Translate

Saturday, 10 December 2011

சொன்னதைச் செய்யுங்கள் புதிது புதிதாகக் குழப்பாதீர்! தீர்வு விடயத்தில் அரசிடம் வலியுறுத்தியது கூட்டமைப்பு


சொன்னதைச் செய்யுங்கள் புதிது புதிதாகக் குழப்பாதீர்!
தீர்வு விடயத்தில் அரசிடம் வலியுறுத்தியது கூட்டமைப்பு
news
இலங்கையிலுள்ள எல்லா மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கான முயற்சியில் அரசு கூட்டமைப்பு ஆகிய இரு தரப்புகளுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்ட விடயங்களுக்கு மதிப்பளித்து அவற்றை அரசு செயற்படுத்த வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தி உள்ளார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.


அதைவிடுத்து புதிய விடயங்களை நடைமுறைப்படுத்தாதீர்கள் என்றும் அவர் அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அதேவேளை, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்குப் பெயர்களை வழங்க முடியாது என்ற தமது நிலைப்பாட்டை அரச தரப்பிடம் நேற்று மீண்டும் ஆணித்தரமாகத் தெரிவித்திருக்கிறது கூட்டமைப்பு.
அரசு கூட்டமைப்பு இடையே கடந்த மாதம் நடைபெற்ற பேச்சில், இந்த மாதத்தில் 4 தடவைகள் சந்திப்பு நடத்த இரு தரப்புகளும் இணங்கி இருந்தன. 1, 6, 14, 15 ஆகிய திகதிகளில் அந்தப் பேச்சுக்களுக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குகளின் அடிப்படையில் நேற்று இரு தரப்புகளுக்கும் இடையில் அவசரமான பேச்சு நடந்தது. 
அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்த அறிக்கையில், தீர்வு தொடர்பில் அரசு இணங்கிய விடயங்களுக்கு முதலில் மதிப்பளிக்குமாறும் புதிய விடயங்களைத் திடீரெனச் சேர்க்க வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. 
 
அரசியல் தீர்வு தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான பிரதிநிதிகளை நியமிப்பதில் நேற்றைய பேச்சில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்தே கூட்டமைப்பின் இந்த அறிக்கை வெளியாகி இருக்கிறது. 
 
இரு தரப்புப் பேச்சில், அரசியல் தீர்வு தொடர்பில் இணக்கம் காணப்பட்ட பின்பே தெரிவுக்குழுவில் சேர்வது குறித்து தாம் முடிவு செய்வர் என்று கூட்டமைப்பு முன்னரே அறிவித்திருந்தது. ஆனால், நேற்றைய பேச்சின்போது, தெரிவுக்குழுவுக்கான தமது உறுப்பினர்களின் பெயர்களைக் கூட்டமைப்பினர் தரவேண்டும் என்று அரச தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதனை ஏற்க கூட்டமைப்பினர் மறுத்து விட்டனர்.
 
முதலில் தீர்வு பற்றிய இரு தரப்பு இணக்கம்; பின்னரே தெரிவுக்குழு என்ற தமது நிலைப்பாட்டில் மாற்றம் ஏதுமில்லை என்று அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர். "நேற்றைய சந்திப்பு திடீரென மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கின் அடிப்படையில் நடந்தது.
 
ஏற்கனவே செய்யப்பட்ட ஒழுங்கின்படி எதிர்வரும் 6ஆம் திகதி நடக்க இருக்கும் பேச்சில் கலந்துகொள்வதற்கு கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது'' என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உதயனுக்குத் தெரிவித்தார். 

No comments:

Post a Comment