எல்லா நாசங்களுக்கும் நாம் காரணமல்ல நோர்வேயின் புதிய அறிக்கை.. மாவீரர்நாள் நேரத்தில் இந்த அறிக்கை மிகவும் கவனத்திற்குரியதாகும்….
புலிகளை ஒழிப்பதிலேயே குறியாக இருந்தது இந்தியா. இலங்கையின் போர் உந்துதலுக்கு அதுவே முக்கிய காரணம்: நோர்வே
பொதுமக்களின் இழப்புக்களைக் குறைக்குமாறு ஒரு சில கோரிக்கைகளையே (2008இன் இறுதிப் பகுதியில்) விடுத்த இந்திய அரசு, இலங்கை இராணுவத்தின் வலிந்த தாக்குதல்களையும் போரையும் ஆணித்தரமாக ஆதரித்ததுடன் புலிகளை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. அதுவே இலங்கை அரசின் போர் முனைப்புக்கு உந்துதலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இவ்வாறு நோர்வேயில் நேற்று வெளியிடப்பட்ட, இலங்கையில் அமைதி முயற்சிகள் தோற்றதற்கான காரணங்கள் தொடர்பிலான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் ஒஸ்லோவில் நேற்று இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இலங்கை அமைதி முயற்சிகளில் நோர்வேயின் பங்குப் பணிகளை மீளாய்வு செய்யும் இந்த அறிக்கையை நோர்வே அரசின் நிதி உதவி மற்றும் பங்களிப்புடன் நோராட் நிறுவனம் மேற்கொண்டது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மத்திய மற்றும் தெற்கு ஆசியப் பிராந்தியத்துக்கான முன்னாள் துணைச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் மற்றும் நேர்வே அமைச்சரும் அமைதி முயற்சிகளின் அனுசரணையாளருமான எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இலங்கையில் 1997 முதல் 2009 வரை நோர்வே மேற்கொண்ட சமாதான முயற்சிகள் பற்றி இந்த அறிக்கை விரிவாக ஆராய்கின்றது.
நோர்வே வெளிவிவகார அமைச்சின் ஆவணங்கள், அமைச்சு மட்டப் பிரமுகர்களின் கருத்துக்கள் என்பன ஆராயப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஊடகத் தகவல்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் அனேக உபஆய்வுகளும் நடத்தப்பட்டுள்ளன. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கையின் அமைதி முயற்சிக்கான தோல்விக்கு முற்றுமுழுதாக நோர்வேயைப் பொறுப்புக்கூற முடியாது. போரை விரும்பிய இரு தரப்பினருமே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.
இலங்கையின் அமைதி முயற்சிக்கான தோல்விக்கு முற்றுமுழுதாக நோர்வேயைப் பொறுப்புக்கூற முடியாது. போரை விரும்பிய இரு தரப்பினருமே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.
அதேவேளை, உள்ளகப் பேச்சுக்களின் வாயிலாக பல நற்பலன்கள் கிட்டின. இதற்கு நோர்வேயின் பெரும் பங்களிப்பே காரணமாக இருந்துள்ளது. இத்தகைய நற்பலன்களின் போர் நிறுத்த உடன்படிக்கையும் ஒன்று. ஒஸ்லோ மாநாட்டில் சமஷ்டித் தீர்வை அடைவதற்கும் ஆழிப் பேரலை அழிவுக்குப் பின்னரான கூட்டு நிர்வாகப் பொறிமுறைக்கும் இரு தரப்பும் இணங்கியிருந்தன.
அப்போதைய கள நிலைவரத்தின் அடிப்படையில் போர் நிறுத்த ஒப்பந்தம் சாதகமான பயனையே தந்திருந்தது. ஆனால் அனைத்தும் அற்ப ஆயுளுடன் முடிந்துவிட்டன. போர் மூலம் பிரச்சினைக்கு முடிவு கட்டும் இலங்கை அரசின் முயற்சியின் மூலம் நோர்வேயின் சமாதான முன்னெடுப்புக்கள் முட்டுக்கடைக்கு இலக்காகின.
மிக முக்கியமாக, 2004ம் ஆண்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் பிளவுண்டது, ராணுவ சமநிலையை, அரசுக்குச் சாதகமாக மாற்றியது என்று இந்த அறிக்கை கூறுகிறது.
இந்த பிளவுக்குப் பிறகு, இரண்டு தரப்புகளுமே மற்ற தரப்புக்கு குறிப்பிடத்தக்க சலுகைகளைக் காட்டவேண்டியதற்கான தேவையைக் குறைத்துவிட்டது என்று இந்த அறிக்கை கூறுகிறது.
நான்காவதாக, ஐக்கிய தேசிய கட்சி அரசு இந்த அமைதி வழிமுறையை, பாதுகாப்பு உத்தரவாதங்கள், சர்வதேச கொடை வழங்கும் நாடுகளிடம் நிதி உதவி, மற்றும் அரசியல் ரீதியாக சிக்கலான பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவை மூலம், சர்வதேச மயமாக்க எடுத்த முயற்சிகள் சிங்கள தேசிய வாத எதிர்வினையைத்தான் தூண்டின என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
இதன் விளைவாக, ஒரு தேசியவாத முனைப்புள்ள கட்சி இலங்கையில் ஆட்சிக்கு வர உதவியது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த புதிய அரசு ஆசிய நாடுகளின் ஆதரவுடன் புதிய சர்வதேச பாதுகாப்பு வலையத்தைத் தனக்கு ஆதரவாக அமைத்துக்கொண்டு, விடுதலைப்புலிகள் மீது மேலும் கடுமையான ஒரு அணுகுமுறையை எடுக்கவே உதவியது.
இதன் மூலம் மஹிந்த அரசு இந்த மோதலுக்கு ராணுவ ரீதியான தீர்வை முக்ன்னெடுக்க வழி பிறந்தது.
ஒரு பலவீனமான, மென்மையான நோர்வேயால், இந்த இயங்கு சக்திகளை எதிர்க்க முடியவில்லை என இந்த அறிக்கை கூறுகிறது.
ஒரு கேந்திர தொலை நோக்கு திட்டம் இல்லாமல், துடிப்புடன் செயல்படக்கூடிய சர்வதேச வலையமைப்பு இல்லாமல், இந்த அமைதி வழிமுறை பாதிக்கப்பட்டது என்றும் இருதரப்புகளும், பின் வாங்கமுடியாத விட்டுக்கொடுப்புகளையும், உறுதிமொழிகளையும் தரவைப்பதற்கும் , அவற்றை இருதரப்பும் கடைப்பிடிக்கச் செய்வதற்கும் நோர்வேயால் இயலாமல் போனது என்று இந்த அறிக்கை கூறுகிறது.
மேலும், இலங்கையின் அரசியலில் ஒரு சதுரங்கப் பகடையாக பயன்படுத்தப்படுவதை உணர்ந்து, அதை தடுத்திருக்கவேண்டும். 2006ம் ஆண்டு ஜெனிவா பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தபோது, மத்யஸ்த முயற்சிகளிலிருந்து நோர்வே விலகிக்கொண்டிருக்க வேண்டும் என்று குன்னார் செர்போ தெரிவித்துள்ளார்.
இந்த அமைதி வழிமுறையிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் நிறைய இருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது..
உண்மையில் இரு தரப்பினருக்கும் இடையில் அடிப்படை மாற்றங்களை முடுக்கி விடுவதில் நோர்வே தோல்வி கண்டது. வேதனைக்குரிய தடங்கல்கள் போர் நிறுத்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கும் பேச்சுக்களுக்கும் குந்தகமாக அமைந்தன. இதையடுத்து “”போரின்றி சமாதானமில்லை” என்ற நிலைப்பாடு உருக்கொண்டது. போரின் உக்கிரமும் பகைமை உணர்வும் 2009 மே மாதத்தில் விடுதலைப் புலிகளின் தோல்வியோடு முடிவுக்கு வந்தது.
இந்தியாவின் பங்குப் பணி இலங்கையின் அமைதி முயற்சிகளுக்கு இந்தியா வெளிப்படையாக ஆதரவு வழங்குவதாகக் காட்டி வந்தாலும், புலிகளை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கும்படி நோர்வேயை சத்தமின்றி மிரட்டி வந்தது.
2004இல் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, தமிழர்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்து வந்தது. ஆனால், போர் தொடுப்பது என்ற மஹிந்த அரசின் தெரிவு மீது அது எந்தவித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை. தனிப்பட்ட கலந்துரையாடல்களின்போது, நோர்வே அரசு அளவுக்கதிகமாகப் புலிகள் சார்ந்து செயற்படுவதாக இந்தியா விசனப்பட்டது. புலிகளை வைக்க வேண்டிய இடத்தில் வைக்குமாறு அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியது.
இலங்கைக்கு “ராடர்”களையும் புலனாய்வுத் தகவல்களையும் இந்தியா வழங்கியது. தாக்குதல் ஆயுதங்களை வழங்குவதில்லை என்ற தனது நிலைப்பாட்டை புதுடில்லி தொடர்ந்தாலும் இலங்கை அரசு அத்தகைய ஆயுதங்களை வேறு எங்கும் வாங்குவதை எதிர்க்கவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிர் என்ற இந்திய அரசின் நிலைப்பாடு, இலங்கை அரசை புதுடில்லி ஆதரிக்கிறது என்று பொருள்கொள்வதற்கு உந்துதலானது.
புலிகளின் இறுதி நாள்கள்போராளிகளைச் சுற்றிவளைத்த இராணுவத்தின் பிடி இறுக இறுக, புலிகளைச் சரணடையச் செய்வதில் கொழும்புக்கு படிப்படியாக ஆர்வம் குறைந்து கொண்டே வந்தது. போரின் முடிவில் புலிகள் இயக்கம் தப்பிப் பிழைப்பதில் இந்தியா ஆர்வம் காட்டியதா என்பதும் கேள்விக்குரியதே. இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்த போது தாக்குதலை நிறுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுக்கப் போவதில்லை என்பதும் தெளிவாகியது.
புலிகளின் தோல்வியும் இந்தியாவில் நடந்த பொதுத்தேர்தலும் ஒரேவேளையில் வந்தமை குறித்து இலங்கை அரசு கவலை கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சி தூக்கியெறியப்பட்டு வேறு யாரும் பதவிக்கு வந்தால் புலிகளுக்கு உதவி கிடைக்கலாம் என்று அது குறிப்பிட்டது.
இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பு கொண்டு, முன்வரைவு அறிக்கையை ஏற்று ஆயுதங்களை கீழே போட உடன் இணங்க வேண்டும் என்று ஆலோசனை கூறினார். (எப்படித் தொடர்பு கொண்டார் என்று அறிக்கை கூறவில்லை) ஆனால் இந்த நகர்வு புலிகள் ஆதரவு அரசியல்வாதியான வைகோவுக்கு கசிந்ததும், இது காங்கிரஸின் தந்திரம் என்று கூறி அதனை நிராகரிக்குமாறும், தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்துப் புலிகளை மீட்கும் என்றும் கூறினார்.
ஆனால் அது நடக்கவில்லை. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தபோது புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தார். காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருந்தது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : உதயன்
இதோ முழுமையான அறிக்கை :
No comments:
Post a Comment