Translate

Thursday, 12 January 2012

இதையும் மறந்திடு தமிழா!



இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான இறுதி கட்டப் போரில் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது உலகறிந்த ரகசியம். இறுதி கட்டப் போரின்போது ஈழத் தமிழர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்பது குறித்து தமிழக ஊடகங்கள் மட்டுமல்லாது, உலகத்திலுள்ள எந்த ஊடகங்களிலும் வெளிவராதபடி இலங்கை அரசு பார்த்துக்கொண்டது.


தமிழ் ஆர்வலர்களும், சில அரசியல் தலைவர்களும் காட்டுக் கத்தலாய் கத்தியும் மத்திய அரசு எதையும் கண்டுகொள்ளாமல் இலங்கை அரசுக்கு ஆயுத உதவியைத் தொடர்ந்து செய்தது.
ஆனால், இலங்கையில் போர் முடிந்த பிறகும், ஈழத் தமிழர்கள் எவ்வாறு கொடூரமாகக் கொல்லப்பட்டனர் என பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட விடியோ பதிவில் ஓரளவுக்குத் தெரிய வந்தது. அந்த ஆதாரத்தை மறுத்த இலங்கை அரசு, அது போலியாக தயாரிக்கப்பட்ட விடியோ காட்சிகள்தான் எனக் கூறியது.
இந்நிலையில், ஈழத் தமிழர்கள் எப்படி கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள் என்பதை சிடியில் பதிவு செய்து மதிமுக பொதுச் செயலர் வைகோ, சென்னை சட்டக் கல்லூரி வாயிலில் நின்று கொண்டு அந்தக் கல்லூரி மாணவர்களிடம் கொடுத்தார். அந்த சிடியின் பிரதிகள் தமிழகம் மட்டுமல்லாது, உலகெங்கிலும் பரவத் தொடங்கியது. அந்த சிடியை மன உறுதி படைத்தவர்களாலேயே பார்க்க இயலாத நிலையில், சராசரி மனிதர்களுக்கு அது சாத்தியமாகுமா? அவ்வளவு கொடூரம். ஹிட்லருக்கு அடுத்தபடியாக நிகழ்த்திய இனப் படுகொலைக்கு சொந்தக்காரர்தான் ராஜபக்ஷ என்பதை உலகுக்கு உணர்த்தியது அந்த சிடி.
அந்த சிடி வெளியான சில நாள்கள் அதைப் பற்றிய பேச்சாகவே இருந்தது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற ஜெயலலிதா இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். பின்னர், ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு, உள்ளாட்சித் தேர்தல் என ஒவ்வொரு பிரச்னையாக வரத் தொடங்கின.
இந்நிலையில் பால், பஸ் கட்டண உயர்வைத் தமிழக முதல்வர் அறிவித்தார். வழக்கம்போல அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அனைத்துக் கட்சியினரும் கண்டன அறிக்கையை வெளியிட்டு, ஆர்ப்பாட்டத் தேதியையும் அறிவித்தனர். அப்போது குறுக்கிட்ட வடகிழக்குப் பருவமழையால் ஆர்ப்பாட்டம் நடத்தும் தேதிகளும் தள்ளிப்போயின.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சி அலுவலக வளாகத்துக்குள்ளேயே உண்ணாவிரதம் இருந்தார். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெவ்வேறு நாள்களில் சாலை மறியலில் ஈடுபட்டு தங்களது சம்பிரதாய போராட்டத்தை முடித்துக் கொண்டன.
கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மழையால் முன்பு அறிவித்த தேதி மாற்றப்படும் என அறிவித்த திமுக, அக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஜாமீனில் சிறையிலிருந்து வெளிவந்த உற்சாகத்தால் ஆர்ப்பாட்டம் பற்றிய பேச்சுக்கே வரவில்லை.
இவ்வளவு பிரச்னைகளுக்கு நடுவில் கூடங்குளம் பிரச்னை தலைதூக்கியது. இந்தப் போராட்டத்தை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், பிரச்னை முற்றுப்புள்ளி இல்லாமல் தொடர்ந்தது. அப்போது முல்லைப் பெரியாறு விவகாரம் தலைதூக்கியது.
இந்நிலையில், இலங்கையில் 2010, மே மாதம் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சி.ஆர்.டி. சில்வா தலைமையில் அமைக்கப்பட்ட போர்ப் படிப்பினை மற்றும் சமரசத்துக்கான ஆணையத்தின் (எல்.எல்.ஆர்.சி) அறிக்கை அண்மையில் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், இலங்கை ராணுவம் அப்பாவித் தமிழர்களை குறிவைத்து தாக்கியது என்ற குற்றச்சாட்டு தவறானது என்றும், ராணுவம் எந்த விதமான போர்க் குற்றங்களிலும் ஈடுபடவில்லை என்றும், சில இடங்களில் வரம்பு மீறி இருந்தால், அதுகுறித்து உரிய ஆதாரம் கிடைத்த பிறகு நடவடிக்கை எடுக்கலாம் என்றும், போரின்போது விடுதலைப் புலிகள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளனர் என்றும், இது தொடர்பாக தற்போது சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கைக்கு தமிழகத்திலுள்ள கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஏனெனில், இங்குதான் பிரச்னைக்கு மேல் பிரச்னைகள் உள்ளனவே. இவற்றுக்கு நடுவில் ஈழத் தமிழர்களின் நினைவு நமக்கு எப்படி வரும்? போர் முடிந்து 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், முள்வேலி முகாமில் இன்னும் ஏராளமானோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் சுட்டும், அடித்தும் விரட்டுகின்றனர். அதோடு, மீனவர்கள் மீது போதைப் பொருள் கடத்தல் வழக்கு வேறு, இவ்வளவு களேபரங்களுக்கு நடுவிலும் மத்திய அரசு ஊமையாகவே இருக்கிறது.
இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது தமிழர்கள் எந்தப் பிரச்னையையும் எளிதாக மறப்பவர்கள். நமக்கு பிரச்னைக்கு மேல் பிரச்னை வந்தால், முதல் பிரச்னை எளிதாக மறந்துவிடும் என்பது ஊருக்கே தெரிகிறது. எனவே, இதையும் மறந்திடு தமிழா!

No comments:

Post a Comment