Translate

Saturday 12 November 2011

யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்கிறார் மஹிந்த


யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்கிறார் மஹிந்த
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நடத்திய விசாரணைகளின் மூலம் எவரேனும் யுத்தக் குற்றச் செயல்களிலோ அல்லது மனித உரிமை மீறல்களிலோ ஈடுபட்டதாக தெரிய வந்தால் அவர்களை பாதுகாக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வதில்லை எனவும், இந்திய மீனவர்களை இனி கைது செய்யக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்திய மீனவர் பிரச்சினை குறித்து உங்களது பிரதமருக்கு விளக்கியுள்ளதாகவும், கடந்த ஒரு ஆண்டு காலப்பகுதியில் சுமார் 40000 படகுகள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த நிலைமை எமக்கும் பிரச்சினையாக அமைந்துள்ளது, எனினும் மீனவர்களை கைது செய்யவில்லை. பிரதமரின் கோரிக்கையினால் மீனவர்கள் கைது செய்யப்படவில்லை. ஆரம்பத்தில் கடற்படையினர் மீனவர்களை தடுத்து நிறுத்தினர். தற்போது மீனவர்களை கைது செய்யக் கூடாது என கடற்படையினருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
யாழ்ப்பாண தமிழர்கள் மீள் குடியேற்றப்பட்டார்களா, அவர்களின் வாழ்வதார வசதிகள் எவ்வாறு அமைந்துள்ளன போன்ற கேள்விகளை இந்திய அரசியல்வாதிகள் எழுப்புகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதேபோன்று இந்திய மீனவாகளின் நடவடிக்கைகளினால் வடக்கு மீனவர்களின் வாழ்வதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை இந்திய அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும், இவ்வாறான நடவடிக்கைளின் மூலம் யாழ்ப்பாண மீனவர்களின் உரிமைகள் முடக்கப்பட்டுள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இந்திய மீனவர்கள் இலங்கைத் தமிழ் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி எடுக்க வேண்டும் எனவும், அரசாங்கங்களின் தலையீடு அவசியமில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 
நல்லிணக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 95 வீதமான மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்னோக்கிய நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன் ஓர் கட்டமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஒன்றரை மாதமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்கா, பிரித்தானிய போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்து பிரச்சாரம் செய்து வருகின்றனர் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
உள்ளகப் பிரச்சினை குறித்து அவர்கள் எவ்வாறான பிரச்சாரம் மேற்கொள்கின்றார்கள் என்பது எனக்குத் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
பிரச்சினைகள் குறித்து இலங்கை அரசாங்கத்துடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பாராளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை உருவாக்கும் யோசனைத் திட்டத்தை அரசாங்கம் முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
அந்தக் குழுவிற்கான தமது பிரதிநிதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் முன்வைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 
ஆளும் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து ஓர் தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதே மிகவும் பொருத்தமாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
19ம் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் எனவு; அவர் தெரிவித்துள்ளார்.
 
உடனடியாக பகிரங்கப்படுத்த முடியாது எனவும் அதனை ஆராய்ந்து பாராளுமன்றில் சமர்ப்பித்து அதன் பின்னரே பகிரங்கப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
குற்றச் செயல்களில் ஈடுபட்ட எவருக்கும் அடைக்கலம் கொடுக்கத் தயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி: NDTV

No comments:

Post a Comment