Translate

Tuesday, 1 November 2011

தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் தாக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.


தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் தாக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

புலம்பெயர் தேசத்தில் உள்ள தேசிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் அனைத்துக் கட்டமைப்புகளினதும் இலக்கு ஒன்றாக இருக்கின்றபோதிலும் அதனை அடைவதற்காக அவைகள் பின்பற்றும் அணுகுமுறைகளே வேறுபட்டுக் காணப்படுகிறது. இதன் காரணமாக ஒவ்வோர் அமைப்புக்களுக்குமிடையில் கருத்து முரணபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவை ஒருவரை ஒருவர் தாக்கும் அளவிற்கு பெரிய பிரச்சனைகள் அல்ல. சரியான புரிந்துணர்வோடும் விட்டுக்கொடுப்புக்களோடும் ஒன்றாக இருந்து கதைத்துத் தீர்க்கக்கூடிய விடையங்களே. அதன்வழியில் தற்போது தேசியத்தை நேசிக்கும் தனிநபர்களாலும் அமைப்புக்களாலும் கருத்து முரண்பாடுகளைத் தீர்க்கும் செயற்பாடுகளும் ஒன்றிணைந்து பணியாற்றும் முயற்சிகளும் கைகூடம் சாத்தியங்கள் அதிகரிக்கும் நிலையில் அதைத் தெரிந்துகொண்டே இவ்வாறான செயற்பாடுகளினூடு அதனைச் சீர்குலைக்கும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றது.  

ஆகவே இவ்வாறான தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் தாக்கப்படுவதை அக்குழுக்களுக்குள் மோதிக்கொள்வதாகவோ அன்றி அவ் அமைப்புக்களுக்குள் இடம்பெறும் கைகலப்புக்களாகவோ நாம் பார்க்கவில்லை. எம்முள் இருக்கும் முரண்பாடுகளை தமக்கு சாதகமாக்கி திட்டமிட்ட ரீதியில் சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் சதி நடவடிக்கையாகவே கருதுகிறோம். எனவே இதனை சரியாகப் புரிந்துகொண்டு தேசியச் செயற்பாட்டாளர்களும் கட்டமைப்புக்களும் செயற்படவேண்டுமென வேண்டிநிற்கின்றோம்.

2009 மே 18 டோடு எல்லாவற்றையும் அழித்துவிட்டோம் இனித் தமிழன் தலைநிமிரமாட்டான் அடிமைப்படுத்தி அடக்கி வைத்திருக்கலாம் என எக்காளமிட்ட சிங்களப் பேரினவாதத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் மீள் எழுச்சியும் அச்சத்தையும் சர்வதேச மட்டத்தில் சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்துள்ள சிங்களப் பேரினவாத அரசு தமிழர்களின் ஒற்றுமையையும் மீள் எழுச்சியையும் போராட்ட உணர்வையும் தமிழர்களின் அரசியல் அறிவுசார் வளர்ச்சியையும் தடுக்கும் தனது நடவடிக்கையில் சகல வழிகளிலும் செயற்பட்டு வருகின்றான். அதன் ஓர் அம்சமாகவே தழிழர்களுக்குள் உள்முரண்பாடுகளை உருவாக்கி பாரிய பிளவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றன. 

சிங்களத்தின் கைக்கூலிகளாகவோ அன்றி தனிப்பட்ட விரோதங்களுக்காகவோ தமிழர்களுக்குள் தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களை சரியாக இனம் கண்டு ஆதாரங்களோடு சட்டத்தின் முன் நிறுத்த அனைத்து புலம்பெயர் தமிழரும் முன்வரவேண்டும்.¬

தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தில் அவ்வப்போது இடம்பெற்ற துரோகச் செயல்களும் காட்டிக்கொடுப்புக்களுமே பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது. இருப்பினும் எமது விடுதலைப் போராட்டம் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களினது தியாகத்தாலும் முன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களினது உயிர்க்கொடையாலும் எழுதப்பட்டது. இதனை இத்தோடு முடிந்துவிட்டது என்று முள்ளிவாய்க்காலோடு முழுக்குப் போட முடியாது. இழந்தவற்றை மீளப்பெறும் வரை எம் இனவிடுதலைக்கான போராட்டம் தொடரும். இதற்கு ஒன்றுபட்ட தமிழினமாய் அணிதிரள்வோம். அதுவே எமது இனவிடுதலைக்கு வழிசமைக்கும்.
 
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

நன்றி
பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்
0044(0)2087338268

No comments:

Post a Comment