Translate

Friday, 16 December 2011

லண்டனில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்களை CID விசாரணை !


இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து பிரித்தானியாவில் அகதி அந்தஸ்த்து கோரிய 55 இலங்கையர்கள் அகதி அந்தஸ்த்து மறுக்கப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டு இன்று காலை 11.25 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. பிரித்தானிய எல்லை பாதுகாப்பு பிரிவினர் விசேட விமானம் ஒன்றின் ஊடாக இவர்களை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர். இவ்வாறு பிரித்தானியாவால் நாடு கடத்தப்பட்டுள்ள 55 பேரில் 48 ஆண்களும் 7 பெண்களும் அடங்குகின்றனர். இவர்களில் 39 தமிழர்கள், 9 முஸ்லிம்கள் மற்றும் 7 சிங்களவர்கள் அடங்குகின்றனர்.


இவர்களை இலங்கை குடிவரவு அதிகாரிகளிடம் கையளித்த மறு நிமிடமே பிரித்தானிய அதிகாரிகள் இருவர் கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர். இதனைத் தொடர்ந்து 39 தமிழர்கள் மீது இன்னும் விசாரணைகள் நடைபெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாலை 3.00 மணியளவில் அவர்களை தாம் விட்டுவிடுவோம் என CID யினர் தெரிவித்திருந்தபோதும் அவர்களில் சிலரை இதுவரை விடுவிக்கவில்லை என்ற தகவல்களும் தற்போது கசிந்துள்ளது. மேலும் இந்த 39 தமிழர்களில் சிலரை 4ம் மாடிக்கு கொண்டு சென்று விசாரணை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

லண்டனில் அகதி அந்தஸ்த்துக் கோரியவர்கள் பதுளை, யாழ்ப்பாணம், களுவாஞ்சிக்குடி, வவுனியா, திருக்கோணமலை, வத்தளை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில் மாணவர் விசாவில் இருந்தமை, உரிய ஆவணங்கள் சமர்பிக்காமை உள்ளிட்ட பல விடயங்களைக் கருத்திற் கொண்டு குறித்த 55 பேரும் பிரித்தானியாவால் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என இவர்களுடன் வந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 9 முஸ்லீம்களையும் 7 சிங்களவர்களையும் இலங்கை குடிவரவு அதிகாரிகள் உடனே விடுதலை செய்துவிட்டதாக கட்டநாயக்கா விமாநிலையத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment