Translate

Saturday, 7 January 2012

தமிழீழ மக்களுக்கான நீதி கோரி நாடாளுமன்றத்தில் விவாதம்

2011 கழிந்து 2012 பிறந்துள்ளது. தொடர்ச்சியாக ஈழத் தமிழினம் படும் இன்னல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. கொண்டாடி மகிழ்வதற்கு அதிகம் எதுவும் இல்லை.தாயகத்தில் எமது இனத்தை அடிமையாக்கி முழுமையாக அழித்துவரும் சிறீலங்கா அரசை, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் செயற் திட்டம் ஒன்றிற்கு உங்களை பிரித்தானியத் தமிழர் பேரவை அழைக்கின்றது.


கடந்த இரண்டரை வருடங்களாக பாரிய பணியொன்றை முன்னெடுத்துச் செல்லும் பிரித்தானிய தமிழர் பேரவை பரந்துபட்ட எம் தமிழ் மக்களை, முக்கியமான இச் செயற் திட்டத்தில் பங்கெடுக்குமாறு அழைக்கின்றது. இன்றைய நிலையில் சர்வதேச தலையீடு ஒன்றின் மூலம் தான் எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

சிறீலங்காவில் இருக்கும் அரசியல் சூழ்நிலையில் பேச்சுவார்த்தை என்ற போலி நாடகம் மூலம் காலத்தை இழுத்தடித்து, தமிழீழ அடையாளத்தை பூரணமாக இல்லாதொழிக்கும் செயற் திட்டத்தை சிறீலங்கா அரசு நிறைவேற்றி வருகின்றது. இப் பின்னணியில் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கான சர்வதேச தலையீட்டிற்கு கால்கோலிடும் பணி புலம்பெயர் தமிழர்களிடம் தான் உள்ளது. இதற்கு மேலோட்டமான பிரச்சாரங்கள் போதுமானதன்று. ஆழமான ஆராட்சியும் முழுமையான செயற்திட்டமும் காத்திரமான செயற்பாடும் இன்றி, நாம் எமது உரிமைகளையோ அல்லது எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கான நீதியினையோ பெற்றுவிட முடியாது. எமது மக்கள் குரல்வளை நெரிக்கப்பட்டு துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள். தமிழீழத்தில் நிகழ்வது இனப்படுகொலை என்பதை நாம் உலகிற்கு நிரூபித்தாக வேண்டும். எமது இனம் முற்றாக சிதைக்கப்பட முன் தமிழ் மக்கள் சந்ததி சந்ததியாக சுபீட்சமான வாழ்வு வாழ நாம்தான் அவசரமாகவும் காத்திரமாகவும் செயலாற்ற வேண்டி உள்ளது.

தமிழ் மக்களிற்கு உரிமை வழங்குவதென சிறீலங்கா அரசு நடத்தும் போலி நாடகத்தினை அம்பலப்படுத்தி, தமிழினப் படுகொலைகளை தடுத்து நிறுத்தி தமிழீழத்தில் இடம்பெறும் இன அழிப்பில் இருந்து எமது இனத்தைக் காத்திட ஒரே வழி சர்வதேச தலையீடுதான். இதற்காக நாம் முழுமூச்சாக உழைக்க வேண்டிய காலகட்டம் இது. சர்வதேச விசாரணை என்பது எமது விடுதலைக்கான பாதையை முன்னெடுத்துச் செல்வதற்கான கருவியாகும். அதனை நிறைவேற்ற தவறுவோமாயின் நாம் எமதினத்தை அழிவில் இருந்து காப்பாற்றுவது இயலாத காரியம் ஆகிவிடும்.எனவே 2012 ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் இடம்பெற உள்ள ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் சிறீலங்காவில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை அவசியமா இல்லையா என்ற விவாதம் நடைபெறும் சாத்தியம் உள்ளது. இதில் 47 நாடுகள் வாக்களிக்க உள்ளன. 

சர்வதேச ஒழுங்கில் பிரித்தானியா முக்கியமான ஒரு நாடாகும். பிரித்தானியா எடுக்கும் தீர்மானம் மற்றைய நாடுகளின் மேல் காத்திரமான செல்வாக்கு செலுத்த வல்லது. எனவே பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தீர்மானம் இயற்ற வைக்கும் நோக்குடன் பிரித்தானிய அரசின் இணையத் தளத்தில் மனு ஒன்று (e-petition) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
இந்த மனுவில் பிரித்தானியத் தமிழர்கள் மட்டும் அல்லாது, மாற்று இன மக்களும் கையெழுத்து இடலாம். உங்கள் அயலவர்கள், நண்பர்கள், வேலை இடத்தில் உள்ளவர்கள், பிரமுகர்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களில் உள்ளவர்கள் மற்றும் உங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரையும் இம் மனுவில் கையெழுத்திட வையுங்கள்.

இதனை பெப்ரவரி இறுதிக்குள் நடத்தி முடித்தால் எதிர்வரும் ஐ.நா. மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு வலுவூட்டும். 60 நாட்களில் ஒரு இலட்சம் கையெழுத்துக்கள் அவசியம். ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு இரண்டு கையெழுத்து பெற்றால் 1000 உண்மையான செயல்பாட்டாளர்கள் இதற்கு போதும். இது நிச்சயம் நிறைவேற்றக்கூடிய காரியம். எமது முயற்சி ஒன்று தான் தேவையாக இருக்கின்றது.தமிழ் மக்களிற்கான இணையங்களே! பத்திரிகைகளே! வானொலிகளே! தொலைக்காட்சிகளே! மற்றும் சகல அமைப்புக்களே இந்த முக்கியமான வரலாற்றுப் பணியில் இணைந்து கொள்ளுங்கள்.

எம் மண்ணில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழினப் படுகொலைகளை சர்வதேச விசாரணைக்கு முன் கொண்டுவந்து, குற்றமிழைத்த சிறீலங்கா அரசை அம்பலப்படுத்தி தண்டனையை பெற்றுக்கொடுத்து எமது மக்களுக்கான நீதியினை பெறுவோம். நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என உறுதி எடுப்போம்.எமது தொண்டர்கள் 10-01-2012 முதல் வீதி வீதியாக சென்று சுயாதீன சர்வதேச விசாரணை கோரும் மனுவுக்கு ஒரு இலட்சம் கையெழுத்து கோரும் பிரச்சார வேலைகளை ஆரம்பிக்கின்றார்கள். 

இதில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். இது தொடர்பான துண்டுப் பிரசுரங்கள், மற்று ஆவணங்கள் என்பனவற்றிற்கு பிரித்தானிய தமிழர் பேரவையுடன் தொடர்பு கொள்ளவும்.

மனுவில் கையெழுத்து இட:

CLICK HERE TO SIGN

மேலதிக தொடர்புகளுக்கு:

பிரித்தானிய தமிழர் பேரவை
தொலைபேசி: 020 8808 0465

No comments:

Post a Comment