பிச்சை எடுத்தாலும் என் இனத்தைக் காட்டிக் கொடுக்கவோ அற்ப சொற்பங்களுக்காக அரசுடன் இணையவோ மாட்டேன்.
அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் நடத்த வேண்டிய தேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லை. அவர்கள் இலட்சியத்திலும் கொள்கையிலும் என்றும் உறுதியுடன் இருக்கிறார்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளைக் கேட்டறிந்த அவர் அங்குள்ள பாடசாலைக்குச் சென்று கற்றல் உபகரணங்களையும் அன்பளிப்புச் செய்தார்.
இக்கிராமங்களில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புக்களில் மக்களால் முன்வைக்கப்பட்ட கருத்துகளுக்கும் கேள்விகளுக்கும் கோரிக்கைகளுக்கும் பதிலளித்து உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
நான் ஆன்மீகவாதியாக இருந்து அரசியலுக்குள் பிரவேசித்து பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட வேளை ஆளும் கட்சியில் இணைந்து இந்து சமய விவகார அமைச்சர் பதவியை ஏற்கப் போவதாக எனது அரசியல் எதிரிகள் அதாவது அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கும் எம்மவர்கள் பிரசாரங்களை மேற்கொண்டார்கள்.
சிலர் என்னுடன் வந்து பேரம் பேசினார்கள். எனது கொள்கைப்பற்றை அவர்களிடம் எடுத்துரைத்து அவர்கள் வந்த வழியால் போகவைத்தேன். நான் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி கொள்கையுடையவன். இது நான் அரசியலுக்கு வந்த பின்பு அல்ல. எனது பெற்றோர்கள் அந்தக் கட்சி கொள்கையுடையவர்கள். இதனால் எனது குடும்பம் கூட அரசியல் பழிவாங்கல்களுக்குள்ளானது. என்னைப் பொறுத்தவரை பிச்சை எடுத்தாலும் என் இனத்தைக் காட்டிக் கொடுக்கவோ அற்ப சொற்பங்களுக்காக அரசுடன் இணையவோ மாட்டேன்.
இன்று எமது எல்லைப் பிரதேசம் பேரினவாத சக்திகளினால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக மட்டக்களப்பு, பொலநறுவை மாவட்ட எல்லையில் மகா வலித் திட்டத்தின் கீழ் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சிங்கள ஊர்காவல் படையினருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனை அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளால் தட்டிக்கேட்கவும் முடியாது. சுட்டிக்காட்டவும் முடியாது. அவர்கள் வாய்மூடி மௌனிகள். ஆனால் ஒன்று மட்டும் செய்வார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டும் விமர்சிப்பார்கள். அதற்கு மட்டும் அவர்களுக்கு திறமை உள்ளது.
இந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஓட்டமாவடி பிரதேச சபை நிர்வாகத்திற்குட்பட்டவர்கள். உள்ளூராட்சி சபை நிர்வாகத்தில் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனமை குறித்து இங்கு கவலை வெளியிடப்பட்டது.
ஏறாவூர் நகர சபைத் தேர்தலில் கட்சிகளுக்கிடையான போட்டித் தவிர்ப்பு அல்லது கட்சி சார்பற்ற சுயேச்சைக் குழு தொடர்பான அப்பிரதேச தமிழ் பிரமுகர்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றியளித்தது. இவ்வாறான முயற்சி ஓட்டமாவடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட போதும் இறுதி நேரத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் வேட்புமனுத் தாக்கல் செய்ததால் எமது கட்சியும் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நிலை ஏற்பட்டது. இதற்கு நாம் பொறுப்பல்ல. இதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செய்த சதியே காரணம். இவர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டிருந்தால் ஓட்டமாவடி பிரதேச சபையில் தமிழ் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட்டிருக்குமெனத் தெரிவித்தார்
No comments:
Post a Comment