வரலாற்றில் மாவீரர்களைக் கௌரவிக்கும் பொப்பி மலரும் காந்தள் மலரும் ஒரு நோக்கு....,:- அ.மயூரன்.
இன்று உலகிலே விடுதலை வேண்டிப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் நாடுகள் எனப்பல உள்ளன. இந்நாடுகள் இன்றும் தமது விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த வீர்ர்களை நெஞ்சினில் வருடாவருடம் நிறுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீர்ர்களை நினைவு கூரிவருகின்றமை தெரிந்ததே.









- உலக அரங்கில் ஈழத்தமிழினத்தின் குறியீடாக கார்த்திகைப்பூ மிளிர்ந்து நிற்கிறது.
- உலகப் போரில் உயிர் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் பொப்பி தினமாகிய இந்நாளில் காந்தள் மலரின் நாயகர்களையும் நினைவேற்றிக் கொள்வதன்மூலம் பொப்பி மலரும் காந்தள் மலரும் கார்த்திகையில் சிறப்பம்சம் பெறுகின்றது.


முதலாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை எல்லாம் நேச நாடுகள் மீளக் கைப்பற்றிய வேளையில் ஜேர்மனியின் அரசர் இரண்டாம் ஹைகர் வில்லியம் 1918 இல் முடிதுறந்து போக ஆட்சியை. அரசு பொறுப்பேற்றது. அரசு பொறுப்பேற்ற மறுகணமே நிலைமை தலைகீழானது. ஜேர்மனியின் படைகள் திக்குத் திசைமாறி நின்ற வேளையில் ஜேர்மனியின் மூன்று பிரதிநிதிகள் நேசநாடுகளின் தளபதியும் பிரான்சின் ஜெனரலுமான Foch என்பவருடன் செய்துகொள்ளப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கை 1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 திகதி அதிகாலை ஐந்து மணிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு பகல் 11 மணி 11 நிமிடத்திற்கு அமுலுக்கு வந்தது.
சுமார் நான்கு ஆண்டுகள் நடந்த இடைவிடாத யுத்தமானது இதனால் முடிவுக்கு வந்தது. முதலாம் உலகப் போர் முடிவடைந்த நவம்பர் மாதம் 11 திகதி பகல் 11 மணி 11 நிமிடத்தில் உலகப் போரிலும் அதன் பின்னரும் ஏற்பட்ட சண்டைகளில் மாண்ட படைவீர்ர்களை இந்நாளில் பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள். இன்றுவரை நினைவு கூருகின்றனர்.
அந்தவகையில் நவம்பர் 11 திகதி அமுலுக்கு வந்த இந்த சமாதான உடன்படிக்கை ஆரம்பத்தில் யுத்தநிறுத்த தினம் Armistice day எனவே அழைக்கப்பட்டது. எனவே இதை மக்கள் முழுமையான சமாதானம் வந்துவிட்டது என்றே கருதியிருந்தனர். மாறாக ஜேர்மன் படைகள் ஹிட்லரின் தலைமையில் மீள ஒருங்கிணைக்கப்பட்டு 2 வது உலகயுத்தம் தொடங்கப்பட்டமையால் இந்த யுத்தநிறுத்த தினம் கைவிடப்பட்டது. இருந்தும் 2வது உலக மகாயுத்தம் முடிவடைந்த்தன் பின்னர் பிரித்தானிய அரசினால் இந்த யுத்தநிறுத்த தினமானது நினைவு தினமாக (Remembrance Day) ) மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டபோது அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் இதை ஏற்றுக் கொண்டன. அன்றிலிருந்து இத்தினம் பொப்பி தினமாக நினைவுகூரப்படுகின்றது.

மேலும் அவுஸ்திரேலியாவிலும் இந்நிகழ்வு மிகச்சிறப்பாக்க் கொண்டாடப்படுகிறது. அதில் சிறப்பம்சம் என்னவெனில் முதலாம் உலகப்போரில் கொல்லப்பட்டவர்களில் 35,527 வீர்ர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த 35,527 அவுஸ்திரேலிய வீர்ர்களும் அவுஸ்திரேலிய விடிவுக்காகவோ அல்லது அவுஸ்திரேலிய மண்ணிலோ மடியவில்லை. இவர்களது கல்லறைகளும் அவுஸ்திரேலியாவில் இல்லை. இறுதியாக 1993 இல் பிரான்சில் வெஸ்ரேன் புரொன்ரில் (Western Front) புதைக்கப்பட்ட பெயர் தெரியாத ஒரு அவுஸ்திரேலிய வீரனின் உடல் அகழ்தெடுக்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் நவம்பர் 11 இல் அரசமரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்நடது. இவனது உடலே 35,527 வீர்ர்களின் நினைவுகளுக்கும் சாட்சி.இதேபோல 2007 ஆண்டு 1வது உலகப் போரில் கொல்லப்பட்ட ஜக்ஹண்டர் என்ற அவுஸ்திரேலிய வீரனின் உக்கிய எலும்புகள் மரபணுச் சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு பெல்ஜியம் போர் மயாணத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதேபோல் பிரித்தானியாவும் 2007 இல் இறந்த வீரனை அடக்கம் செய்த்து நினைவிருக்கலாம்.
தமிழீழ மக்கள் எவ்வாறு கார்த்திகை 27ஐ மாவீர்ர் தினமாக்க் கொண்டாடுகின்றனரோ அதேபோல் பிரித்தானிய மக்களுக்கும் கார்த்திகை 11 முக்கியத்துவம் பெறுகின்றது. பொப்பி எனப்படும் சிவப்பு நிற மலர் இந்நாளின் நினைவு மலராக்க் கொள்ளப்படுகின்றது.

பெல்ஜியம் நாட்டில் உள்ள Flanders Fields நகரத்திலும், பிரான்சிலும் இவ்வகைப் பொப்பிப் பூக்கள் அதிகம் காணப்படுகின்றன. அத்துடன் பிரித்தானியாவைச் சேர்ந்த போர்வீரன் லெப்டினட் கேணல் Jone McCrae என்பவர் 1915 எழுதிய பெல்ஜியத்தில் Flanders Fields போர்க்களத்தில் பொப்பிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன என்றும் சிலுவை அடையாளங்களுக்கிடையில் வரிசைவரிசையாகப் பூத்துக் குலுங்கும் பொப்பிப் பூக்கள் எங்களுடைய இருப்பை அடையாளங் காட்டுகின்றன. என்ற கவிதைவரிகளின் காரணமாகவே பொப்பிப் பூக்களை இந்நாடுகள் தங்களின் கல்லறை மலர்களாகத் தெரிந்தெடுத்திருந்தனர்.
ஜோன் மக்ரீ எழுதிய வரிகள் இவைதான்

“Flanders Fields போர்க்களத்தில் பொப்பி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. சிலுவை அடையாளங்களுக்கிடையே வரிசை வரிசையாக பொப்பி மலர்கள் எங்களுடைய இருப்பிடங்களை அடையாளம் காட்டுகின்றன. கீழே முழங்குகின்ற துப்பாக்கிச் சத்தங்கள் தங்கள் காதுகளில் வாங்காது வானம் பாடிகள் பறக்கின்றன. நாங்கள் இறந்தவர்கள். சில நாட்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள். வாழ்ந்தோம் வீழ்ந்தோம். சூரிய உதயத்தை உணர்ந்தோம். சூரிய அஸ்தமனத்தின் ஒளியைக் கண்டோம். காதலித்தோம், காதலிக்கவும் பட்டோம். இப்போது Flanders Fields இல் கிடக்கின்றோம். எங்களுடைய சண்டையைப் பகைவனிடம் கொண்டு செல்லுங்கள். செயல் இழக்கப் போகின்ற எங்கள் கைகளில் உள்ள விளக்கை உங்களிடம் தருகின்றோம். இதனை உங்களுடையதாக உயர்த்திப் பிடியுங்கள். இறந்து கொண்டிருக்கும் எங்களுடைய நம்பிக்கையை நீங்கள் உடைப்பீர்களானால் நாங்கள் தூங்கப் போவதில்லை. ஆனால் இந்தப் பொப்பி மலர்கள் இல் தொடர்ந்து பூத்துக் குலுங்கும்”.
அற்புதமான உள்ளார்த்தம் நிறைந்த உயரிய கவிதை வரிகள் எம்மால் புரிந்துகொள்ளமுடியும். ஏனெனில் வீழ்ந்தவர்களுக்காக வருடாவருடம் விழா எடுப்பவர்களல்லவா நாங்கள். அழகிய சிவந்த இதழ்களைக் கொண்ட பொப்பிப் பூக்கள் பிரித்தானியாவில் இல்லை. மேலும் இந்தப் பொப்பி மலரானது ஆரம்ப கால் முதல் அபின் எனப்படும் கெரோயினுக்கு முக்கிய பொருளாக அமைகின்றதுடன். பொப்பியின் விதையானது கசாகசா எனப்படும் வாசனைத்திரவியங்களில் ஒன்றாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அத்துடன் இப்பொப்பிப் பூக்கள் இலகுவில் உதிர்ந்துவிடக் கூடியன. ஆகவேதான் கடைகளில் கடதாசியால் செய்யப்பட்ட பொப்பி மலர்களை மக்கள் மடிந்தவரை மனதில் எண்ணி வாங்கி அணிவர். இந்த வீர்ர்கள் பிரித்தானியாவை வளமுள்ள நாடாக மாற்றியதற்கு தம்முயிர்களைத் தியாகம் செய்தவர்கள். என மக்கள் இன்றும் புகழாரம் சூட்டுவதைக் காணலாம். மாறாக கடந்த சில ஆண்டுகளாக லண்டனுக்குள் வெளிநாட்டவர்கள் அதிகம் வாழ்வதால் இந்நிகழ்வு மக்களில் செல்வாக்குச் செலுத்தாவிட்டாலும் லண்டன் தவிர்ந்த பிரித்தானியாவில் இந்நினைவு கூரல் தவறாது கடைப்பிடிக்கப்படுகிறது.
அத்தோடு போரில் இறந்த வீர்ர்களுக்கு பிரித்தானியாவில் தனித்தனிக் கல்லறைகள் எதையும் அமைக்கவில்லை மாறாக பொதுவான கல்லறையை மட்டும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பிரித்தானியா தனது நாட்டைவிட்டு வெளிநாடுகளில் வீழ்ந்த வீர்ர்களுக்கு மட்டும் தனித்தனி கல்லறை அமைத்திருந்த்து உதாரணமாக பிரான்ஸில் நோமண்டியிலும், பெல்ஜியத்தில் Flanders Fields பகுதியிலும், தனிக்கல்லறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. அதேபோல் இலங்கையில் திருகோணமலையில் ஜப்பானியர்களால் கொல்லப்பட்ட பிரித்தானிய 228 வீர்ர்களுக்குத் தனித்தனி கல்லறை அமைத்துள்ளதையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தக்கல்லறைகளை இன்றும் திருகோணமலைக்கு வெளியே திருகோணமலையிலிருந்து நிலாவெளி செல்லும் வீதியில் கிட்டத்தட்ட 3மைல் தொலைவில் காணமுடிகின்றது. வேற்று நாட்டுப்படைகள் தம் நாட்டிற்குள் இறந்த்தற்காக கல்லறை அமைப்பதை அனுமதித்திருந்த இலங்கையரசு. தம்நாட்டில் அந்தநாட்டின் விடிவிற்காக வீழ்ந்த எம்புனிதர்களின் கல்லறைகளை அனுமதியாது களைந்திருக்கின்றது இது எந்தவகையில் சரியானது உறவுகளே.

மேலும் பிரித்தானியாவில் போட்ஸ்மத் (postmouth ) என்னும் கடற்கரை நகரத்தில் உலகப்போரில் வீழ்ந்தவர்களுக்காக டீ-டே மிய+சியம் என்னும் நினைவாலயத்தையும் அமைத்து அந்த வீர்ர்களைக் கௌரவித்திருக்கின்றது பிரித்தானிய அரசு.
இதுவரை பொப்பி மலரினதும் பொப்பி தினத்தினதும் முக்கியத்துவம் பற்றி நோக்கினோம் இனி இதே கார்திகை மாதத்தில் ஈழத்தமிழர்கள் வரலாற்று விழுமியம் கொண்ட கார்த்திகைப்பூ என நாம் அழைக்கும் காந்தள் மலரை தமது நினைவு மலராக கொண்டாடுகின்ற சிறப்பம்சத்தை சற்று நோக்குதல் பொருந்தும் எனக்கருதுகின்றேன்.
இதன் இதழ்கள் பெண்களின் கைவிரல்களுக்கு ஒப்பிட்டுக் கூறப்படுவதால் இதனைக் காந்தள் மலர் என்பர். இக்கார்த்திகைப்பூ பண்டைத்தமிழ் வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான பூக்களில் ஒன்றாக இருந்துவந்துள்ளது. “காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்” என்று காந்தள் மலர் மாலை அணியும் வழக்கத்தை பதிற்றுப்பற்று அத்தாட்சிப்படுத்துகின்றது. “ மரகதமணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மென் விரல்கள்” என்று சிலப்பதிகாரம் உவமை செய்கின்றது.

“காந்தள் முழுமுதல் மெல்லிலை குழைய. முயங்கலும் இல்லுய்த்து நடுதலும்” என்று தலைவனுடைய மலையில் இருந்து மழைநீரால் அடித்து வரப்பட்ட காந்தட் கிழங்கை நட்டு வளர்த்துத் தன்னை ஆற்றுப்படுத்தும் நாயகி பற்றி குறுந்தொகை கூறுகிறது.
“சேலை அடுக்கத்துச் சுரம்பு என விரிந்த காந்தளுள்ள்ளும்” என தெய்வங்களுக்குக் காந்தள் பூ சூட்டப்பட்டதை அகநானூறு தெளிவு படுத்துகின்றது. “வெய்யறி சிறப்பன் வெளவாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறுபகை” என்று காந்தள் மலரணிந்து வெறியாடுவதைத் தொல்காப்பியம் சித்தரிக்கின்றது. அத்துடன் தமிழரின் போர்க்கடவுளான முருகனுக்குரிய பூவாக புறப்பொருள் வெண்பாமாலை சிறப்பித்துக் கூறுகின்றது.
இப்படிக் கார்த்திகைப் பூவில் வாய் நனைக்காத புலவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு பழந்தமிழர் இலக்கியங்கள் எங்கும் கார்த்திகைப்பூ நிறைந்து கிடக்கின்றது. தமிழர் பண்பாட்டுக்கு நெருக்கமான பூவாக இருப்பதும் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கின் இயற்கைச் சூழலுக்குரிய ஓர் உள்நாட்டு இனமாக இருப்பதும் தேசிய பூவினதும், நினைவுப் பூவினதும் தேர்வில் கார்த்திகைப்பூ தேசியப்பூவின் தேர்வின் அடிப்படையம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
சிவப்பு – மஞ்சள் வண்ணங்களைப் பிரதிபலிக்கும் பூவிதழ்களும், மாவீர்ர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பாங்கில் அந்தப்பூ விரியும் அழகும் சிறப்புத்தன்மை வாய்ந்தவையாகும். இதை அழகு செய்வதாக கவிஞர் புதுவை இரத்தின துரை அவர்களின் ’’கார்த்திகைப் பூவின் நிறத்தில் இவள் கட்டுற சேலைகள் இருக்கும் கார்த்திகை மாதம் கல்லறை நாளில் தாயவள் மேனி சிலிர்க்கும்’’ என்ற வரிகள் மேலும் சிறப்பை ஊட்டுகின்றது. இந்தக் கார்த்திகைப்பூச் செடியில் கொல்கிசின் எனப்படும் நச்சுத்தன்மை இராசாயணம் காணப்படுகின்றது. இது நஞ்சினை அணியும் புலிகளுக்கு பொருத்தப்பாடுடைய இயல்பாக்க் காட்டியும், சில சமயங்களில் கார்த்திகைக்கிழங்கு தற்கொலைகளுக்கு காரணமாக அமைவதால் கரும்புலிகளோடு ஒப்பிட்டும் பார்க்கமுடியும் சிறப்பு வாய்ந்த்து. ஆனால் பொப்பி மலரில் போதை மட்டுமே உண்டு. இது கார்த்திகை மலரின் சிறப்பு.

ஆகவே மீண்டும் ஒரு புறநானூற்றுத் தமிழனாக தன்னுடைய விடுதலைக்காக போராடி வீழ்ந்த வீர்ர்களை கல்லறைகளில் இட்டு அவர்களின் ஞாபகார்த்தமாக இக்காந்தள் மலரினை வைத்து ஒரு சில தினங்களையே மாவீர்ர் வாரமாக கொண்டாடுகின்ற மரபு ஈழத்தமிழரைத்தவிர ஏன் விடுதலைப் புலிகளைத் தவிர வேறு எந்த விடுதலை அமைப்புக்களுக்கோ, அரசுகளுக்கோ இல்லாத தனிச்சிறப்பாகும். உலகிலே எங்கும் இடம்பெறாத வகையில் இந்த வீரக்குழந்தைகளுக்கு வீரத்தாழாட்டு ஈழத்தமிழ் மண்நணிலே சிறப்பாக இடம்பெற்று வந்தது. இன்று அந்த நிகழ்வும் புலம்பெயர வேண்டிய ஒரு காலத்தின் கட்டாயத்தில் கட்டுண்டு கிடக்கின்றது.
அந்தவகையில் முதன்முதலில் தமிழீழ விடுதலைப் போரில் வித்தான லெப்.சங்கரின் இறந்த நாளான கார்த்திகை 27 ஐ இறுதித் தினமாக்க் கொண்டு ஒரு வாரம் (21-27) மாவீர்ர் வாரமாக 1989ஆம் ஆண்டு முதல் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது. 1989 ஆம் ஆண்டு 1617 மாவீர்ர்கள் மணலாறு மாவட்டத்தில் இந்திய இராணுவத்தின் கெடுபிடிக்குள்ளும் நள்ளிரவு 12.01 இற்கு தீபங்கள் ஏற்றி மலர் தூவி நினைவு கூரப்பட்டனர். அந்த நேரத்திலே மாவீர்ர்களைப் புதைக்கும் வழக்கம் இருக்கவில்லை.
வீரமரணமடைந்த போராளிகளின் உடல்களை அவரவர் குடும்பங்கள் கைக்கொள்ளும் மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் புதைக்கப்பட்டோ அல்லது எரிக்கப்பட்டோ அவர்களது இறுதிக் கிரியைகள் நடந்தன. மாறாக காடுகளுக்குள் இறக்கும் மாவீர்ர்கள் மாத்திரம் புதைக்கப்பட்டனர். இதற்கு மணலாற்றில் உள்ள கமல் முகாம் ஒரு சாட்சியாக அமைகின்றது.
ஆனால் 1991 இலிருந்து வீரமரணமடைகின்ற மாவீர்ர்களின் உடல்கள் அனைத்தும் இனிமேல் எரிக்கப்படாது. புதைகுழிகளில் புதைக்கப்படும் எனவும் அவ்வாறு புதைக்கப்பட்ட மாவீர்ர்களின் இடத்தில் கல்லறைகள் எழுப்ப்ப்பட்டு அதில் அவர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டு இவை எமது தேசிய நினைவுச் சின்னங்களாக பாதுகாக்கப்படும் எனவும் இவை காலங்காலமாக எமது போராட்ட வரலாற்றைச் சொல்லிக் கொண்டேயிருக்கும்.
இந்த மாவீர்ர்கள் சாத்திர சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் கடந்து இந்த நாட்டின் பொதுச்சொத்தாக பொக்கிசங்களாக இருக்கின்றார்கள். இந்தப் பொக்கிசங்கள் வெறும் நினைவுகளாகவும், எண்ணிக்கைகளாகவும் மட்டும் இருக்க்க் கூடாது. அவை பொருள்வடிவில் என்றென்றும் எம்மண்ணில் இருந்துகொண்டேயிருக்கவேண்டும்.
ஒரு மாவீரனை தலாட்டி சீராட்டி வளர்த்த தாய் சகோதர்ர்கள் தன் மகனின் அல்லது உறவினரின் மரணத்திற்கு வரமுடியாத நிலையில் அந்த வீரனை தகனம் செய்தால் நாளை அந்த தாய் சகோத்தர்களுக்கு எதைக்காட்டப் போகின்றோம். ஒரு மாவீரன் எம்மிடம் கேட்பது ஆறடி நிலம் மட்டுமே. எனவே தான் அந்த வீரனின் தாய் சகோதர்ர்கள் தன் பிள்ளைகளின் உடலைப் பார்க்காது விட்டாலும் அவன் புதைக்கப்பட்ட கல்லறையைப் பார்த்து ஆறுதலடையலாம் அல்லவா?.
ஆகவே வீரமரணமடையும் மாவீர்ர்களது உடல்கள் இனிமேல் தகனம் செய்யப்படமாட்டாது புதைக்கப்படவேண்டும் என முடிவெடுத்துள்ளோம். இம்முடிவானது போராளிகளின் மிகப்பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கின்றோம். என விடுதலைப்புலிகள் அறிவித்தார்கள்.

அந்தவகையில் 1991 ஆண்டு தொடக்கம் வீரமரணமடைகின்ற மாவீர்ர்களது உடல்கள் அதற்கென ஒதுக்கப்பட்நட துயிலுமில்லங்களில் புதைக்கப்பட்டனர். அந்த 1991 ஆண்டில் 3750ற்கும் மேற்பட்ட மாவீர்ர்களுக்கு தமிழினம் நினைவுகூரியது. அதே வருடம் (1991) இடம் பெற்ற மாவீர்ர் நாளில் புதுவை இரத்தின துரையின் கவிதை வரிகளை இசைவாணர் கண்ணன் கானமாக மீட்ட வர்ண இராமேஸ்வரனின் குரலில் கோப்பாய் மாவீர்ர் துயிலுமில்லத்தில் மாவீர்ர் துயிலுமில்லப் பாடல் முதன் முதலில் ஒலிக்கப்பட்டு மாவீர்ர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
பின் 1998 ஆம் ஆண்டிலிருந்து 25 ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை மாவீர்ர் தினம் அனுட்டிக்கப்படுவதுதோடு முதல் மாவீர்ர் லெப்.சங்கர் வீரச்சாவடைந்த நேரமான மாலை 06.05 இற்கு சூரியன் மறையும் நேரம் இந்தச் சூரியர்களுக்கு தீபங்கள் ஏற்றி வணங்குவது குறிப்பிடத்தக்கது. 1998 ஆம் ஆண்டு 14.435 மாவீர்ர்களுக்கு நினைவு கூரப்பட்டது.
கடந்தவருடம் முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட நிகழ்வுக்குப் பின்னர். இவ்வீர்ர்களின் இருப்பிடங்கள் யாவும் களையப்பட்டன. இருந்தும் கடல் கடந்து தமிழர் வாழும் தேசங்கள் எங்கும் கார்த்திகை மலரின் அழகில் தாயகத்துக்காக தன்னுயிரிழந்த தயாளர்களின் முகங்களைப் பார்த்து இந்தவருடம் கிட்டத்தட்ட 35.000 மாவீர்ர்களுக்கும் தமிழீழ மண் கண்ணீரால் இவர்கள் பாதங்கள் நனைத்து வணங்கப் போகின்றது.
இந்தப் பின்னணியிலேயே உலக அரங்கில் ஈழத்தமிழினத்தின் குறியீடாக கார்த்திகைப்பூ மிளிர்ந்து நிற்கிறது. அது கமழும் தேசிய வாசத்தை நுகர்வதற்கு பேரினவாதம் தயாராக இல்லை. பௌத்த பண்பாட்டு விழுமிய மலரான நீலோற்பலம் தான் இலங்கைத்தீவின் ஒரே ஒரு பூ என அதன் நாசி வழிகள் எங்கும் நீலோற்பலத்தால் அடைத்து வைத்திருக்கிறது. ஆகவே உலகப் போரில் உயிர் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் பொப்பி தினமாகிய இந்நாளில் காந்தள் மலரின் நாயகர்களையும் நினைவேற்றிக் கொள்வதன்மூலம் பொப்பி மலரும் காந்தள் மலரும் கார்த்திகையில் சிறப்பம்சம் பெறுகின்றது.
No comments:
Post a Comment