Translate

Thursday, 12 January 2012

முல்லை பெரியாறு அணை பிரச்சனை எதிரொலி : சென்னை ஐயப்பன் கோயில்களில் குவியும் பக்தர்கள்!

கேரளவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இந்திய மற்றும் உலகம் முழுவதுமிருந்தும் பக்தர்கள் வந்து ஐயப்பனை தரிசிக்கின்றனர். ஆண்டு தோறும், கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் கடும் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரி மலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்து தங்களது.

தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். 


இந்த கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் மிகவும் புண்ணியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில், முல்லை பெரியாறு அணை பிரச்சனை காரணமாக, சபரி மலைக்கு செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் தாக்கப்படுகின்றனர். அவர்களது வாகனங்களும் அடித்து உடைக்கப்படுகிறது. இதானால், சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் சபரி மலைக்கு சென்றால் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம், உயிருக்கு பாதுகாப்பு இருக்காது என்ற அச்சத்தில் ஐயப்ப பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். இந்நிலையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயில், மற்றும் அம்பத்தூரில் உள்ள ஐயப்பன் கோயில்களுக்கும் ஐயப்ப பக்தர்கள் சென்று 18 படிகள் ஏறி, இருமுடியை செலுத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.
அண்ணமலைபுரத்தில் வடசபரி
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் ஐயப்ப சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் கடந்த 1982ம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம் தேதியன்று கும்பாபிஷேகம் நடத்தி பக்தர்களின் வழிபாட்டிற்காக  திறக்கப்பட்டது. இங்கு மலை மட்டும் தான் இல்லையே தவிர, கோவில் அமைந்திருக்கும் முறை, கட்டிடத்தின் வடிவம், கொடிமரம், 18 படிகள், மூலஸ்தானத்திலுள்ள ஐயப்பன் சிலையின் வடிவம் என அனைத்துமே எந்த விதமான மாற்றமும் இல்லாமல் சபரி மலையில் உள்ள ஐயப்பன் கோயில் போன்றே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தான், இந்த கோயிலை ‘வடசபரி’ என்று பக்தர்கள் பக்தி பரவசத்தோடு அழைக்கின்றனர்.
முல்லை பெரியாறு பிரச்சனைக்கு முன்பாகவே, கேரளா சென்று ஐயப்பனை தரிசிக்க முடியாத ஏழை, எளிய பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து இருமுடியை இறக்கி தங்கள் பிரார்த்தனையை முடித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த கோயிலில் இருக்கும் ஐயப்பனுக்கு விரதமிருந்து மாலைபோட்டு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, கேரளாவில் தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்கல் காரணமாக, இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இங்கு 18 படியேறி தங்கள் காணிக்கையை செலுத்த பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர்.
இங்கு, நவம்பர் மாதம் 17ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 27ம் தேதி வரை உள்ள 41 நாட்கள் ‘‘மண்டல பூஜையும்’’,  நவம்பர் மாதம் 17ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 13ம் தேதி வரை உள்ள 27 நாட்கள் ‘‘இலட்சார்ச்சனையும்’’, டிசம்பர் மாதம் 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை உள்ள 6 நாட்கள் ‘‘பிரம்மோத்ஸவமும்’’ நடைபெறுகிறது. அதிகளவில் வரும் பக்தர்களின் வசதிக்காக இலவசமாக கழிவரை மற்றும் குளியலறைகள் வழங்கப்படுகிறது.
இந்த கோயிலை சேர்ந்த வைரமணி குருக்கள் கூறுகையில், “கோயிலில் நெய் அபிஷேகத்தை தவிர வேறு எதற்கும் கட்டணம் கிடையாது. பக்தர்கள் வரிசையில் தான் அனுமதிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் 5 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த கோவிலில் விசஷே மாதங்களை தவிர்த்து அனைத்து தமிழ் மாதங்களின் 1 முதல் 5ம் தேதி வரை பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். அதேபோல், தை மாதம் 1ம் தேதி கோயிலில் நடைபெறும் ‘‘மகர ஜோதி’’ ஏற்றும் நிகழ்ச்சி விசேஷமானது’’ என்றார்.
கோயிலுக்கு வந்திருந்த சென்னை வியாசர்பாடியை சேர்ந்த மணிகண்டன் (35) என்ற பக்தர் கூறுகையில், “நான் கடந்த 14 ஆண்டுகளாக சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்து வருகிறேன். முல்லை பெரியாறு பிரச்சனை காரணமாக இந்த ஆண்டு சபரிமலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் ‘‘வடசபரிக்கு’’ வந்துவிட்டேன். எந்தவித மாற்றமும் இல்லாமல் கட்டப்பட்டுள்ள இங்கு ஐயப்பனை தரிசித்த முழு திருப்தியும் கிடைக்கிறது. சபரிமலையை போல, கூட்ட நெரிசல் இல்லை, போக்குவரத்து செலவும் மிச்சம்“ என்றார்.
அம்பத்தூர் ஐயப்பன்
அம்பத்தூர் செங்குன்றம் நெடுஞ்சாலையில் உள்ள கள்ளிகுப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயில், கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 8ம் தேதியன்று கட்டிமுடித்து பக்தர்களின் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. இங்கு நடைபெறும் பூஜைகள் அனைத்தும் சபரிமலையில் நடைபெறுவது போலவே நடைபெறுவது தனிச்சிறப்பு. இதன் காரணமாகவே ஐயப்ப பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
முல்லை பெரியாறு பிரச்சனை காரணமாக, இந்த கோவிலுக்கு வந்து இருமுடியை இறக்கி பிரார்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஒரு மடங்கு அதிகரித்துள்ளது. கார்த்திகை, மார்கழி, தை உள்ளிட் விஷேச மாதங்களில் உள்ள வெள்ளி, சனி ஞாயிற்று கிழமைகளில் 1000க்கும் மேற்பட்டோரும் மற்ற நாட்களில் 500க்கும் மேற்பட்ட பக்தர்களும் வருவார்கள்.
ஆனால், தற்போது கேரளாவில் தமிழக ஐயப்ப பக்தர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தொடர்ந்து வெள்ளி, சனி ஞாயிறுக்கிழமைகளில் 2000க்கும் மேற்பட்டோரும் மற்ற நாட்களில் 1000க்கும் அதிகமான பக்தர்களும் வந்து தங்கள் பிரார்த்தனையை முடித்து கொள்கின்றனர். குறிப்பாக, சென்னை, கோவை, ஈரோடு, சேலம் போன்ற பகுதிகளிலிருந்து இங்கு அதிக பக்தர்கள் வருகின்றனர். சபரி மலை ஐயப்பன் கோயில் போல 18 படிகளும், படி பூஜையும் நடத்தப்படுவது தனிச்சிறப்பு.
இங்கு வந்திருந்த சேலத்தை சேர்ந்த ராமசாமி (55) என்ற பக்தர் கூறுகையில், “நான் கடந்த 12 வருடங்களாக சபரி மலைக்கு சென்று வருகிறேன். தற்போது, முல்லை பெரியாறு பிரச்சனை காரணமாக தமிழ் பக்தர்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக கேள்விபட்டேன். எங்கள் ஊரிலிருந்து சென்ற சில பக்தர்களே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, சபரிமலை விதிமுறைபடி அமைந்துள்ள இந்த கோயிலில் வந்து இறைவனை தரிசித்து இருமுடியை இறக்கி பிரார்த்தனையை முடித்து கொண்டேன்’’ என்றார்.
கட்டணம் இல்லை தரிசன நேரம்
ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் முன்பதிவு கட்டணம் உள்ளிட்ட எந்தவிதமான கட்டணமும் கிடையாது. நெய் அபிஷேகத்திற்காக மட்டும் ரூ.10 வசூலிக்கப்படுகிறது. தரிசன நேரம் காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை. அம்பத்தூர் ஐயப்பன் கோயிலில் முன்பதிவு கட்டணம் உள்ளிட்ட எந்தவிதமான கட்டணமும் கிடையாது. நெய் அபிஷேகத்திற்கு ரூ.41 செலுத்தவேண்டும். தரிசன நேரம் காலை 5.30 மணி முதல் 11 மணி வரை. மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை.
பெண்களுக்கு அனுமதி
பொதுவாக ஐயப்பன் கோவில்களுக்கு 10 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கும், 55 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால், ராஜா அண்ணாமலை புரம் ஐயப்பன் கோவில் மற்றும் அம்பத்தூர் கோவில்களில் ஐயப்பனை தரிசிக்க பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், 18 படிகளில் ஏறுவதற்கும், அவ்வழியாக சென்று ஐயப்பனை தரிசிப்பதற்கும் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இருமுடி கட்டாத ஆண்களுக்கும் 18 படிகளில் ஏற அனுமதி இல்லை.
சென்னையில் ஐயப்பன் கோயில்கள்
சென்னையிலுள்ள சில ஐயப்பன் கோவில்கள்: கேகே நகர், பொன்னம்பலம் சாலை. அண்ணாநகர், 2வது அவென்யு. அயனாவரம், வசந்தா கார்டன் தெரு. ஆவடி, பக்தவச்சலபுரம். பெசன்ட்நகர், மந்தவெளிப்பாக்கம். பெரம்பூர், மீனாட்சி தெரு, நுங்கம்பாக்கம், மாதவன்நாயர் சாலை. மணலி, நெடுஞ்செழியன் சாலை. மடிப்பாக்கம், ஐயப்பன்நகர். நங்கநல்லூர், ராம்நகர். பூந்தமல்லி, திருமால்நகர். இது தவிர, மகாலிங்கபுரம், தியாகராயநகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஐயப்பன் கோயில்கள் அமைந்துள்ளன.

No comments:

Post a Comment