Translate

Monday, 30 January 2012

அச்சத்தில் சிங்களம்: மீண்டும் ஜெனிவாவில் சூழும் கருமேகங்கள்!


“……………………..நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்துள்ளோம் அதன் அறிக்கை வரும் வரை பொறுத்திருங்கள் என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க மன்றாட்டமாகக் கேட்டிருந்தார். இப்போது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வந்து விட்ட நிலையில் அது குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அமையவில்லை என்று மேற்குலக நாடுகள் விமர்சித்துள்ளன.இந்தநிலையில், அடுத்த கூட்டத்தொடரில் நல்லிணக்க ஆணைக்குழுவை காரணமாக வைத்து அரசினால் தப்பிக்கவும் முடியாது.
அதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் வகையில் அமையவில்லை என்று கூறிய மேற்கு நாடுகளால் அதனை ஏற்றுக் கொள்வதாக கூறி ஒதுக்கி விடவும் முடியாது. எனவே அடுத்து வரும் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் குறித்து விவாதம் நடக்கும் என்றே நம்பப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை விவாதத்துக்கு வருவதை தடுக்க அரசதரப்பு முனைகிறது, அதற்காக ஆதரவு தேடுகிறது. அப்படி அது விவாதத்துக்கு வந்தாலோ, தீர்மானம் ஏதும் கொண்டு வரப்பட்டாலோ, அதை எதிர்கொள்வதற்கும் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்கிறது. அரசாங்கம் இந்தக் கூட்டத்தொடரையிட்டு அச்சப்படவில்லை, அதனை எதிர்கொள்ளத் தயார் என்று கூறுகின்ற போதும் உள்ளூர அதற்கு நடுக்கம் இருக்கிறது. அரசதரப்பு இப்போதே பரபரப்பாவதில் இருந்து இதனை நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது……………….”
- இன்போ தமிழ் குழுமம்-
இனி, 
மீண்டும் ஜெனிவாவில் சூழும் கருமேகங்கள்!
வரப்போகும் பெப்ரவரி 27ம் திகதி தொடக்கம் மார்ச் 23ம் திகதி வரை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது அமர்வு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடர் இப்போது இலங்கை அரசுக்குப் பெரும் நெருக்கடியானதொரு விவகாரமாக மாறி வருகிறது.
இந்தக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற பல நாடுகள் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு ‘செக்‘ வைக்க காத்திருக்கின்றன. அண்மையில் ஜெனிவா அக்கடமியில் மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் ஏற்பாட்டில் ஒரு கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.ஜெனிவாவில் உள்ள பல்வேறு நாடுகளினதும் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இலங்கைக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை.  அத்துடன் அழைப்பு விடுக்கப்படாத எவரையும் பங்கேற்க அனுமதி வழங்கப்படவும் இல்லை.இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற நாடுகளின் தூதுவர்கள், பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய அமெரிக்க சட்டநிபுணரும், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் உறுப்பினருமான பேராசிரியர் ஸ்டீபன் ரட்னர், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக நம்பகமான சாட்சியங்கள் உள்ளதால், சர்வதேச விசாரணைகள் அவசியம் என்று ஐ.நா நிபுணர்குழு வலுவான பரிந்துரை ஒன்றைச் செய்திருந்தது. ஆனால் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமித்த இந்த நிபுணர்குழுவின் அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமலேயே அதனை நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் கடந்த நவம்பரில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு அனுப்பியிருந்தார் பான் கீ மூன். இப்போதும் அவர் இந்த விவகாரம் தன் கையில் இருந்து போய்விட்டது என்றவாறே பதிலளிக்கிறார். இனிமேல் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் உள்ள உறுப்பு நாடுகள் பார்த்துக் கொள்ளும் என்று கடந்தவாரம் கூட ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் கைவிரித்திருந்தார்.
ஆக,
இலங்கை மீதான எந்த நடவடிக்கையும் இனிமேல் ஜெனிவாவில் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதில் பான் கீ மூனும் ஐ.நாவும் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது உறுதியாகத் தெரிகிறது. இந்தநிலையில் அடுத்து வரப்போகும் கூட்டத்தொடரில், இலங்கை விவகாரம் குறித்த விவாதத்தைத் தடுப்பது அரசுக்குப் பெரும் சவாலான காரியமாக மாறியுள்ளது.
அடுத்துவரும் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் குறித்து விவாதம் நடப்பது பெரும்பாலும் உறுதி என்றே தகவல்கள் கூறுகின்றன.
இந்த அமர்வில் எப்படியாவது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பித்து விவாதிக்க சர்வதேச சமூகம் குறிப்பாக அமெரிக்கா தலைமையிலான நாடுகள் விரும்புகின்றன. ஏற்கனவே அமெரிக்கா கடந்த கூட்டத்தொடரில் இந்த அறிக்கையை விவாதிக்க முயற்சி எடுத்தது. அது கைகூடவில்லை. இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை அரசு மூலம் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதே சர்வதேச சமூகத்தின் திட்டம். அப்படி விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதன் மூலம் போர்க்குற்றங்கள் தொடர்பான விவாதத்துக்குள் எப்படியாவது இலங்கையை இழுத்து விட்டு விடலாம் என்று அந்த நாடுகள் காத்திருக்கின்றன. ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பாக இன்னும் எந்த முடிவையும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை அறிவிக்கவில்லை. அதற்காக அந்த அறிக்கையை மனிதஉரிமைகள் பேரவை தூக்கிப் போட்டு விட்டதாக அர்த்தம் கொள்ள முடியாது. அதனை அவர்கள் எந்த நேரத்திலும் கையில் எடுக்கலாம். எந்தவகையிலும் அதனைக் கவனத்தில் எடுக்காமல் மறைத்துவிட முடியாது, ஏனென்றால் அதில் தீவிரமான மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் உள்ளடங்கியுள்ளன. அப்படி அந்த அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை புதைத்து விடுமேயானால் அது மிகப்பெரிய கறையாக அமைந்து விடும்.
எனவே,
  • இந்தக் கூட்டத்தொடரில் எப்படியாவது இலங்கை விவகாரத்தைக் கையில் எடுக்க ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையை இயக்குவது 47 உறுப்பு நாடுகளும் தான். அந்த நாடுகள் தான் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருக்கப் போகின்றன. இந்தக் கூட்டத்தொடரில் இதுவரை பலமுறை இலங்கை அரசு நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தது. கடைசியாக கடந்த ஆண்டு இறுதியில்நடந்த கூட்டத்தொடரிலும் இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்க கனடா முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அரசாங்கம் ஒருவழியாக நல்லிணக்க ஆணைக்குழுவைக் காரணம் காட்டித் தப்பித்துக் கொண்டது. நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்துள்ளோம் அதன் அறிக்கை வரும் வரை பொறுத்திருங்கள் என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க மன்றாட்டமாகக் கேட்டிருந்தார். இப்போது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வந்து விட்ட நிலையில் அது குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அமையவில்லை என்று மேற்குலக நாடுகள் விமர்சித்துள்ளன.
இந்தநிலையில்,
அடுத்த கூட்டத்தொடரில் நல்லிணக்க ஆணைக்குழுவை காரணமாக வைத்து அரசினால் தப்பிக்கவும் முடியாது. அதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் வகையில் அமையவில்லை என்று கூறிய மேற்கு நாடுகளால் அதனை ஏற்றுக் கொள்வதாக கூறி ஒதுக்கி விடவும் முடியாது. எனவே அடுத்து வரும் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் குறித்து விவாதம் நடக்கும் என்றே நம்பப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை விவாதத்துக்கு வருவதை தடுக்க அரசதரப்பு முனைகிறது, அதற்காக ஆதரவு தேடுகிறது. அப்படி அது விவாதத்துக்கு வந்தாலோ, தீர்மானம் ஏதும் கொண்டு வரப்பட்டாலோ, அதை எதிர்கொள்வதற்கும் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்கிறது. அரசாங்கம் இந்தக் கூட்டத்தொடரையிட்டு அச்சப்படவில்லை, அதனை எதிர்கொள்ளத் தயார் என்று கூறுகின்ற போதும் உள்ளூர அதற்கு நடுக்கம் இருக்கிறது. அரசதரப்பு இப்போதே பரபரப்பாவதில் இருந்து இதனை நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

No comments:

Post a Comment