Translate

Friday, 11 November 2011

யார் இந்தப் பெண்மணி?


யார் இந்தப் பெண்மணி?   சலசலப்பு





யார் இந்தப் பெண்மணி?
இவரது பெயர் “கிம் புஃக்” இவர் தற்போது கனடாவில் வசிக்கிறார். இவர் ஒரு பிரபலமானவர். இவர் எதனால் பிரபலமானவர்?

46 வயதான “கிம்” எப்படிப் பிரபலமானார். நேபாம் குழந்தை என்றழைக்கப்படும் கிம் இன்று ஒரு வியட்னாமிய கனேடியர். 1992ம் ஆண்டு மொஸ்கோவிலிருந்து கியூபா சென்ற விமானம் கனடாவின் நியூபவுண்ட்லான்ட் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியபோது தனது தேனிலவிற்காக தனது கணவருடன் அந்த விமானத்தில் பிரயாணம் செய்துகொண்டிருந்த “கிம்” நியூபவுண்ட்லான்ட விமானநிலையத்தில் அரசியல் தஞ்சம் கோரினார். அவருடைய அரசியல் தஞ்சம் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்று கனேடியப் பிரசையாகியுள்ள “கிம்” யுனெஸ்கோ அமைப்பின் தூதுவராகவும் உள்ளார். அதுமட்டுமல்லாது இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாகியுமுள்ளார். தனக்கும் திருமண வாழ்க்கை கிடைக்காது என்றிருந்த “கிம்” இன்று கடவுளுக்கு நன்றி கூறுகிறார். அவர் ஒரு கிறீஸ்தவர்.
அவர் எப்படிப் பிரபலமானார்?
1972ம் ஆண்டு வியட்நாமில் யுத்தம் நடந்துகொண்டிருந்தவேளை ஒரு புகைப்படம் பிரபலமானது. அசோசியேற்றட் பிறெஸ் நிருபரான லோஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த “நிக் உற்” என்பவரால் எடுக்கப்ட்ட புகைப்படம் உலகப் பிரசித்தி பெற்றது. அந்தப் புகைப்படத்திற்கு “புலிற்சர்” விருதும் பத்தாயிரம் டொலர்கள் வெகுமதியும் கிடைத்தது.
அந்தப் புகைப்படம் வேறு ஒன்றுமல்ல!   வியட்நாம் யுத்தத்தின்போது வீசப்பட்ட நேபாம் குண்டுகளினால் ஏற்பட்ட எரிகாயங்களுடன் சிறுமி “கிம்” நிர்வாணமாக ஓடிவரும் காட்சிதான் அது!
1972ம் ஆண்டு தென் வியட்நாம்- வட வியட்நாமிற்கிடையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  1963ம் ஆண்டு பிறந்த “கிம்”ன் வசிப்பிடம் “சைகொன்” நகருக்கு வடக்கே 30 மைல் தொலைவில் உள்ள ற்ராங் பாங்” நகரமாகும். 1972 ஜுன் மாதம் எட்டாம் திகதி தென் வியட்னாமிய 25ம் பிரிவு படைகளின் விமானங்கள் “கிம்” வாழ்ந்த கிராமத்தில் வெள்ளை “பொஸ்பரஸ்” குண்டுகளை வீசின. 9 வயது சிறுமியான “கிம்”ஏனாய குழந்தைகளுடன் ஓடிக் கொண்டிருந்தபோது 4 பிப்பாய் நேபாம் குண்டுகள் வீதியில் விழுந்தன. “கிம்”ன் இளைய சகோதரர்கள் இருவரும் அந்த இடத்திலேயே இறந்தனர். குண்டுகள் வீழ்ந்ததை நான் கண்டேன். பாரிய தீச்சுவாலை எழுந்தது. வெப்பம் பயங்கரமாக இருந்தது. என்னுடைய ஆடைகள் அந்த வெப்பத்தில் கருகிப் போயின. இருந்தும் எரிவு நிற்கவில்லை. அங்கிருந்தவர்கள் “கிம்” உடல் மேல் தண்ணீரை ஊற்றினார்கள். நான் மயங்கிவிட்டேன். என்னைப் புகைப்படம் எடுத்த “ஏ.பி” நிருபர் “நிக் உற்” “கிம்”ஐ தனது வாகனத்தில் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார்.

Phan Thi Kim Phuc Vietnam Napalm by innerpendejo
அவரால் அந்தச் சிறுமி “கிம்”ஐ மறக்க முடியாது. தொடர்ந்தும் வைத்திய சாலைக்கு வந்து “கிம்”ஐ பார்;த்தார். புத்தகங்கள்,பரிசுகள் என்பன கொண்டு சென்று கொடுத்தார். “கிம்”ன் குடும்பத்திற்கு உதவித் தொகை கிடைக்க ஒழுங்குகள் செய்தார். ஏ.பி செய்தி நிருபர் “நிக் உற்” எடுத்த புகைப்படம் உலகம் முழுக்க பிரசுரிக்கப்பட்டு கிம்மின் தலைவிதியையே மாற்றியது. சிறுமி “கிம்” 14 மாதங்கள் வைத்தியசாலையில் கழித்தார். “கிம்” 3ம் தர எரிகாயங்களுடன் சிறுமி “கிம்” உடல் தேறினாள். அவளது அரைவாசி உடல் எரிகாயங்களுக்குள்ளானது. “கிம்” உயிர் தப்புவார் என்று யாரும் நினைக்கவில்லை. அவளது வேதனை சகிக்க முடியாதது. சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் “மார்க் ஹோர்ணி” சிறுமி “கிம்”ற்கு “சைகோன்” ல் உள்ள “பாக்ஸி” சிறுவர்கள் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிலையமொன்றில் வைத்து இலவசமாக சத்திர சிகிச்சை மேற்கொண்டார்.அவர் முதல் தடவை சிறுமி “கிம்”ஐ பார்த்தபோது அவளது இடது கை கிட்டத்தட்ட எலும்பு தெரியும் வரையில் எரிந்திருந்தது. சவ்வுகள் ஒன்றோடொன்று ஒட்டிப் போயிருந்தது. அவள் உடல் தேறிக் கொண்டிருந்த காலகட்டம் விவரணப் படமாக்கப்பட்டது.

“கிம்”னுடைய தாயார் எப்போது மகளுக்கு அருகிலேயே நின்றிருந்தார். தன்னைக் காப்பாற்றிய டாக்டர் போல தானும் ஒரு டாக்டராக வரவேண்டுமென்ற ஆசை “கிம்”ற்கு இருந்தது. சிகிச்சை முடிந்து இரண்டு வருடங்களின் பின் “கிம்” வீடு திரும்பினாள். “கிம்”ஐ காப்பாற்றிய பத்திரிகையாளர் “நிக் உற்”ம், டாக்டர் “மார்க் ஹோர்ணியும்” இப்போது கலிபோர்ணியாவில் வாழுகின்றனர். நேபாம் குண்டுகளை வீசிய படைவீரர் தன்னை மன்னித்துக் கொள்ளும்படி “கிம்”ஐ கேட்டுக் கொண்டார். கிம் அவரை மன்னித்தார். முன்னாள் வியட்னாமிய போர்வீரர்கள் தங்களை மன்னித்துக் கொள்ளும்படி “கிம்”ற்கு கடிதங்கள் எழுதியுள்ளனர். 1986ம் ஆண்டு கியூபாவில் கல்வி கற்பதற்கான அனுமதி கிடைத்தது. அவர் கிறீஸ்தவராக மதம் மாறினார்..1992ம் ஆண்டு கியூ+பாவில் அவருடன் கல்வி கற்ற இன்னொரு வியட்னாமியரான “புயி ஹைய் ரோன் என்பவரை வாழ்க்கைத் துணைவராகத் தேர்ந்தெடுத்தார்.
கனடாவில் அமைதியாக வாழும் “கிம்” தான் போரை வெறுப்பதாகக கூறுகின்றார். ”கிம்” பவுண்டேசன் என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தையும் நடாத்துகின்றார். போர் அப்பாவி மனித உள்ளங்களை வேதனைப்பட வைக்கிறது என்பதற்கு “கிம்”ன் அனுபவங்கள் சாட்சி!
கனடாவிலிருந்து ரகு

No comments:

Post a Comment