Translate

Thursday 22 September 2011

ஐநா மனித உரிமைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர கனடா முயற்சி?


ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் 18வது மனித உரிமைக் கூட்டத்தொடரில் சர்வதேச நாடுகளும், அனைத்துலக மனித உரிமை அமைப்புகளும் கொடுத்துவரும் கடும் அழுத்தங்கள் காரணமாக, சிறிலங்கா அரசாங்கம் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றது.
சிறிலங்கா அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் விதத்தில் சிறிலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற தீர்மானமொன்றை கொண்டுவருவதற்கான முயற்சியில் கனடா இறங்கியுள்ளது.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டமொன்று இன்று ஜெனிவாவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 47 உறுப்பு நாடுகளில் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகள் பங்குபற்றியுள்ளன.
வியாழக்கிழமை, கனடா கொண்டுவரமென எதிர்பார்க்கப்படும் தீர்மானம், மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு, பின்னர் வாக்கெடுப்பிற்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும், உறுப்பு நாடுகளால் முன்னெடுக்கப்படும் இதுபோன்ற முயற்சிகளைத் தடுப்பதற்கு, சிறிலங்கா பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா, அல்ஜீரியா போன்ற தனது ஆதரவு நாடுகளூடாக இந்த பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சிகளை சிறிலங்கா மேற்கொண்டு வருவதாகவும் நம்பப்படுகிறது.
இவ்வாண்டு இறுதியில் வெளியிடப்படும் என கூறப்படும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் வரை ஐ.நா உறுப்பு நாடுகள் இதுபோன்ற தீர்மானங்களுக்கு ஆதரவளிக்க வேண்டாமென சிறிலங்கா கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.
கனடாவின் முயற்சிகளுக்கு சுவிற்சலாந்து, போலந்து போன்ற நாடுகள் வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்துள்ள போதும், வாக்கெடுப்பு சவால் நிறைந்த ஒன்றாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.
கனடாவின் முயற்சிகளுக்கு மனிதவுரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற மனித உரிமை அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இத் தீர்மானத்திற்கு ஆதரவு தேடும் முயற்சிகளில் ஐ.நா மனிதவுரிமைகள் கூட்டத்தொடரில் பங்கேற்றுவரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்
http://www.tamilwin.com/view.php?22Gp7bc3BI34eY29204jQCdd3Qjb20j923e40LLcb2pGE2

No comments:

Post a Comment