நீதிக்கான நடைப்பயணம் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன் நிறைவடைந்தது!
தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை முன்னிறுத்தி பிரித்தானிய மக்களிடமும், பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு முன்னெடுக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் லண்டனில் நிறைவடைந்துள்ளது. பிரித்தானிய பிரதமர் அலுவலக வாசல்தலத்தின் முன் நிறைவுகண்ட இந்த நடைப்பயணம் மன்செஸ்டர் நகரில் இருந்து 29-10-2001 அன்று தொடங்கியிருந்தது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதியான ஜெயசங்கர் முருகையா அவர்களோடு இந்த நடைப்பயணத்தில் குமார், சிவச்சந்திரன், தேவன் ஆகிய விடுதலைச் செயற்பாட்டாளர்களுடன், அயர்லாந்து நாட்டவரான பொல் அவர்களும் இணைந்திருந்தார்.
நடைப்பயண செயல்வீரர்களை பெருந்திரளானவர்கள் ஒளிவிளக்கேந்தி வரவேற்றனர். ஐந்து கோரிக்கையடங்கிய 'நீதிக்கான நடைப்பயண மனுவை' பிரதமர் அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டது.
உலகத் தமிழர் பேரவைத்தலைவர் அருட்தந்தை இமானுவேல், பிரித்தானிய தமிழர் பேரவைத் தலைவர் சுகந்தகுமார், அரசியல் ஆயவறிஞர் பி.ஏ.காதார், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரித்தானிய கிளைப் பிரதிநிதி கலாநிதி ரவி,ஊடகவியலாளர் தினேஸ், கறோ நகரசபை உறுப்பினர் சுரேஸ் கிருஸ்ணா, மனிதநேய தமிழர் அமைப்பு பிரதிநிதி சேனன், பிரித்தானிய தமிழர் ஒன்றிய இணைப்பாளர் ரஞ்சன், தமிழ் இளையோர் அமைப்பு பிரதிநிதி விமல், தமிழர் அமைப்பு பிரிதிநிதி ஞானம், அக் நௌவ் பிரதிநிதி ரிம் மார்டீன் ஆகிய அமைப்பு பிரிதிநிதிகளுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் தணிகாசலம் தயாபரன், மாவீரர் குடும்ப- முன்னாள் போராளிகள் நலம்பேணல் அமைச்சர்- துணைப் பிரதமர் உருத்திராபதி சேகர், பெண்கள் - முதியோர் - சிறுவர் விவகாரத்துறை அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ், நிதித்துறை துணை அமைச்சர் இஜேந்திரா நடராஜா ஆகிய மக்கள் பிரிதிநிதிகளும் உரைநிகழ்த்தினர்.
நா.த.அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் உரையினை, துணைப்பிரதமர் உருத்திராபதி சேகர் அவர்கள் வாசித்தார். நீதிக்கான நடைப்பயணத்துக்கு உறுதுணை வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் தனது நன்றியைத் ஜெய்சங்கர் முருகையன் அவர்கள் எடுத்துரைத்தார்.
நீதிக்கான நடைப்பயணத்தின் கள ஒருங்கிணைப்பினை யோகி அவர்களும், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பினையும் சுயே சுயாதரன் அவர்கள் மேற்கொண்டிருந்தனர். நீதிக்கான நடைப்பயணத்தின் ஐங்கோரிக்கைகள்:
- ஈழத்தமிழர்களின் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதிகளின் இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்காக ஒரு சுயாதீனமான, நீதியான, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்.
- ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதோடு, தமிழீழத்தில் சர்வதேச சமுகத்தின் மத்தியஸ்தத்துடன் கூடிய ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்படல் வேண்டும்.
- ஈழத்தமிழர்களை ஒரு முற்றான இன அழிப்பிலிருந்து காப்பாற்றும் முகமாகவும், சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தின் கொடுமைகளை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரும் ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முகமாகவும், தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் தனியாட்சி உரிமையினை அங்கீகரிக்க வேண்டும்.
- சிறிலங்காவின் கொடுஞ்சிறைகளினுள்ளே அடைபட்டு, துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து ஈழத்தமிழ் பொதுமக்களும், முன்னாள் போராளிகளும் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும்.
- தமிழீழத்தில் சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் யாவும் உடனடியாக நிறுத்தப்படுவதோடு, அனைத்து ஈழத்தமிழர்களும் அவர்களது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படல் வேண்டும்.
No comments:
Post a Comment