Translate

Monday 26 September 2011

யாருக்கும் வெட்கமில்லை

தமிழ்நாட்டில் அரசியல் கூட்டணி என்பது பெரும்பாலும் கொள்கை, கோட்பாடு, செயல்திட்டம், கருத்தொற்றுமை என ஆக்கப்பூர்வமான பல காரணிகளின் அடிப்படையில் அமையும்.



 அந்தக் கூட்டணியானது தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி, அடுத்த தேர்தல் வரும் வரையில் ஒருவரையொருவர் பற்றிக் கொண்டும், சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டும், சரியோ, தவறோ கொண்ட கூட்டணிக்காக ஒருவரையொருவர் ஏந்திக் கொண்டும் மக்கள் மன்றத்தில் காட்சி கொடுத்துக் கொண்டு இருப்பார்கள். அது ஒரு காலம்.



 அரசியல் பரிணாம வளர்ச்சியோ என்னவோ, அண்மைக் காலமாக "அரசியல் கூட்டணி' என்ற அந்த ஆக்கப்பூர்வ, ஆத்மார்த்தமான உறவு மாறி "தேர்தல் உடன்பாடு' என்ற ஒரு வர்த்தக ரீதியிலான சொல்லாடல் மூலம் கட்சிகள் தேர்தல் களத்தில் இறங்கி, மக்களைச் சந்தித்து வருகின்றன.
 இந்த "உடன்பாடு' என்பது கொண்ட கொள்கையின் அடிப்படையில் அல்லாமல் "பரஸ்பர ஆதாயம்' என்ற நோக்கத்தின் அடிப்படையில் கையெழுத்தாகிறது. அதில் அரசியல் சார்ந்த சுயலாபக் கணக்கு மட்டுமே பிரதானம். இந்த "உடன்பாடு' எப்போது ஏற்படும், எப்போது முறியும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்பதுதான் தமிழக மக்கள் இதுவரையில் கண்டு வரும் அரசியல் காட்சிகள்.




 "தேர்தல் உடன்பாடு' மூலம் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி, அவரவர் விருப்பங்கள் நிறைவேறாவிட்டாலோ அல்லது "உடன்பாடு' மூலம் நஷ்டம் ஏற்பட்டாலோ அடுத்த கணமே அந்த "உடன்பாடு' முறிந்து விட்டதாக இரு தரப்பினருமே வெட்கத்தைவிட்டு அறிவித்து விடுகின்றனர். அடுத்த "உடன்பாட்டு'க்கும் தயாராகி விடுகின்றனர்.



 இதையும் தமிழக மக்கள் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டவர்களே அடுத்த ஆறு மாதத்தில் "புதிய உடன்பாடு' செய்து கொண்டு ஜனநாயக மேடையில் ஏறி, எதிரில் இருப்பவர்கள் ஏமாளிகள் என நினைத்துக் கொண்டு காட்சிகளை அரங்கேற்றி வருகின்றனர்.
 இப்போது அதையும் தாண்டி "தேர்தல் உடன்பாடு' என்பது அந்தத் தேர்தல் வரையாவது நீடிக்குமா? என ஐயம் கொள்ளும் அளவுக்குத் தமிழக அரசியல் களத்தில் நாள்தோறும் புதிய புதிய காட்சிகள் அரங்கேறி வருகின்றன.




 ஆம், நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக, தேமுதிக, இடதுசாரிக் கட்சிகள் என சில கட்சிகள் "தேர்தல் உடன்பாடு' செய்து கொண்டன. அந்த உடன்பாடு தேர்தல் முடியும் வரையாவது நீடிக்குமா என்ற கேள்வி எழும் வகையில் நிகழ்வுகள் இருந்தன. அதிமுகவுடன் "தேர்தல் உடன்பாடு' செய்து கொண்ட கட்சிகள் எல்லாம் வேறு ஓர் இடத்தில் ஒன்றுகூடி "புதிய உடன்பாடு' காண முயற்சித்தன. வெளியில் வீர முழக்கமிடும் கட்சிகள், தனி அறையில் அமர்ந்து சிந்திக்கும்போதுதான் அவர்களது நோக்கம் என்ன? பலம் என்ன? பலவீனம் என்ன? என்பது உறைக்கும் போலும்.



 தலைதெறிக்க வெளியே ஓடிவந்து கேட்டதை விட்டுவிட்டு "அம்மா' கொடுத்ததை வாங்கிக் கொண்டு அரிதாரம் பூசிக் கொண்டார்கள். யார் செய்த புண்ணியமோ, ஜனநாயகம் காப்பாற்றப்பட்டது. இந்த நவீன காலத்து அதிரடி அரசியல் அத்துடன் முடிந்தது என்று பார்த்தால் இப்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது.



 சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்த கையோடு உள்ளாட்சித் தேர்தல் வந்துள்ளது. பழைய கூட்டாளிகள் தொடருவார்கள் என பார்த்தால், திமுக கூட்டாளிகள் ஒட்டிக் கொண்டது போதும் எனக் கூறிவிட்டு வெட்டிக் கொண்டனர்.



 அதிமுக தனது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து "சாதனை" படைத்துள்ளது. அந்த "சாதனை' கூட்டணிக் கட்சிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அது ஒருபுறம் இருக்கட்டும். தங்களை அசைக்க முடியாது, அழிக்க முடியாது என வலிமையைப் பறைசாற்றிக் கொள்ளும் அரசியல் கட்சிகள், ஜனநாயகத்தில் மக்களைத் தனியாகச் சந்திக்கத் திராணியற்றுத்தான் கூட்டணி, தேர்தல் உடன்பாடு என்ற மாய்மால வார்த்தை கூறி மக்களை ஏமாற்றுகின்றன.


 அந்தக் கூட்டணி அல்லது தேர்தல் உடன்பாடு என்று வந்த பிறகாவது அவர்கள் ஒரு வகைப்பாட்டில் நிற்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. "மாற்றம்' வரும் என்று எண்ணி வாக்களித்த மக்களுக்கு மயக்கம் வரும் நிலையைத்தான் அரசியல் கட்சிகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த ஆபத்தான அசிங்கத்தைச் செய்வதில் பெரிய பங்குதாரருக்கும் வெட்கமில்லை, சிறிய பங்குதாரருக்கும் வெட்கமில்லை. மொத்தத்தில் யாருக்கும் வெட்கமில்லை!

No comments:

Post a Comment