Translate

Friday, 11 November 2011

யாழ் மாணவர் மத்தியில் ஹெரோயின் பாவனை – யாழ் மக்கள் அதிர்ச்சி


ஹெரோயின் போதைப் பொருளைப் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ். நகரப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்று யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு போதைப் பொருளை விநியோகித்த வலைப்பின்னலைச் சேர்ந்த ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார். யாழ். நகரில் மாணவர்கள் மத்தியில் ஹெரோயின் பயன்பாடு குறித்த தகவல் கல்விச் சமூகத்தைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மாவட்டத்தின் ஒரே சொத்தான கல்வியை அடியோடு பாழாக்கி விடக்கூடிய இந்தப் பழக்கத்தைத் தடுக்க உடனடியாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்று கல்விச் சமூகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
பாடசாலை மாணவன் ஒருவன் போதைப் பொருள் பயன்படுத்துவதாகக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து பொலிஸார் விரைந்து எடுத்த நடவடிக்கையில் பல மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் இருந்து, மாணவர்களுக்கு ஹெரோயின், கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருள்களை விநியோகித்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.யாழ். நகரப் பகுதியைச் சேர்ந்த ஆண்கள் பாடசாலைகளில் கற்கும் சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களே பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். போதைப் பொருளுக்கு அடிமையான மாணவர்களில் ஒருவர் 14 வயதேயானவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் வழங்கிய தகவல்களில் இருந்து, யாழ்ப்பாணத்தில் மாணவர்களுக்குப் போதைப் பொருள்களை விற்பனை செய்து வரும் கும்பல் ஒன்றைப் பொலிஸார் அடையாளப்படுத்தினர்.
நேற்றுக் காலையில் இருந்து மாலை வரை அவர்கள் நடத்திய அதிரடி நடவடிக்கை மூலம் அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மூலம் போதைப் பொருள் விற்கும் கும்பலை மடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த அவர் உத்தரவிட்டார்.
பரிசோதனைகளின் பின்னர் பெற்றோர் அழைக்கப்பட்டு, எச்சரிக்கை செய்யப்பட்டு மாணவர்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். எனினும் அடுத்து வரும் 6 மாதங்களுக்கு அவர்களை உளவள ஆற்றுப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டார்.
இந்த மாணவர்களில் அனேகமானோர் ஆசிரியர்கள், அதிபர்கள் போன்ற உயர் பதவியில் உள்ளவர்களின் பிள்ளைகள் என்றும் தெரியவந்துள்ளது.
எனவே, மாணவர்களிடம் பரவிவரும் இந்தப் போதைப் பொருள் பாவனையைத் தடுத்து நிறுத்த சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் இணைத்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவசர, அவசிய தேவையாக உள்ளது என்று யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment