கேரள மாநிலம் உடும்பஞ்சோலைப் பகுதியில் கேரளத்தினரால் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறப்படும் தமிழ்க் குடும்பங்கள்.
போடி, டிச. 14: கேரளத்திலிருந்து 40 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டு, விரட்டியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் கேரள அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. மேலும், கேரள மாநிலம் மூணாறு பகுதியில் வசிக்கும் தமிழர்கள், கேரள அரசை எதிர்த்து ஊர்வலமாக சென்றனர்.இதனால் அதிருப்தியும், கோபமும் அடைந்த கேரள மாநிலத்தினர், அப் பகுதியில் வசிக்கும் தமிழர்களைக் கடுமையாகத் தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.மேலும், தமிழர்களுக்குப் பணி வழங்கவும் பல கேரள எஸ்டேட் உரிமையாளர்கள் மறுத்துள்ளனர். தங்கள் எஸ்டேட்டுகளிலிருந்து வெளியேறும்படி கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பலர், தமிழகப் பகுதிகளுக்குள் தப்பி வந்துள்ளனர்.நெடுங்கண்டம் பகுதியில் காரித்தோடு, கரியன்மலை பகுதியில் வசித்து வந்த 40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இரவோடு இரவாக குதிரைப் பாதை, சாக்குலத்து மெட்டு, ராமக்கல் மெட்டு மலைப் பாதைகள் வழியாக தப்பி சங்கராபுரம், கோணாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கு உறவினர்கள் உணவு வழங்கி வருகின்றனர்.இவர்களில் பலர் மாணவர்கள். கேரளத்தில் தற்போது அரையாண்டுத் தேர்வு நடைபெறுகிறது.இந்த மாணவர்கள் நெடுங்கண்டம் பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். விரட்டியடிக்கப்பட்டதால், தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளதாக கண்ணீருடன் தெரிவித்தனர்.மேலும், தமிழர்களுக்கு மருத்துவ வசதியோ, உணவுப் பொருள்களோ கேரளத்தவர்கள் வழங்க மறுப்பதாகவும், மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கும் மறுக்கப்படுவதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.இதனிடையே, உடும்பஞ்சோலை பகுதியில் உள்ள கஞ்சிகலையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 4 குடும்பங்கள் (மொத்தம் 11 பேர்) போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை தஞ்சமடைந்தனர்.இவர்களில் 2 மாதக் குழந்தைக்கு கேரளப் பகுதியில் மருத்துவ உதவி வழங்க மறுக்கப்பட்டதால், போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. இவர்களுக்கு உணவு வசதி ஏற்பாடு செய்து கொடுத்த வட்டாட்சியர் நாகமலை கூறும்போது, கேரளத்தவர்களால் விரட்டியடிக்கப்பட்டு, தஞ்சமடைந்தவர்கள் குறித்து மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment