Translate

Saturday, 19 November 2011

பட்டைக்கிடங்கில் போட்ட கல்லான நோர்வே அறிக்கை..

பொது மக்களை கொல்வதை நிறுத்த மூன்றே மூன்று நாட்கள் எச்சரிக்கை அவகாசம் கொடுத்துள்ள அரபுலீக்குடன் ஒப்பிட்டால் இந்தியா 140.000 பேர் கொல்ல எதுவும் சொல்லாமல் இருந்திருக்கிறதென்றால் அதை ஒப்பிட்டு பேச வேண்டிய பொறுப்பு யாருக்கு இருக்கிறது.


பட்டைக்கிடங்கில் போட்ட கல்லான நோர்வே அறிக்கை..
Posted Image

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகும் இந்த அவலம் உலகிற்கு தேவையா..?


இலங்கைக்குள் நோர்வே பேச்சுவார்த்தை தூதுவனாக போனபோது கடைசியில் நோர்வே படிக்கப்போகும் பாடம் இதுதான் என்று ஆரம்பித்த முதல்நாளே அலைகளில் எழுதியிருந்தோம்.

இந்த அவலம் வராமல் தடுக்க வேண்டுமானால் சிங்கள அரசு, இந்திய அரசு, விடுதலைப்புலிகள் பயணிக்க வேண்டிய புதிய பாதை எதுவென்று ஐ.பி.சியின் புலம் சஞ்சிகையின் முதாலவது இதழிலேயே எழுதியிருந்தோம். இவை பழைய கதை.

இப்போது நோர்வேயின் அறிக்கை வெளியாகியுள்ளது, முறைப்படி பார்த்தால் அதைப்பற்றி புலம் பெயர் ஊடகங்கள் அதிகம் பேசியிருக்க வேண்டும் – பேசவில்லை.

மேடைக்கு மேடை புலிகள் பற்றிப் பேசும் வை. கோபாலசாமி தன்னுடைய பெயர் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பின்னரும் அதுபற்றி வாய் திறக்கவில்லை. இந்தியாவில் வீறாப்பாக கருத்துரைக்கும் பத்திரிகைகள் எதுவும் நோர்வே அறிக்கையைத் தொட்டும் பார்க்கவில்லை.

சிறீலங்காவோ இராஜதந்திர ரீதியில் அணுகப்போவதாகக் கூறிவிட்டு வாலைச் சுருட்டிவிட்டது. குற்றவாளியாக நிற்கும் சர்வதேச சமுதாயமும் நோர்வேயின் அறிக்கையைப் பெரிதுபடுத்தவில்லை.

தண்டிக்கப்படாத ஒரு மாபெரும் போர்க்குற்றம்… என்று சனல் 4 கூறும் இந்த விவகாரம்பற்றி யாரும் அக்கறைப்படாத காரணமென்ன..?
ஒன்று..
நோர்வேயின் அறிக்கை எவரையும் திருப்திப்படுத்தவில்லை, கசப்பான உண்மைகளை முன் வைத்திருக்கிறது. நோர்வேயும் சமாதான பேச்சுக்களை முன்னெடுக்க தகுதியற்ற நாடு என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளது.

இரண்டு..
எல்லோரையுமே குற்றவாளிகளாக தெரிவிப்பதால் எந்தக் குற்றவாளியும் இதைக் கையிலெடுக்க தயாரில்லை.. அது பட்டைக்கிடங்கில் போட்ட கல்லாகக் கிடக்கிறது.

அந்த அறிக்கையில்..
சோனியா அரசு எடுத்த தப்பான முடிவும், பழிவாங்கும் அரசியல் ஆவேசமும் தெட்டத்தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள் திருடன் கையில் தேள் கொட்டியது போல மௌனமாக இருக்க இது பிரதான காரணம்.

மறுபுறம்..
சிறீலங்கா அரசு சர்வதேச சமுதாயத்தை தப்பாக பயன்படுத்தியுள்ளது. புலிகள் சரணடைய முன்வந்தபோதும் படுகொலை செய்ய வாய்ப்பு கிட்டிவிட்டதை அறிந்ததும், அது படுகொலைஞனாக மாறியது என்று நோர்வே தெளிவாக எழுதியுள்ளது.

சிங்கள இனவாதத்திற்கு இதைவிட வேறென்ன வரையறை வேண்டும்..
வாய்ப்புக்கிடைத்தால் கொல்லும் வக்கிர மனம் கொண்டது சிங்கள அரசு..
பக்கத்துவீட்டில் பாலியல் வல்லுறவும் படுகொலையும் நடந்தாலும் பார்த்துக் கொண்டிருப்பாள் பாரதமாதா என்பதை வடதுருவத்தில் இருந்து ஒரு நாடு அம்பலப்படுத்தியுள்ளது.
எல்லாவற்றையும்விட இந்த அறிக்கையில் உள்ள வரியொன்று மிக முக்கியமானது..

புலிகளை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டுமென இந்தியா நோர்வேயை தொடர்ந்து மிரட்டி வந்தது – இதுதான் அந்த வரி.

வைக்க வேண்டிய இடமென்றால் என்ன..?

வைக்க வேண்டிய இடம் : மேல்தட்டு – கீழ்த்தட்டு விவகாரமல்லவா..?

இது ஆரிய துவேஷ மனமல்லவா..?

இதுதானே சிங்கள அரசுக்கும் உள்ளது. பௌத்த – ஆரிய மனப்பான்மையில் நின்று அது தமிழரை அழித்துள்ளது.

இப்போது கணக்கைக் கூட்டிக் கழித்துப் பாருங்கள்..

அழித்தவரும், அழிவைப் பார்த்தவரும் ஆரிய துவேஷ மனத்துடன் செயற்பட்டனர் என்பதை தத்துவார்த்தமாக அறிக்கை நிறுத்துக் காட்டுகிறது.
இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வுக்கு இந்த பகுத்தறிவற்ற நிலைதான் பிரதான தடை!!

ஹிட்லர் யூதர்களிடம் காட்டிய அதே துவேஷம்.. ஹிட்லரின் அதே தூய ஆரிய மனப்பான்மை..

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகும் இந்த அவலம் உலகிற்கு தேவையா..?
நம்மிடமிருந்து அந்தக் கேள்வி வரவில்லை..

இனி.. புலிகளுக்கு வருவோம்..

இந்த இரு பெரும் நெருக்கடிக்குள் புலிகளையும் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தாகவும், அவர்களும் தூரப்பார்வையற்ற போராளிக் குழுவாக இருந்ததாகவும் நோர்வே சுட்டிக் காட்டுகிறது.

இது அறிக்கை.. இதற்கு ஒரு வட்டமான முற்றுப்புள்ளி போடுவோம்…

இனி என்ன செய்ய வேண்டும்.. அதுதான் கேள்வி..
இந்த அறிக்கையின் முக்கியத்துவத்தை சரியாக கையில் தூக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு இருக்கிறது.. அது தமிழர் கூட்டமைப்பிற்கே இருக்கிறது.

காரணம்…

போர்க்குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட யுகோசுலாவிய சொலபடான் மிலேசெவிச், ஈராக் சதாம் உசேன், லிபியக் கடாபி, எகிப்து கொஸ்னி முபாரக், சிரிய பஸார் அல் ஆஸாட் போன்றவர்கள் மீது போர்க்குற்றம் சாட்டிய மேலை நாடுகள் அந்தத் தேசத்தையோ அரசையோ முற்றாகக் குற்றவாளியாகக் காட்டவில்லை. தனி நபர்களையே குற்றம் சுமத்தியது..

ஆனால் முதல் தடவையாக..

ஒரு நாட்டின் முழுமையான இறைமையுள்ள அரசே குற்றவாளி என்ற கருத்து முன் வைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் சமாதானத்தில் ஈடுபட்ட ஒரு நாடு முன் வைத்திருக்கிறது.

எவ்வளவு பெரிய விடயம்…!!!

இப்படியொரு குற்றச்சாட்டை முன்னரே வைக்கும்படி ஐ.நா செயலரோடு நோர்வே போராடியிருக்கிறது. பின் தகுதியற்ற ஒருவர் ஐ.நா. செயலராக வந்தது உலகிற்கே சாபக்கேடு என்றும் கூறியதும் தெரிந்ததே.

என்றோ ஐ.நா வெளியிட்டிருக்க வேண்டிய அறிக்கையை இன்று காலதாமதமாக நோர்வே தன் பெயரில் வெளியிட்டிருக்கிறது.

இதைவிட தமிழர் கூட்டமைப்புக்கு வேறென்ன வாய்ப்பு வேண்டும்…?

இனியாவது தமிழர் கூட்டமைப்பு பயந்து பயந்து கருத்துக்களைக் கூறும் நிலையில் இருந்து வெளிப்பட்டு, இந்த அறிக்கையை கையில் எடுத்து தமிழ் மக்களின் தார்மீக உரிமையைப் பேச முன்வர வேண்டும்.

எந்தவொரு சக்திக்கும் பயந்து நடக்க வேண்டிய தேவை இல்லை என்ற முடிவுக்கு அவர்கள் வர இந்த அறிக்கை போதுமானது.

சிரியாவில் 3500 பொது மக்களை கொலை செய்த குற்றத்திற்காக நேற்றுக் கூடிய 22 நாடுகளின் அரபு லீக் படுகொலைஞன் பஸார் அல் ஆஸாட்டுக்கு முன்று தினங்கள் மட்டும் அவகாசம் கொடுத்துள்ளது.

பொது மக்களை கொல்வதை நிறுத்த மூன்றே மூன்று நாட்கள் எச்சரிக்கை அவகாசம் கொடுத்துள்ள அரபுலீக்குடன் ஒப்பிட்டால் இந்தியா 140.000 பேர் கொல்ல எதுவும் சொல்லாமல் இருந்திருக்கிறதென்றால் அதை ஒப்பிட்டு பேச வேண்டிய பொறுப்பு யாருக்கு இருக்கிறது.

அரபுலீக்கை உதாரணம் காட்டி ஒரு வார்த்தை பேசியதா கூட்டமைப்பு..?

சிங்கள அரசுடன் ஒப்பந்தம் செய்து ஆங்காங்கு தமிழரை சிங்கள அரசிடம் பிடித்துக் கொடுக்கும் தென்னாசிய, கிழக்கு ஆசிய நாடுகளுடன் இவ் அறிக்கையைக் காட்டி கூட்டமைப்பு பேச வேண்டும். அரபுலீக்குடன் ஒப்பிட்டால் என்ன சீரழிவுக்கு நீங்கள் அயல் நாடுகளாக இருக்கிறீர்கள் என்ற கண்டனக்குரலையாவது பதிவு செய்திருக்க வேண்டாமா..?

இல்லையே..

அப்படியானால் நாங்கள் ஏன் கறுப்புக் கோட் போட்ட சட்டத்தரணிகளாக இருக்கிறோம்..? மனது கேட்கிறது.

பாகிஸ்தான்..
மியன்மார்..
வங்காளதேசம்..
மாலைதீவு..
மலேசியா..
கமபோடியா..
தாய்லாந்து..
சிங்கப்பூர்..
ஜப்பான்..
சீனா..

போன்ற இந்து, பசுபிக் பிராந்திய நாடுகள் 140.000 பேர்; மரணத்திற்கு பொறுப்புக்கூறவில்லை என்றால் அவை என்ன சீரழிவுக்காக நமது அயல் நாடாக இருக்கின்றன.

மானமுள்ள தமிழன் கேட்கவேண்டாமா..?

இவ்வளவு இழப்புக்களுக்கு பின்னாவது அமைதி வாழ்வை வலியுறுத்த முடியாவிட்டால் இந்த நாடுகள் என்ன சீரழிவுக்காக தமிழர் அரசியல் வாழ்வில் தலையிடுகின்றன..?

அழிந்து போன இனம் கேட்க வேண்டாமா..?

கேட்க வேண்டும்.. யார்?
கூட்டமைப்பு கேட்கவேண்டும்…

இல்லையேல்..
கூட்டமைப்பு என்ன சீரழிவுக்கு இருக்கிறதென மற்றவர்கள் கேட்க அதிக நாட்கள் எடுக்காது..

http://www.alaikal.com/news/?p=88114 

No comments:

Post a Comment