednesday, 8 June 2011

CTF - PRESS RELEASE - தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கட்கு

CTF - PRESS RELEASE   08.06.2011

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கட்கு

சிறீலங்கா அரசை வழிக்குக்கொண்டுவர, அதன் மீது, இந்திய மத்திய அரசு ஏனைய நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடையை விதிக்கவேண்டும் என வலியுறுத்தும் வகையில், தமிழக சட்டசபையில், தனித்தீர்மானம் கொண்டுவந்து அதனை ஏகமனதாக நிறைவேற்றியமைக்கு, புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் சார்பில், எங்கள் இதயபூர்வமான நன்றியறிதலை இதன்கண் உங்களுக்கும் தமிழக அரசுக்கும் தமிழக மக்களுக்கும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.


நீண்டநெடுங்காலமாக, இலங்கைத்தீவில் தமது தாயக பூமியில் வாழும் தமிழீழ மக்கள், தொடர்ச்சியான இனப்படுகொலைக்கும், இனவதைக்கும், இன ஒதுக்கலுக்கும் சிங்களக்கொடுங்கோன்மை ஆட்சியாளர்களால் உள்ளாகி வருகின்றமை, தட்டிக்கோட்பார் இன்றி, தடுத்து நிறுத்துவார் இன்றி நீதிநியாயங்களுக்கு அப்பால் நீண்டுகொண்டே செல்கின்றது.

இறுதியாக முள்ளிவாய்க்காலில், நாற்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக, ஐ.நா.நிபுணர்குழு அறிக்கை தெரிவிக்கின்றது. பல்லாயிரக்கணக்கானோர் இன்னும் காணாமல்போனோர் பட்டியலிலேயே உள்ளனர். சிங்கள அரசின் இரகசிய சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டவர்களின் விபரங்கள் எதுவுமே வெளியிடப்படவில்லை.
போரில் கொல்லப்பட்டும், காணாமல்போயும், சிங்களச் சிறைகளில் அடைக்கப்பட்டும் போயுள்ள தங்களின் தந்தையரை, தாயாரை, சகோதரர்களைப், பிள்ளைகளை, கணவரை நினைத்து நினைத்து வெம்பி நொந்து அழும் ஒரு கைவிடப்பட்ட தமிழ்ச் சமூகமே தமிழீழம் எங்கும் விரவிக்கிடக்கிறது.
இழப்புக்களின் வலியையும், அவமானங்களையும், அச்சுறுத்தலையும், அடக்குமுறையையும், அடாவடித்தனங்களையும் எதிர்கொண்டபடிதான், ஒவ்வொரு தமிழ்ப் பிரைஜையின் காலைப்பொழுதும் இலங்கைத்தீவில் விடிகின்றது என்பதே யதார்த்தம்.
நாம் உலகத்தால் கைவிடப்பட்டோம் என்ற வேதனையுடன்தான், தமிழ் மக்கள் இந்த உலகத்தை வெறுப்புடன் பார்க்கின்றனர். அதிலும், இந்திய மத்திய அரசு குறித்தும், தமிழகத்தின் முன்னைய அரசு குறித்தும் ஈழத்தமிழ் மக்களும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும், மிகமோசமான வேதனையான அனுபவத்தைக் கொண்டுள்ளனர். நம்பமுடியாத ஏமாற்றத்தைக் கொண்டுள்ளனர். தமிழகத்தை ஏக்கத்துடன் பார்த்து ஏங்கிய எங்கள் இதயங்கள் மீது பச்சைத் துரோகம் என்ற கொடியஈட்டி சொருகப்பட்ட வேதனையை, துடிப்பை இன்றும் உணருகின்றோம்.
கடந்த தேர்தல் பரப்புரைகளில், தமிழீழம் குறித்த உங்கள் கரிசனைகள், கருத்துக்களால், நாங்கள் எங்கள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டோம்.
நீங்கள் முதலமைச்சனானபோது வெளியிட்ட கருத்துக்களால், மீளவும் நாங்கள் உயிர்ப்புற்றதாய் உணர்ந்தோம்.
தற்போது நீங்கள் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள், நாங்கள் கைவிடப்படவில்லை என்ற உணர்வை எங்களுக்குள் ஏற்படுத்துகின்றது.
புதுவிதமான நம்பிக்கை மூச்சு உங்களின் வாயிலாக ஏற்பட்டிருக்கின்றது.

உலகத் தமிழினத்தின் நம்பிக்கையைப் பெற்ற தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கின்ற உங்களிடம், பாதிக்கப்பட்ட தமிழினம் உரிமையோடு எதிர்பார்ப்பது, அவர்கள் தம் உரிமை வாழ்வை மீட்க உதவுவீர்கள் என்பதே.

இத்தனை ஆண்டு காலமாக, உலகத்தை ஏமாற்றி வந்த சிறீலங்கா அரசு, தற்போதும் அந்த வழிவகைகளையே கைக்கொள்ளும். தமிழ் இனத்தைத் தொடர்ந்து அடிமைகளாக வைத்திருப்பதே அதன் நோக்கம்.
இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்காமல் இழுத்தடித்து ஏமாற்றுவதும், போர்க்குற்றம் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேசப் பரிந்துரைகளை நிராகரித்து, முரண்டுபிடிப்பதும், அதன் போக்கை தெளிவுபடுத்தப் போதுமானது.
சிங்கள ஆட்சியாளர்களின் செயற்பாடுகள், தமிழர்கள் சரிசமனாக மதிக்கப்படமாட்டார்கள் என்பதையும், நடத்தப்படமாட்டார்கள் என்பதையும், சிங்களத்தின் ஆட்சியில் தமிழர்களுக்கு நீதி நியாயம் கிடைக்காது என்பதையும் தெட்டத் தெளிவாக்குகின்றன.
இலங்கைத்தீவில், இரு தேசிய இனங்களும் சேர்ந்து வாழக்கூடிய சூழ்நிலைகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன என்கின்ற உண்மையும் பட்டவர்த்தனமாகப் புலப்பட்டுநிற்கின்றது.
இந்திய அரசையும், உலக அரசுகளையும், அணுகும் தகுதியும், தமிழ் மக்கள் சார்பாக பேசும் உரிமையும் கொண்ட தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களே, உங்கள் காலத்தில், ஈழத்தமிழ் இனம் விடுதலை பெற்ற இனமாக விளங்க வழிவகை செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்.

நன்றி.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

No comments:

Post a Comment