Translate

Friday 16 December 2011

கவனத்தை திசை திருப்ப 13ம் திருத்தச்சட்டத்தை பாவித்த ஸ்ரீலங்கா:விக்கிலீக்ஸ் !

கவனத்தை திசை திருப்பும் நோக்கில் இலங்கை அரசாங்கம் 13ம் திருத்தச் சட்ட மூலத்தை பயன்படுத்தியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா ஆகியோர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளனர். இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜதந்திரத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


நீண்ட கால அரசியல் தீர்வுத் திட்டம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதனை தவிர்ப்பதற்காக அரசாங்கம் 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளனர். 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் திகதி முதல் 8ம் திகதி வரையில் அரசாங்க அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோருடன் நடைபெற்ற சந்திப்புக்கள் தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் தகவல்களை அனுப்பி வைத்துள்ளது.

2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் திகதி அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டீனாசினால் இந்தத் தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாற்றுக் கொள்கைகளுக்காக கேந்திர நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து, தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா, கொழும்புப் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன், சவூதி அரேபியாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாவெட் யூசுப் ஆகியோருடன் நடத்தப்பட்ட சந்திப்பினை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் சமூகத்தின் பிரச்சினைகள், இடம்பெயர் மக்கள் சுதந்திரமாக நடமாடுதல், அரசியல் சாசனத் திருத்தம் போன்றன தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இடம்பெயர் மக்களை தடுத்து வைத்தல் இலங்கை சட்டத்திற்கு முரணானது என பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார். தேர்தல் முறைமையில் மாற்றம், சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களின் அவசியம் ஆகியனவற்றை குறித்த புத்திஜீவிகள் வலியுறுத்தியுள்ளனர். அதிகாரப்பகிர்வு, 13ம் திருத்தச் சட்ட மூலத்தின் பலவீனங்கள், மாகாணசபைகளுக்கு அரசாங்கம் போதியளவு அதிகாரங்களை வழங்காமை போன்ற தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி 17ம் திருத்தச் சட்ட மூலத்தை அமுல்படுத்தாமை, ஆணைக்குழுக்கள் அரசியல்மயப்படுத்தல் போன்ற விடங்கள் குறி;த்து பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: கொலம்போ ரெலிகிராப்

No comments:

Post a Comment