புலிகளை அவர்களின் இடத்தில் வைக்க வேண்டும் என்று நோர்வேயிடம் இந்தியா கூறியதாக, தோல்வியடைந்த சிறிலங்காவின் சமாதான முயற்சிகள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நோர்வே அரசின் பணிப்பின் பேரில் தயாரிக்கப்பட்ட 208 பக்கங்களைக் கொண்ட, ‘அமைதிக்கான அடமானங்கள்‘ (Pawns of Peace) என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது.
2003-2004 இல் சமாதான முயற்சிகள் மெதுவாக அவிழத் தொடங்கிய போது கொழும்புக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுக்களை இந்தியா அனுதாபத்துடன் அணுகியதாக இந்த அறிக்கை கூறியுள்ளது.
ஆனால் 2004இல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழர்களின் அபிலாசைகளை பாதுகாப்பதாக கூறிக்கொண்டாலும், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினது இராணுவத் தீர்வு முயற்சிக்கு எதிராக எந்தவொரு அழுத்தமும் கொடுக்கவில்லை என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தனிப்பட்ட சந்திப்புகளில் நோர்வேயை “புலிகளின் நண்பர்“ என்று இந்தியா விமர்சித்ததாகவும், “புலிகளை அவர்களின் இடத்தில் வைக்க வேண்டும்“ என்று கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா படைகளுக்கு இந்தியா ரேடர்கள், புலனாய்வுத் தகவல்களை வழங்கியது.
சிறிலங்கா படைகளுக்கு இந்தியா ரேடர்கள், புலனாய்வுத் தகவல்களை வழங்கியது.
சிறிலங்காவுக்கு தாக்குதல் போர்த்தளபாடங்களை வழங்குவதில்லை என்ற கொள்கையை புதுடெல்லி கடைப்பிடித்தாலும், வேறு எவரிடம் இருந்தும் ஆயுதங்களை சிறிலங்கா கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
விடுதலைப் புலிகள் மீதான இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு, சிறிலங்காவுக்கு போரை நடத்துவதற்கு உந்துதலாக அமைந்தது.
2004இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, விடுதலைப் புலிகளால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட ராஜிவ்காந்தியின் துணைவியார் சோனியாகாந்தி, இந்தியாவின் சக்திவாய்ந்த நபராக மாறியது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2008 இறுதியில் பொதுமக்களின் இழப்புகளை மட்டுப்படுத்துமாறு புதுடெல்லி கோரிய போதிலும் கூட, இராணுவ நடவடிக்கையைத் தொடர்வதற்கும், விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கும் ஆதரவு வழங்குவதில் இந்திய அரசாங்கம் மிகவும் தெளிவாக இருந்தது.
விடுதலைப் புலிகளின் இறுதி நாட்கள் பற்றி குறிப்பிடும் இந்த அறிக்கையில், புலிகள் மிக நெருக்கமாக சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு கொழும்பு மிகமிக குறைந்தளவு ஆர்வமே காட்டியது.
போரின் இறுதியில் விடுதலைப் புலிகள் தப்பித்துக் கொள்வதற்கு இந்தியா ஆர்வம் காட்டியிருக்குமா என்பது சந்தேகமாகவே இருந்தது.
சமாதான முயற்சிகளில் இந்தியா கூடுதல் பங்கு வகிக்குமாறு 2007இல் நோர்வே தொடர்ச்சியாக வலியுறுத்திய போதும் புதுடெல்லி அதை நிராகரித்து விட்டது.
இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்த போது தாக்குதலை நிறுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுக்கப் போவதில்லை என்பதும் தெளிவாகியது.
போரின் இறுதிக்கட்டத்தில் இந்தியாவில் நடந்த பொதுத்தேர்தல் குறித்து சிறிலங்கா கவலை கொண்டிருந்தது.
காங்கிரஸ் கட்சி தூக்கியெறியப்பட்டு வேறு யாரும் பதவிக்கு வந்தால் புலிகளுக்கு உதவி கிடைக்கலாம் என்ற கவலை சிறிலங்காவுக்கு இருந்ததாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பு கொண்டு, முன்வரைவு அறிக்கையை ஏற்று ஆயுதங்களை கீழே போட இணங்குமாறு ஆலோசனை கூறியதாகவும், ஆனால் இந்த நகர்வு புலிகள் ஆதரவு அரசியல்வாதியான வைகோவுக்கு கசிந்ததும், இது காங்கிரசின் தந்திரம் என்று நிராகரிக்குமாறும், தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் புலிகளை மீட்கும் என்றும் அவர் உறுதி கூறியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அது நடக்கவில்லை. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தபோது புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தார் என்றும் நோர்வேயின் மீளாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment