Translate

Saturday 10 December 2011

அதிகார பகிர்வு அனுபவங்களை இலங்கை அரசுடன் பகிர்ந்து கொள்ள எந்நேரமும் தயார்!; இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவர் ஜோன் ரன்கின்


அதிகார பகிர்வு அனுபவங்களை இலங்கை அரசுடன் பகிர்ந்து கொள்ள எந்நேரமும் தயார்!; இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவர் ஜோன் ரன்கின் 
essayகடந்தகால துயரங்களுக்கு இலங்கை நேர்மையான பரிகாரம் தேடுவதே தற்போதைய அதிமுக்கிய தேவை.

கேள்வி: இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து சுருக்கமாகக் கூறுவீர்களா?
பதில்: ஒரு பீடையைப் போல கடந்த 30 வருடங்களாக இலங்கையை வாட்டி வதைத்து வந்த உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. இதைப் பிரிட்டன் பெரிதும் வரவேற்கின்றது. அரசியல் நல்லிணக் கப்பாட்டை அடைவதற்கும், நிரந்தர சமாதானத் தைக் கட்டியெழுப்புவதற்குமான அரும் பெரும் முயற்சிகளுக்கு நாம் சமத்துவ ஆதரவை வழங்க விரும்புகிறோம்.

பொருளாதார சுபீட்சத்தைக் கட்டி எழுப்புவதற்கு இது மிக அத்தியாவசியமாகும். பிரிட்டன் இலங்கையின் இரண்டாவதாகப் பெரிய வர்த்தக பங்குதார நாடாகத்திகழ்கிறது. பொருளாதார ரீதியாக இலங்கை சுபீட்சத்தைத் தழுவுவதையே நாம் ஆவலுடன் நோக் குகின்றோம். 

கே: நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடும் விடயத்தில், அரசு நீண்டகாலமாக அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கின்றது. இது குறித்து தங்களின் கருத்து என்ன?
 
ப: நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பூர்த்தியடைந்துள்ளமையை நாம் வரவேற்கின்றோம். அதேவேளை, அதன் தாமதமற்ற வெளியீட்டை எதிர்பார்க்கின் றோம். அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து எங்களால் முன்கூட்டியே தீர்மானித்து விட இயலாது. அத்துடன், தேசிய மீள் நல்லிணக்கப்பாட்டுக்கும், ஸ்திரப்பாட்டுக்கும் அது குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்கக்கூடும் என நம்புகின்றோம். 
 
கே: அரசு போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்கும் என ஒரு மாநாட்டில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவரது அறிவித்தலை நீங்கள் வரவேற்கின்றீர்களா? அதேவேளை, அரசு தனது வாக்குறுதியைக் காப்பாற்றுமா?
 
ப: இலங்கை அரசின் சமீபத்திய அறிக்கைகளை நாம் வரவேற்கின்றோம். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோருக்கு புகலிடம் அளிக்கப்படமாட்டாது என்பதை அவை துலாம்பரமாக தெளிவுபடுத்துகின்றன. இரு தரப்புகளிலும் யுத்தகாலத்தில் பாரதூரமான மீறல்கள் இடம்பெற்றிருக்கலாம். அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் மிக அவசியம் என நாம் கருதுகின்றோம். 
 
கே: நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இலங்கை அரசு வெளியிட்ட பின்னர், அதிலுள்ள பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதற்கு, இலங்கை அரசுக்கு, பிரிட்டிஷ் அரசு அழுத்தம் கொடுக்குமா?
 
ப: நாங்கள் முதலில் அறிக்கையைப் பார்வையிட வேண்டும். அதற்குப் பின்னரே கருத்துத் தெரிவிக்க முடியும். இத்தருணத்தில் சமீபத்தில் பிரிட்டிஷ் அமைச்சர் அலிஸ்டயர் பேர்ட் குறிப்பிட்டதையும் நினைவு கூருகிறேன். 
 
அவர் தமது அறிக்கையில், தேசிய நல்லிணக்கப்பாடு, ஸ்திரப்பாடு, சண்டை இழப்புகளுக்கான சுலபமான மீட்சி ஆகியவற்றில் தான் கொண்டுள்ள ஈடுபாட்டை அர்ப்பணிப்பை வெளிப்படுத்த இந்த முக்கிய வாய்ப்பை இலங்கை அரசு தக்க வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இதையே தாங்கள் எதிர்ப்பார்க்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தார். 
 
கே: பிரிட்டனிலும், உலக நாடுகளிலும் வாழும் இலங்கைத் தமிழர்கள், பிரிட்டிஷ் அரசு மீது பழி சுமத்தியும், அதனை விமர்சித்தும் இருக்கிறார்கள். இனப்படுகொலையைத் தடுக்கதக்க தருணத்தில் நடவடிக்கை எடுக்க பிரிட்டிஷ் அரசு தவறிவிட்டது என்பதே அவர்களின் வேதனையாகும். இந்தச் சூழ்நிலையில் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு, இலங்கை அரசுக்கு, பிரிட்டிஷ் அரசு துணிகரமாக அழுத்தம் கொடுக்க முன்வரும் என நீங்கள் நினைக்கின்றீர்களா? 
 
ப: ஒரு ஜனநாயக சமூகம் என்ற அடிப்படையில், அடுக்குத் தொடர்போல் உள்ள பல்வேறு சமூகங்களின் அபிப்பிராயங்களுக்கும் பிரிட்டிஷ் அரசு செவிமடுக்கிறது. இலங்கையைப் பொறுத்த மட்டில் நாம் இலங்கை அரசுடனும், அரசியல் கட்சிகளுடனும் தொடர்பில் இருக்கின்றோம். 
 
அதேவேளை, அனைத்து வகையிலான பின்புலங்களையும் கொண்ட புலம்பெயர்ந்த இலங்கையர்களுடனும் தொடர்பில் உள்ளோம். இவர்களில் சிங்களவர்கள், முஸ்லிம்கள், தமிழர்கள் ஆகியோரும் அடங்குவர். எனினும், எந்த வொரு வெளிக் குழுமமும் எங்களின் கொள்கையைத் தீர்மானிப்பதில்லை. 
 
எங்களின் மரபுரிமை, பாதுகாப்புக்கும் சுபீட்சத்துக்குமான உலக இலக்குகள் ஆகியவற்றை எங்கள் கொள்கை அடிப்படையாகக் கொண்டது. இந்நிலையில் எல்லாப் பின்புலத்தையும் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த இலங்கையரால் இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், நல்லிணக்கப்பாட்டை ஊக்குவிப்பதற்கும் காத்திரமான பங்களிப்பை நல்க முடியும் என நாம் நம்புகின்றோம். 
 
கே: நோர்வே, இலங்கையில் தான் மேற்கொண்ட சமாதான முன்னெடுப்புக்கள் தொடர் பான ஆய்வறிக்கையைச் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அனைத்து சமாதான முன்னெடுப்புகளும் தோல்வியுற்றமைக்கு எந்தத்தரப்புப் பொறுப்பு எனக் கூறமுடியுமா?
 
ப: சமாதான முன்னெடுப்புகள் சம்பந்தமான அனுபவத்திலிருந்து நாமெல்லோராலும் ஒரு படிப்பினையைக் கற்றுக் கொள்ள முடியும். தற்போதைய அதிமுக்கிய தேவையானது, துயரத்துக்குரிய கடந்தகால நிகழ்வுகளுக்கு நேர்மையோடு பரிகாரம் காண்பதற்கான முயற்சியில் இலங்கை ஈடுபடுவதாகும். இது தான் தற்போதைய அதிமுக்கிய தேவை. 
 
வலுவான, பிரகாசமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப இதுவே முக்கிய திறவுகோல் என நாம் நம்புகின்றோம். வட அயர்லாந்தில், நாம் மேற்கொண்ட சமாதானத்தைக் கட்டியெழுப்பும் பணியில், நாமாகவே கற்றுக் கொண்ட பாடமும் இதுதான்.
 
கே: தமிழர்களின் அடிப்படை உரிமைகளை ஈட்டுவதற்காக, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்த ஆயுதப் போராட்டம் குறித்து பேச வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. எனினும், போர் முடிவுற்று இரண்டரை வருடங்கள் கடந்துள்ள இச் சூழ்நிலையில், தமிழர்கள் தங்களின் அபிலாஷைகளை அடைவதற்கு சர்வதேச சமூகம் உதவுமா?
 
ப: இலங்கையில் நீண்டகால அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கான நடவடிக்கை களுக்கு நாம் ஆதரவளிப்போம். இது தொடர்பான விவகாரங்களில் சிலவற்றுக்கு பரிகாரம் காண்பதற்கான முன்னெடுப்புகளில் நாடாளு மன்றத் தெரிவுக்குழுவொன்று ஈடுபடவுள்ளது. 
 
இந்த முன்னெடுப்புகளால் விளையும் பயன்களை நாம் எதிர்பார்க்கின்றோம். இலங்கை விரும்புமானால், நாங்கள் பிரிட்டனில் மேற்கொண்ட அதிகாரப்பகிர்வு சம்பந்தப்பட்ட பணிகளின் அனுபவத்தை அதனோடு பகிர்ந்து கொள்வதற்கு தயாராகவே உள்ளோம். 
 
கே: இலங்கை அரசுக்கும், தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெறும் பேச்சுக்களின் போது, அவதானிப்பாளராக, மூன்றாவது தரப்பு ஒன்று பங்குபற்ற வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா?
 
ப: இது சம்பந்தப்பட்ட தரப்புகள், தாங்களாகவே தீர்மானிக்க வேண்டிய ஒரு விடயம். 
 
கே: இந்த நீண்டகால நெருக்கடிக்கு சமாதான தீர்வொன்றை எட்டுவதற்கு குந்தகமான தடை ஏதும் உண்டா?
 
ப: இணக்கப்பாடான தீர்வொன்றுக்கான சாத்தியப்பாடு உண்டு என நாம் நம்புகின்றோம். சண்டையிலிருந்து மீள்வது எப்போதும் சுலபமான தொன்றல்ல. அனைத்துத் தரப்புகளிலும், கடினமான விட்டுக்கொடுப்புகள் தேவை. அவையும் இதயபூர்வமானவையாக இருக்க வேண்டும். அப்படியானால் நிரந்தரமான சமாதா னத்தை அடைந்துவிடலாம் என நாம் நம்புகின்றோம்.
 
பொருளாதார மீட்சிக்காக, இலங்கை அரசு கணிசமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதேபோல, தீர்க்கப்படாதுள்ள அரசியல் விவகாரங்களுக்கும் தீர்வுகாண அனைத்துக் கட்சிகளும் முயல வேண்டும். இம் முயற்சிக்கு எமது ஆதரவு உண்டு. 
 
கே: வரவுசெலவுத்திட்ட பிரேரணையில், பாதுகாப்புத் துறைக்கு பெருந்தொகை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது யுத்தத்துக்குப் பின்னரும், அரசு இராணுவத்தை மேம் படுத்த விரும்புகிறது என்பதையே பிரதிபலிக்கிறது. 

இந்த நிலைப்பாட்டில், சமாதானத் தீர்வுக்கு அரசு முன்னுரிமை வழங்குமென நீங்கள் நினைக்கிறீர்களா?
 
ப: விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு. இதன் நடவடிக்கைகள் மீளத் தலைதூக்குவதை எவரும் விரும்பமாட்டார்கள். அதேவேளை, இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்காகவும் சிவில் நிர்வாகமும், இயல்பான சிவிலியன் வாழ்வும் துரிதமாக திரும்புவதற்கும் எமது ஆதரவு உண்டு.

No comments:

Post a Comment