தனி ஒரு மனிதரான ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகனங்களுக்காக மட்டும் ஆறு மாதங்களுக்கு 293 கோடி ரூபாவை செலவிட்டுள்ள அரசு, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களை முற்றாகப் புறக்கணித்துவிட்டது என்று ஜே.வி.பி. உறுப்பினரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
வரவு செலவுத்திட்ட உரை மீதான விவாதத்தில் உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியவை வருமாறு:போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்கள் வரவு செலவுத் திட்டத்தில் ஏதாவது விமோசனம் கிடைக்கும் எனப் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், அரசு அப்பகுதி மக்களை முற்றும் முழுதாகப் புறக்கணித்துவிட்டது.
இறுதிக்கட்டப் போரின்போது வடபகுதியில் பல லட்சம் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. வடமாகாணத்தில் 27 ஆயிரம் இளம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். தாய் தந்தையரை இழந்த 5 ஆயிரம் பிள்ளைகளும், பெற்றோரில் எவராவது ஒருவரை இழந்த 12 ஆயிரம் பிள்ளைகளும் இருக்கின்றனர். இவர்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் வழங்கப்படவில்லை.
யாழ்ப்பாணத்தில் 37 ஆயிரத்து 500 வீடுகள் முற்றாகவும், 5 ஆயிரத்து 700 வீடுகள் பகுதியாகவும், முல்லைத்தீவில் 18 ஆயிரத்து 600 வீடுகள் முற்றாகவும், 14 ஆயிரத்து 520 வீடுகள் பகுதியளவிலும், கிளிநொச்சியில் 29 ஆயிரத்து 460 வீடுகள் முற்றாகவும், 33 ஆயிரத்து 800 வீடுகள் பகுதியளவிலும், வவுனியாவில் 13 ஆயிரத்து 156 வீடுகள் முற்றாகவும், 15 ஆயிரத்து 200 வீடுகள் பகுதியளவிலும் அழிக்கப்பட்டுள்ளன.இருக்க இடமும், அடிப்படை வசதிகளும் இல்லாமல் துன்பநிலையில் இருக்கும் இந்த மக்களுக்கு ஜனாதிபதி எந்தவிதமான நிவாரணங்களையும் அறிவிக்கவில்லை. ஆனால், பாதைகளையும், பாலங்களையும் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அம்மக்களின் அடிப்படைத் தேவைகள் உதாசீனப்படு த்தப்பட்டுள்ளன.
இந்த வரவு செலவுத் திட்டம் கொந்தராத்து ஒப்பந்தக்காரர்களுக்கு நன்மையளிக்கும் வரவு செலவுத் திட்டமாகவே அமைந்துள்ளது.நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். தவறான புள்ளிவிவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.மரணமடைந்த இராணுவத்தினரின் பெற்றோருக்காக ஆயிரத்து 300 மில்லியன் ரூபாவும் 70 வயதுக்குக் கூடிய வயோதிபர்களுக்கு ஆயிரத்து 300 மில்லியனும், அறநெறிப்பாடசாலைகளுக்கு ஆயிரத்து 150 மில்லியனும், கலைஞர்களுக்காக 150 மில்லியனும் நிவாரணமாக ஒதுக்கியுள்ளனர். அது யானைப்பசிக்கு சோளப்பொரியை போட்டது போலாகும் என்றார் அநுரகுமார திஸாநாயக்க.
No comments:
Post a Comment