Translate

Friday, 11 November 2011

புலம்பெயர் தமிழர்கள்மீது முப்படைகளையும் ஏவிவிட்டுள்ள சிங்கள அரசு!


புலம்பெயர் தமிழர்கள்மீது முப்படைகளையும் ஏவிவிட்டுள்ள சிங்கள அரசு!

    அண்மையில், கனடாவிலிருந்து தமிழீழம் சென்று திரும்பிய ஒரு யுவதி என்னிடம் கேட்டார், அண்ணை இருக்கிறார் என்று நம்புகிறீர்களா? என்று. 

    திடீரென் அவர் அந்தக் கேள்வியைக் கேட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அந்த நம்பிக்கையில்தான் தமிழ்த் தேசியம் இப்போதும் பலமாக நிற்கிறது. அந்தப் பலத்தை இழப்பதற்கு யார்தான் தயாராக இருப்பார்கள். நான் அண்ணை இருக்கிறார் என்பதை முழுமையாக நம்புகின்றேன் என்றேன். 

    தமிழீழத்தின் அத்தனை திசைகளிலும் வாழும் மக்களும் அந்த நம்பிக்கையில்தான் தங்களை உயிர்ப்பித்துக்கொள்கின்றார்கள். அந்த நம்பிக்கையுடன்தான் அடுத்த பொழுதை அவர்கள் எதிர்கொள்கின்றார்கள் என்று அவர் கூறினார்.

    அண்ணை இருக்கிறார், அவர் வரவேண்டிய பொழுதில் வருவார் என்ற நம்பிக்கைதான் இப்போது சிங்கள தேசத்திற்குச் சவாலாக உள்ளது. சூரியன் எப்படித் தன் கோள்களை கட்டுக்குள் வைத்துச் சுழலச் செய்கின்றதோ, அப்படியே சூரியதேவனும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களைத் தமிழ்த் தேசியத்தின் கட்டுக்குள் வைத்து இயக்குகின்றார். 

    தமிழகத்தின் பழனி நகராட்சிப் பகுதியில் சுயேச்சையாகப் பொட்டியிட்டு வென்ற சோலை கேசவன், கடந்த 25ம் தேதி நகர மன்ற உறுப்பினராக பதவி பிரமானம் எடுக்கும் போது, 'புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் வளர்த்து உருவாக்கப்பட்ட, உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவரான தம்பி பிரபாகரன் அவர்களின் விடுதலை வேட்கையின் மீது ஆணையாக நான், எனக்கு வாக்களித்த மக்களுக்கும், இந்த நாட்டுக்கும், நாட்டின் இறையாண்மைக்கும் கடமை தவறாமல் பணியாற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன்' என்று பிராமானம் எடுத்துள்ளதை இப்படித்தான் புரிந்து கொள்ள முடிகின்றது. 

    தமிழ்த் தேசிய கருத்துச் சிதைவு எந்தத் திசையிலிருந்து வந்தாலும், அதைத் தடுத்து நிறுத்தும் மா சக்தியாகத் தேசியத் தலைவர் இருப்பதைப் புரிந்து கொண்டே சிங்கள தேசம் முள்ளிவாய்க்காலில் வைத்து அததை; தகர்க்கும் நாடகத்தை அரங்கேற்றியது. தமிழீழ விடுதலையின் வித்துக்களாக அந்த மண்ணில் விதைக்கப்பட்ட மாவீரர்களது துயிலும் இல்லங்களை அழித்தது. நினைவுச் சிற்பங்களைத் தகர்த்தது. ஆனாலும், விடுதலைப் புலிகளையும், தேசியத் தலைவர் அவர்களையும் தமிழீழ மக்கள் மனங்களிலிருந்து பறித்தெடுத்துவிட முடியவில்லை. 

    'விடுதலைப் புலிகள் சாவது இல்லை' என்ற தத்துவம் முள்ளிவாய்க்காலின் பின்னரும் சிங்கள தேசத்திற்குத் தொடர் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. விடுதலைப் புலிகளது கட்டமைப்புக்களைத் தமிழீழ மண்ணில் தகர்த்த சிங்கள தேசத்திற்கு இன்னொரு போரை நடாத்த வேண்டிய கட்டாய நிலை உருவாகியது. 

    2008 மாவீரர் தின உரை மூலம் புலம்பெயர் தளத்திற்கு நகர்த்தப்பட்ட தமிழீழ விடுதலைப் போர்க் களத்தின்மீதான இந்தப் போரை, முதலில் கே.பி. மூலமாக ஆரம்பித்து வைத்தது. அதன் பின்னர், அவரது கிளை நிறுவனங்களான 'தலைமைச் செயலகம்', 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' ஆகிய இரு போர்க் களங்களைப் புலம்பெயர் தளங்களில் பலம்பெறச் செய்யும் இரண்டாவது முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

    இந்த இரு தளங்களும் இந்த இரண்டரை வருடங்களாக யாருடன் மோதி வருகின்றார்கள் என்று அவதானித்தால், இவற்றின் வேர்கள் கொழும்பில் ஆழ ஊன்றிப் படர்ந்திருப்பதைப் புரிந்து கொள்ளலாம். கே.பி.யினால் உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகம் இதுவரை, விடுதலைப் புலிகளது முகவரியாக, எஞ்சி நிற்கும் பலமாகப் புலம்பெயர் நாடுகளில் தமிழீழம் நோக்கிய போர்க் களத்தை வழிநடாத்தும் புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களைச் சிதைக்கும் முயற்சியை மட்டுமே மேற்கொண்டுள்ளது. அதே போலவே, 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ்த் தேசியவாதிகளை ஓரம் கட்டிவிட்டு, இன்னொரு குழுவாகத் தமிழ்த் தேசிய தளச் சிதைவு நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு வருகின்றது.

புலம்பெயர் தளத்தின் பலத்தை இந்த இரு அமைப்புக்களாலும் நிர்மூலமாக்கிவிட முடியாது என்பதை சிங்களப் புலனாய்வுத் தகவல்களால் உணர்ந்து கொண்ட சிங்கள தேசம், இன்னொரு முறியடிப்புச் சமரைப் புலம்பெயர் தமிழர்கள் மீது மேற்கொண்டுள்ளது. இதில், தலைமைச் செயலகம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆகிய இரு தமிழ்த் தேசிய சிதைவுத் தளங்களுடன் கே.பி. குழுவும் இணைக்கப்பட்டது. புலம்பெயர் தமிழ்த் தேசிய சிதைவினை மேற்கொள்ளும் திட்டத்தின் அதி உச்ச களமாக மாவீரர் தினம் தெரிவு செய்யப்பட்டு, சிங்கள ஆட்சியாளாகள் இந்த முப்படைகளையும் ஏவிவிட்டுள்ளனர்!

இது ஊகத்தின் அடிப்படையிலான தகவல்கள் அல்ல. தமிழ்த் தேசிய ஆன்மாக்களின் பரிதவிப்பு!

- நக்கீரன் 

No comments:

Post a Comment