Translate

Saturday 10 December 2011

இராணுவத்திடம் சரணடைந்த பாலகுமாரன், எழிலன் நிலை என்ன?-சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி


நடந்து முடிந்ததாகக் கூறப்படும் இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது, பொதுமக்கள் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் பல உறுப்பினர்களும் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர்.

ஆனால் தற்போது அவர்களின் நிலை கேள்விக் குறியாக இருப்பதுடன், அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு உறவினர்கள் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.


இந் நிலையில் இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களான பாலகுமாரன் மற்றும் எழிலன் போன்றவர்கள் இருக்கின்றனரா? இல்லையா? என்பதும் தெரியாமலே இருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பினார்.

அத்துடன், கைது செய்யப்பட்டோர், காணாமல் போனோர் மற்றும் சரணடைந்தோர் தொடர்பிலான விபரங்கள் உறவினர்களுக்கு இன்னுமே தெரிவிக்கப்படவில்லை. இவை ஆரோக்கியமான விடயங்களல்ல. எனவே தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரினார். 

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீதி, புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்புகள் அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகால கட்டத்தில் ஆயிரக்கணக்ககான இளைஞர் யுவதிகள் சரணடைந்தமை சகலருக்கும் தெரிந்த விடயம்.

இதுதொடர்பில் திட்டவட்டமான தகவல்களை வெளியிடுமாறு ஜனாதிபதியிடமும் அமைச்சர்களிடமும் கேட்டோம்.  அந்த தரவுகள் கணினி மயப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். கணினி மயப்படுத்தப்பட்ட தகவல்களை எங்களுக்கோ, இன்றேல் கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களின் உறவினர்களிடமோ காண்பிக்கவில்லை.

நல்லிணக்க ஆணைக்குழுவினர் வடக்கு கிழக்கில் மேற்கொண்ட விசாரணைகளின் போது  5000 ற்கு மேற்பட்ட தாய்மார் தங்களுடைய குழந்தைகளை, கணவர்மாரை காணவில்லை என்ற விபரங்களை தெரிவித்துள்ளனர்.

தங்களுடைய குழந்தைகள் இருக்கின்றனரா?, இல்லையா? என்று தேடியறிவது குடும்பத்தின் தேவையாகும். அத் தேவையை செய்து கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

இதேவேளை, இராணுவத்தினரிடம் பொதுகள் மட்டுமின்றி போராளிகளும் சரணடைந்தனர். பாதிரியாருடன் அரசியல்துறையை சார்ந்தவர்களும் சரணடைந்தனர். பாலகுமாரன், எழிலன் போன்றவர்கள் இருக்கின்றனரா? இல்லையா? என்பதும் தெரியாமலே இருக்கின்றது.

குடும்ப உறவினர்கள், மனைவி மற்றும் பிள்ளைகள் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலையிலேயே இருக்கின்றனர்.

விபரங்கள் தெரியாமல் சில குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நிம்மதியின்றி வாழ்கின்றனர். விதவைகள் மட்டுமே வாழ்கின்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள் பெரும் அவஸ்தைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

கே.பி., கருணா போன்றோர் சுகபோகம் அனுபவிக்கின்றனர். சிறிய பிரச்சினைக்கு உள்ளானவர்களை சிறைச்சாலைகளில் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது நியாயமானதா?

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் விடுவிக்கக் கூடியவர்களை விடுவிக்க முடியும். சிறைச்சாலைகளில் அதிகாரிகளுக்கு அப்பால் சிங்கள கைதிகளும் தமிழ் கைதிகளை தாக்குகின்றனர். சிறிய தவறுக்கேனும் தாக்கப்படுகின்றனர். 

தென் பகுதியிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை வடக்கு கிழக்கு சிறைச்சாலைகளுக்கு மாற்றலாம். அதன் மூலமாக? கைதிகள் முகம் கொடுக்கும் மொழிப் பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்கள் கைதிகளை சந்திக்கலாம்.

அவசரகாலச் சட்டம் அமுலில் இல்லை என்றாலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பலரும் கைது செய்யப்படுகின்றனர். கைது எனும் பெயரில் வெள்ளை வேனிலேயே அழைத்து செல்லப்படுகின்றனர். 

ஜனாதிபதி இந்தோனேசியாவில் ஜனநாயகம் பற்றி பேசுகின்றார். யாழில் எங்களால் பேச முடியுமா? அளவெட்டியில் 5 எம்.பி. க்களுக்கு என்ன நடந்தது. துண்டு பிரசுரம் எவ்வாறானது என்பதனை விடவும் யாழ். பல்கலைக்கழகத்திற்குள் தலைகவசத்துடன் புகுந்து விளம்பர பலகைகளை உடைக்கின்றனர். அங்கு ஜனநாயகம் இருக்கின்றதா? 

தலை கவசத்துடன் வந்தவர்கள் இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள் என்றே கூறப்படுகின்றது. தேர்தல் நடந்து விட்டால் ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதாக அர்த்தப்படாது என்றார்.

No comments:

Post a Comment