Translate

Tuesday 19 July 2011

வெற்றிலைச் சின்னத்தோடு வலம்வரும் சிங்களத்தின் கரங்களில் தமிழ் தேசிய அரசியல் செல்லக் கூடாது - இதயச்சந்திரன்

வெற்றிலைச் சின்னத்தோடு வலம்வரும் சிங்களத்தின் கரங்களில் தமிழ் தேசிய அரசியல் செல்லக் கூடாது இதயச்சந்திரன்
நிரந்தர தீர்விற்கான தேர்தல் அல்ல இது.
ஆயினும் ,சிங்களத்தைப் பொறுத்தவரை, தாயக அரசியல் தளத்தினை கையகப்படுத்த முனையும் தேர்தலே இது..
இன்று...வெற்றிலைச் சின்னத்தோடு வலம்வருகிறது சிங்களம். வேட்டி, சேலைகள் சகிதம் வாக்கு வேட்டைக்கு வருகிறது. நாயின் தலைகளை வாசலில் வீசி, அச்சுறுத்தியபடி வருகிறது பேரினவாதம். வெற்றிலைக்குப் புள்ளடி போட்டால், 'அபிவிருத்தி' செய்வோமென பேரம்பேசுகிறது.
யாருடைய பணத்தில் அபிவிருத்தி செய்யப் போகிறார்கள்?
சொந்தப் பணத்திலா...இல்லை ...திவாலாகி இருக்கும் திறைசேரியில் இருந்தா?.
வட- கிழக்கின் அபிவிருத்திக்கு, அதன் உட்கட்டுமானத்திற்கு, உலக வங்கி வழங்கிய
நிதியில் இருந்தா?....
கடந்த இரண்டு வருடமாக, இந்த திமிர் பிடித்த அரசு என்ன செய்தது?
நுரைச்சோலையில் அனல் மின்நிலையத்தை கட்டி முடித்தது.
அம்பாந்தோட்டையில்,ஒரு பில்லியன் டொலர் செலவில் துறைமுகத்தை நிர்மாணித்தது.
கொழும்பு அபிவிருத்திக்கு சீனாவிடம் கடன் வாங்கியது.
தமிழர் தாயக மண்ணில் என்ன செய்தது இந்தச் சிங்கள தேசம் ?
புத்தரின் சிலைகளை நிறுவியதும், இராணுவத் தளங்களை கட்டியதும்,
கரையோரக் காணிகளை ,பன்னாட்டு-உள்நாட்டு பெருமுதலைகளுக்கு விற்றதும்,
இடம் பெயர்ந்த தமிழ் மக்களை நடுத்தெருவில் விட்டதுமே...
இந்தப் பேரினவாத சிங்களம் செய்த சாதனைகள்.
சகல வளங்களோடும், படைபரிவாரங்களோடும், இந்தச் சிங்களம் ஏன்
குடாநாட்டை முற்றுகையிட்டுள்ளது?
வன்னி மண்ணில் எம்மினத்தை கருவறுத்தவர்கள், இன்று ஏன் உங்கள் முன் நல்லவர்
போல் வேடமிட்டு வருகின்றார்?
எமக்கு வாக்களிக்காவிட்டால், உமக்கு எதுவும் செய்யமாட்டோமென அச்சுறுத்தும்
இந்தப் பேரினவாதக் கூட்டம், இன்று யாழ் குடாவில் என்ன செய்கிறது?
நாவற்குழியில் ஆரம்பித்த நிலஆக்கிரமிப்பு, தீவெங்கிலும் வேகமாகப் படர்கிறது.
அடிக்கொரு புத்தர் சிலையை யாழ் குடாவில் நிறுவி, கலாச்சார அடியழித்தலை
ஆரம்பித்து வைத்துள்ளது சிங்களம்.
ஹத்துரு சிங்காவும், அரச அதிபர் இமெல்டாவும் ஆட்சி செய்யும் மண்ணில்,
மக்கள் ஜனநாயகத்தை எப்படி எதிர்பார்ப்பது?
'நீ தமிழனுமில்லை..மனிதனுமில்லை' என்று, வெற்றிலைச் சின்னத்தின் குறுநில
மன்னனைப் பார்த்துக் கேட்கிறார் மலையகத் தமிழன் மனோ கணேசன்..
எம் மக்களை நிர்வாணமாக்கியவர்களே, ஆடைகளோடு வருகின்றார்களென
மாவை கொதித்தெழுகின்றார்.
எமது மக்கள் சுரண்டப்பட்டு அநாதையாக்கப்படுகின்றார்கள் என்று மனம் வெதும்புகிறார் சிறிதரன்
கிழக்கைப் போன்றே, வடக்கு மக்களும் தமிழ்த் தேசியத்தை நிலைநாட்டுங்கள் என்கிறார் அரியநேத்திரன்.
உங்கள் அரசியல் உரிமைகளை விட்டுக் கொடுக்காதீர்கள் என்கிறார் தோழர் விக்ரமபாகு.
அபிவிருத்தி மன்னர் கேபியின் கும்பலும், குடாநாட்டில் களமிறங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
சக்கரவர்த்தியைக் காப்பாற்ற , குறுநில மன்னர்கள் படும்பாட்டினை புலம்பெயர் நாட்டிலும் காணலாம்.
இது நாட்டில் நடைபெறும் வழமையான தேர்தல் என்று, அசமந்தப் போக்கில் மக்கள் இருந்துவிடக் கூடாது.
போர்க்குற்றச்சாட்டிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவும், தமிழர் அரசியல் தலைமையைக் கைப்பற்றிக் கொள்ளவும்,
இத் தேர்தலை சிங்கள தேசம் பயன்படுத்துகிறது.
இதில் அவர்கள் வெற்றி அடைந்தால், தமிழ்மக்கள் தம்மோடு இருப்பதாக உலகிற்கு சொல்வார்கள்.
கிராம சபை, மக்கள் சபை, பஞ்சாயத்துச் சபையென்று எதையோ முன்வைத்து, இதுதான் மக்கள்
விரும்பும் தீர்வென்று சொல்வார்கள்.
1 . தீர்வொன்றை முன் வைத்து, போர்க்குற்றச் சாட்டிலிருந்து தப்புவது
2 . அது சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வாக இருக்க வேண்டும்.
3 . அவ்வாறான தீர்வு குறித்துப் பேசும்போது , அதில் தமிழ் தேசிய அரசியல் சக்திகள் இருக்கக் கூடாது.
4 . தமிழர் தரப்பாக, தமது குறுநில மன்னர்கள் இருந்தாலே போதும்.
இதற்கு முதலில் தமிழர் தாயக அரசியலை கைப்பற்ற வேண்டும்.
அதற்காகவே இத்தனை பெரிய படைபரிவாரங்க்களோடு மகிந்தரே களத்தில் இறங்கியுள்ளார்.
இதில் மகிந்தர் வெற்றி பெற்றால் [?] , கூட்டமைப்பு, உலகத் தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்,
தமிழக அரசு, போன்றவற்றின் எந்தக் குரலும் சர்வதேச மட்டத்தில் எடுபடாமல் போகும்.
ஜனநாயகத்தை மதிக்கிறோமென, மகிந்தரின் சொல்லைக் கேட்டு, கைகுலுக்கிச் செல்லும் இந்த சர்வதேசம்.
ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்வதே ஒரே வழி.
இதன் பின்விளைவுகளையும் , பேராபத்தையும் மக்கள் புரிந்து கொள்வார்களாக.
இதயச்சந்திரன்
__._,_.___

No comments:

Post a Comment