
பால் விலை, பேருந்து கட்டணம், மின் கட்டணம் உயர்வு!
விலை உயர்வைத் திரும்பப் பெறக் கோரி
21ந்தேதி விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!
தொல்.திருமாவளவன் அறிவிப்பு!
உள்ளாட்சித் தேர்தல் வரையில் அமைதி காத்திருந்த அதிமுக அரசு, தேர்தல் முடிந்த கையோடு தற்போது பால் விலையையும், பேருந்துக் கட்டணத்தையும் கடுமையான அளவில் உயர்த்தியுள்ளதோடு, மின் கட்டணத்தையும் உயர்த்திக் கொள்ள மின் வாரியத்திற்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
தமிழக மக்கள் எந்த நம்பிக்கையோடு அதிமுகவை ஆட்சியில் அமர்த்தினார்களோ, அந்த நம்பிக்கையைப் பொய்யாக்கும் வகையில் பால் விலையையும், பேருந்துக் கட்டணத்தையும் தமிழக அரசு திடீரென உயர்த்தியுள்ளது. வாக்களித்த பொதுமக்களை இளிச்சவாயர்களாகக் கருதும் வகையில் அதிமுக அரசின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது வரி விதிக்காத நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள ஒரே அரசு தமிழக அரசு என்று தம்பட்டம் அடித்துக்கொண்ட ஆட்சியாளர்கள், இன்னும் ஒரு சில ஆண்டுகளுக்கு தேர்தல் எதுவும் இல்லை என்கிற துணிச்சலில் இத்தகைய விலை உயர்வை, கட்டண உயர்வை அறிவித்துள்ளது. வாக்களித்த மக்களுக்கு, அதிலும் குறிப்பாக அறுதிப் பெரும்பான்மை இடங்களை அளித்து ஆட்சியில் அமர வைத்த தமிழக மக்களுக்கு அதிமுக அரசு செலுத்தும் நன்றியுணர்வு இதுதான் என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பால்வளத் துறை மற்றும் போக்குவரத்துத் துறை திவாலாகி விட்டது என்ற காரணம் காட்டி இந்த விலை உயர்வையும், கட்டண உயர்வையும் தமிழக அரசு ஞாயப்படுத்த முயற்சிக்கிறது. தமிழக அரசின் இந்த முயற்சி தமிழக மக்களை மேலும் குறைத்து மதிப்பிடுவதாகவே அமைந்துள்ளது. தமிழக அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிப்பதுடன், ஏழை எளிய மக்களை வெகுவாகப் பாதிக்கும் பால் விலை உயர்வையும், பேருந்து மற்றும் மின் கட்டண உயர்வையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமெனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இக்கோரிக்கையினை வலியுறுத்தி வருகிற 21Š11Š2011 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
(தொல். திருமாவளவன்)
No comments:
Post a Comment