Translate

Thursday 5 January 2012

யாழ் மாவட்ட நிலப்பரப்பில் 30 விழுக்காடு இராணுவப் பிடியில்! -இளந்தி

உயர் பாதுகாப்பு வலயம் (High Security Zones) என்ற பெயரில் யாழ் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 30 விழுக்காட்டை இராணுவம் கையகப் படுத்தியுள்ளது. பெரும் ஆரவாரத்தோடு மக்களிடம் திருப்பிக்கொடுக்கும் பிரசார நடவடிக்கைகளும் சமகாலத்தில் நடக்கின்றன.


இந்தக் கண்துடைப்பு நடவடிக்கை மூலம் 3 வீழுக்காடு நிலம் மாத்திரம் திருப்பிக் கொடுக்கப்படுகிறது. இராணுவம் நிலத்தை மக்களிடம் ஒப்படைக்கிறதென்றால் அதற்குப் பின்னணியில் ஒரு பாரிய மோசடி இருக்கிறது.

சிறிய நிலப்பரப்பைக் கொடுத்தபடி பிறிதோர் இடத்தில் பெரும் நிலப்பரப்பைக் கைப்பற்றவது தான் இராணுவத்தின் தந்திரோபாயம். அதாவது கொடுத்தவனே எடுத்துக் கொண்டான் என்ற மாதிரித் தான்.

இன்றும் கிளாலி, மாதகல், காங்கேசன்துறை, மைலிட்டி, மண்டைதீவு ஆகிய இடங்களில் இராணுவ முகாம்;கள் புதிதாக அமைப்பதற்காக தனியார் நிலங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. தீவகத்திலும் இது நடக்கிறது.

கிளாலியிலும் மாதகலிலும் கடற்படை முகாம் அமைப்பதில் கடற்படை தீவிரமாக ஈடுபடுகிறது. மாதகலில் சீன அதிகாரிகளின் நடமாட்டம் காணப்படுகிறது. மண்டைதீவில் ஒரு கடற்படை முகாம் கட்டப்படுகிறது.

தனியாருக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலம் கடற்படை முகாம் அமைப்பிற்காகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலப்பரப்பில் இருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரு சிவன் கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. மாடு வளர்ப்போரின் மேய்ச்சல் நிலங்கள் பறிபோயுள்ளன.

யாழ் நகரின் தலை வாயிலான மண்டைதீவு கடல் பூநகரி வரை நீடிக்கிறது. அது யாழ் நீரேரியின் ஓரத்தில் இருக்கிறது. பாக்கு நீரிணையில் இருந்து யாழ் குடா நீரேரிவரையிலான நீர் பரப்பின் நுளை வாயிலுக்கு அருகாமையில் மண்டைதீவு இருக்கிறது.

யாழ் குடா நாட்டிற்கு வரும் கடற் பாதைகளை மண்டைதீவு மூலம் கண்காணிக்க முடியும். இந்தக் கடலில் சீனர்கள் விரும்பி உண்ணும் கடல் அட்டைகள் வாழ்கின்றன. கடல் அட்டையைப் பிடித்து ஏற்றுமதிக்காகப் பதனிடச் சிங்கள மீனவர் குடும்பங்கள் வந்துள்ளன.

காங்கேசன் துறையில் முதிரைக் கல் தோண்டி எடுக்கும் தொழிலை சீமெந்து ஆலையைப் பொறுப்பேற்றுள்ள இந்திய நிறுவனம் செய்கிறது. இதனால் நிலத்தடி குடிநீர் பாதிப்படைவது திண்ணம்.

காங்கேசன்துறையை உள்ளடக்கிய வலிகாமம் மாவட்ட உயர் பாதுகாப்பு வலயத்தில் 25 கிராமங்களை திருப்பிக் கொடுக்க முடியாதென்று இலங்கை இராணுவம் அண்மையில் செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ் நகருக்கு வருகை தந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் இலங்கையில் உயர் பாதுகாப்பு வலயங்கள் கிடையாது என்றார். இலங்கைத் தீவு ஒரு பெரிய அமைதி வலயம் என்று அவர் சொன்னார்.

No comments:

Post a Comment