சிறிலங்கா படைகளின் போர்க்குற்றங்களுக்கு சாட்சியாக இருந்தவரும், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் இடையில் தொடர்பாளராக செயற்பட்டவருமான லண்டன் சண்டேரைம்ஸ் ஊடகவியலாளர் மேரி கொல்வின் May 25, 2009ல் எழுதிய கட்டுரை அதன் கால முக்கியத்துவம் கருதி மீள்பிரசுரமாகின்றது.
[ஊடகவியலாளர் மேரி கொல்வின் நேற்று சிரியாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஹோம்ஸ் நகரில் அவர் தங்கியிருந்த வீட்டின் மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலிலேயே ஊடகவியலாளர் மேரி கொல்வினும், பிரெஞ்சு படப்பிடிப்பாளரும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.]
அது இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கவலைக்குரிய, வேதனைக்குரிய தொலைபேசி அழைப்பாக இருந்தது. ஆனால் தொலைபேசி அழைப்பை எடுத்த நபர் குறிப்பிட்ட சில மணித்தியாலங்களில் கொல்லப்பட்டு விடுவார் என ஒருபோதும் எண்ணவில்லை. இத் தொலைபேபசி அழைப்பை ஏற்படுத்திய தமிழ்ப் புலிகளின் அரசியற் தலைவராக செயற்பட்ட பாலசிங்கம் நடேசனின் குரலை அதன் பிறகு கேட்க முடியவில்லை.
'நாங்கள் எமது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டோம்' என மே 17 அன்று, புலிகள் தமது இறுதி நிலையை அமைத்திருந்த சிறிலங்காவின் வடகிழக்கு கரையோரத்தில் உள்ள ஒடுங்கிய சதுப்பு நிலக் காட்டுப் பகுதி ஒன்றில் நின்றவாறு பா.நடேசன் செய்மதி வழி தொலைபேசி மூலம் என்னிடம் இறுதியாக தெரிவித்திருந்தார்.
நடேசன் தொலைபேசியில் என்னுடன் கதைத்துக் கொண்டிருந்த வேளையில், பின்னணியில் இயந்திரத் துப்பாக்கிகளின் குண்டுச் சத்தங்களை என்னால் கேட்க முடிந்தது. "நாங்கள் எமது பாதுகாப்பு விடயத்தில் ஒபாமா மற்றும் பிரித்தானிய அரசாங்கங்களின் உத்தரவாதத்தை எதிர்பார்த்து நிற்கிறோம். அவ்வாறான பாதுகாப்பு உத்தரவாதம் எமக்கு வழங்கப்படுமா?" என அவர் என்னிடம் வினவினார்.
தமிழ்ப் புலிகளுக்கும் சிறிலங்காவின் பெரும்பான்மை சிங்களவாதிகளுக்கும் இடையில் 26 ஆண்டு காலமாகத் தொடரப்படும் உள்நாட்டு யுத்தத்தில், வெற்றி மமதையுடன் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் கைகளில் சரணடைவதென்பது ஆபத்து மிக்க ஒன்றாக இருக்கும் என்பதை நடேசன் நன்கறிந்திருந்தார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைப் பார்வையிடுவதற்காக அங்கு சென்றதிலிருந்து, பா.நடேசன் மற்றும் புலிகள் அமைப்பின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் ஆகிய இருவரையும் நான் நன்கு அறிந்து வைத்துள்ளேன்.
இவ்விரு புலித் தலைவர்களும் தம்முடன் எஞ்சியிருந்த 300 புலி உறுப்பினர்களையும் அவர்களது குடும்பங்களின் உயிர்களையும் பாதுகாப்பதற்காக பல்வேறு கடின முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இவர்களுடன் பல பத்தாயிரக்கணக்கான தமிழ் மக்கள் அகப்பட்டிருந்தனர். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் குறிப்பிட்ட சில நாட்களாக புலித் தலைமைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையில் நான் இடைத்தரகராகச் செயற்பட்டிருந்தேன்.
நான் இடைத்தரகராகச் செயற்பட்ட நாட்களில் பா.நடேசன் என்னிடம் மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் உறுதிப்பாட்டைப் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதாவது புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே போடுவார்கள் எனவும், தமது பாதுகாப்புத் தொடர்பில் அமெரிக்காவினது அல்லது பிரித்தானியாவினது உத்தரவாதத்தை அவர்கள் கோரி நிற்பதாகவும், சிறுபான்மைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்கக் கூடிய அரசியற் தீர்வை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அம்முக்கிய மூன்று நிபந்தனைகளாக இருந்தன.
பிரித்தானிய மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளின் ஊடாக கொழும்புக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவராகக் கடமையாற்றியவரும், ஐ.நா செயலாளர் நாயகமான பான் கீ மூனின் தலைமை அதிகாரியாகவும் கடமையாற்றிய விஜய் நம்பியாருடன் தொடர்பை மேற்கொண்டேன். சரணடைவது தொடர்பில் புலிகளால் முன்வைக்கப்பட்ட மூன்று நிபந்தனைகள் தொடர்பாகவும் விஜய் நம்பியாரிடம் எடுத்துக் கூறினேன். சிறிலங்கா அரசாங்கத்திடம் இத்தகவலை பரிமாறிக் கொள்வதாக அவர் என்னிடம் தெரிவித்தார்.
சிறிலங்காவில் நிலவிய மோதலானது இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த அந்தப் பொழுதுகளில், இவ்வாறான தொடர்பாடல்கள் மூலம் சமாதான வழித் தீர்வு ஒன்று கிடைக்கும் போல் தோன்றியது. வேடிக்கையான, எப்போதும் மகிழ்வுடன் காணப்படும் புலித்தேவன், என்னுடன் தொலைபேசி வழித் தொடர்பைப் பேணிய அந்த நாட்களின் இறுதியில் பதுங்குகுழியில் சிரித்தவாறு தான் இருக்கும் ஒளிப்படம் ஒன்றை எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.
நடேசன் என்னிடம் தொடர்பு கொண்ட போது, 'சரணடைதல்' என்ற சொல்லைப் பயன்படுத்த மறுத்துவிட்டார். ஆனால் இதற்குப் பதிலாக புலிகளின் பாதுகாப்புக்கு நம்பியார் உத்தரவாதம் வழங்க வேண்டும் என அவர் என்னிடம் எடுத்துக் கூறினார்.
அதாவது திங்கட்கிழமை, மே 18, சிறிலங்காவில் காலை 5.30, நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நம்பியாரிடம் தொடர்பு கொள்வதற்கான அழைப்பு கிடைத்தது. நான் கொழும்பிலிருந்த நம்பியாரிடம் தொடர்பு கொண்டு, புலிகள் தமது ஆயுதங்களை கீழே போட்டு விட்டார்கள் எனத் தெரிவித்தேன்.
நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் பாதுகாப்பான முறையில் சரணடைவதற்கான உறுதிப்பாட்டை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடமிருந்து தனக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவர்கள் எல்லோரும் "வெள்ளைக் கொடி ஒன்றை உயர்த்திப் பிடித்தவாறு சரணடைய முடியும்" எனவும் நம்பியார் எனக்கு பதிலளித்தார்.
புலிகள் சரணடையும் போது அதற்கு சாட்சியாக நம்பியார் சிறிலங்காவின் வடக்குப் பகுதிக்குச் செல்லவேண்டும் என அவரிடம் நான் கோரியபோது, "நான் வடக்கிற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. சிறிலங்கா அதிபரின் உத்தரவாதம் இதற்குப் போதுமானது" என அவர் என்னிடம் தெரிவித்தார்.
ஞாயிறு பின்னிரவு வரை நான் லண்டனிலேயே தங்கியிருந்தேன். நான் அப்போது நடேசனின் செய்மதி வழி தொலைபேசிக்கு தொடர்பை எடுக்க முயன்றபோதும், தொடர்பு கிடைக்கவில்லை. இதனால் தென்னாபிரிக்காவில் இருந்த புலிகளின் தொடர்பாளர் ஒருவருடன் அழைப்பை ஏற்படுத்தி "வெள்ளைக் கொடி ஒன்றைக் கையில் ஏந்தியவாறு வருமாறு நடேசன் மற்றும் புலித்தேவனிடம் கூறும்படி" கேட்டுக்கொண்டேன்.
திங்கட்கிழமை காலை 5 மணி, தென்கிழக்காசியாவிலிருந்த புலிகளின் பிறிதொரு தொடர்பாளர் ஒருவரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு கிடைத்தது. நடேசனைத் தொடர்புகொள்ள முடியவில்லை என அவர் என்னிடம் தெரிவித்தார். "எல்லாம் முடிந்துவிட்டது என நான் நினைக்கிறேன். அவர்கள் எல்லோரும் இறந்துவிட்டார்கள் என நான் நினைக்கிறேன்" என அவர் என்னிடம் தெரிவித்தார்.
அன்று பின்னேரம் சிறிலங்கா இராணுவம் நடேசன் மற்றும் புலித்தேவன் போன்றவர்களின் இறந்த உடலங்களைப் படம் பிடித்துக் காட்டியது. புலிகளின் சரணடைதல் தொடர்பில் என்ன நடந்தது? அதனை விரைவில் என்னால் உணரமுடிந்தது.
சிறிலங்கா நாடாளுமன்றின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான றொகான் சந்திரநேருவை மே 17 இரவு நடேசன் தொடர்பு கொண்டிருந்தார் என்பதையும் றொகான் சந்திரநேரு இது தொடர்பில் ராஜபக்சவை சந்தித்திருந்தார் என்பதையும் நான் விரைவில் அறிந்து கொண்டேன்.
சில மணித்தியாலங்களின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் உண்மையில் என்ன நடந்ததென்பதை எடுத்துக் கூறினார்: "நடேசன் மற்றும் அவரது குடும்பத்தவர்களுக்கு தான் பூரண பாதுகாப்பை வழங்குவதாக அதிபர் என்னிடம் கூறினார். தன்னுடன் 300 பேர் இருப்பதாகவும் அதில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் நடேசன் என்னிடம் தெரிவித்திருந்தார்" என றொகான் சந்திரநேரு கூறினார்.
"புலிகள் சரணடையும் போது அந்த இடத்தில் சென்று அவர்களைப் பொறுப்பேற்பதாக நான் அதிபரிடம் கூறியபோது, 'பெருந்தன்மையும் நற்பண்பும் கொண்ட இராணுவத்தையே நாம் வைத்திருக்கிறோம். யுத்த வலயம் ஒன்றுக்குள் செல்வதற்கான தேவை உங்களுக்கு இல்லை. ஆபத்தான வாழ்வை நோக்கிச் செல்ல வேண்டிய தேவையும் உங்களுக்கு இல்லை' என அதிபர் பதிலளித்தார்" என றொகான் சந்திரநேரு மேலும் எடுத்துக் கூறினார்.
அதிபரின் சகோதரரான பசில் தன்னிடம் "அவர்கள் மிகப் பாதுகாப்பாக வந்தடைவார்கள். அவர்கள் வெள்ளைக் கொடி ஒன்றை ஏந்தியவாறு வரவேண்டும்" என கூறியதாகவும் அத்துடன் சரணடையும் புலிகள் இராணுவ நிலையின் ஊடாக எந்தப் பாதையைப் பயன்படுத்தி வரவேண்டும் என்பதையும் பசில் தன்னிடம் எடுத்துக் கூறியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரான றொகான் சந்திரநேரு தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை மு.ப 6.20 மணிக்கு றொகான் சந்திரநேரு, நடேசனைத் தொடர்பு கொண்ட போது, "நாங்கள் தயாராகி விட்டோம். நான் வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தவாறு முதலில் செல்லவுள்ளேன்" என நடேசன் தன்னிடம் தெரிவித்ததாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
"வெள்ளைக் கொடியை உயர்வாகப் பிடிக்கவும், அவர்கள் உங்களைப் பார்க்க வேண்டும். நான் உங்களை பின்னேரம் சந்திக்கிறேன்" என இறுதியாக நடேசனிடம் றொகான் சந்திரநேரு கூறியிருந்தார்.
"வெள்ளைக் கொடியை ஏந்தியவாறு பல எண்ணிக்கையான ஆண்கள் மற்றும் பெண்களைக் கொண்ட குழுவொன்றுடன் இராணுவ நிலைகளின் ஊடாக நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் நடந்து சென்றனர். பின்னர் இவர்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டனர்" என இச்சம்பவத்தை நேரில் கண்டவரும், மிகப் பயங்கரமான யுத்த வலயத்திலிருந்து தப்பி வந்த தொண்டர் அமைப்பைச் சேர்ந்த தமிழ் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
"சிங்களப் பெண்ணான நடேசனின் மனைவி இராணுவத்தைப் பார்த்து, அவர் சரணடைய முயற்சிக்கிறார். நீங்கள் அவரைச் சுடுகிறீர்கள் என சிங்களத்தில் உரத்துக் கத்தினார்" எனவும் இதனை நேரில் பார்த்த அத்தமிழ் பணியாளர் தெரிவித்துள்ளார்.
நடேசனுடன் சென்ற அனைவரும் கொல்லப்பட்டனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். அவர் தற்போது தலைமறைவாக உள்ளார்.
சிறிலங்கா அதிபராலும் அவரது சகோதரராலும் அச்சுறுத்தப்பட்ட நிலையில் தான் நாட்டை விட்டு வெளியேறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவராகக் கடமையாற்றும் நம்பியாரின் கடப்பாடு கடந்த சில நாட்களில் கேள்விக்குறியாகியுள்ளது. இவரது சகோதரரான சதீஸ் நம்பியார் 2002ம் ஆண்டிலிருந்து சிறிலங்கா இராணுவத்திற்கான ஆலோசகராகச் செயற்படுகிறார்.
சிறிலங்கா இராணுவத்தின் தளபதியான ஜெனரல் சரத் பொன்சேக, "உயரிய இராணுவத் தலைமைக்கு இருக்க வேண்டிய பண்புகளை தனது செயற்பாடுகளின் மூலம் வெளிக்காட்டியுள்ளார்" என சதீஸ் நம்பியார் முன்னர் தனது கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தார்.
நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் சிறிலங்காத் தீவில் தொடரப்பட்ட ஆயுத மோதலுக்கு சமாதான வழித் தீர்வொன்றை எட்ட முயற்சித்தனர். அவர்கள் சிறுபான்மைத் தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய அரசியற் தலைவர்களாகச் செயற்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை எழுதுவதில் ஊடகவியலாளர் என்ற ரீதியில் நான் மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.
இந்தச் சம்பவத்தை எழுதுவதில் ஊடகவியலாளர் என்ற ரீதியில் நான் மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.
சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழ் மக்கள் மீது சுமத்தப்பட்டிருந்த உணவு மற்றும் மருந்துத் தடைகள் தொடர்பாக ஆராய்ந்து தகவல் சேகரிப்பதை நோக்காகக் கொண்டு நான் முதன் முதலில் 2001ல் சிறிலங்காவுக்குச் சென்றிருந்தேன். ஆறு ஆண்டுகளாக சிறிலங்காவில் தமிழர் வாழும் பிரதேசங்களுக்கு பத்திரிகையாளர்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
ஒரு நாளிரவு சிறிலங்கா இராணுவ நிலைகளைக் கடந்து நாம் தமிழர்கள் வாழ்ந்த பிரதேசங்களுக்கு சென்று கொண்டிருந்த போது, என்மீது சிறிலங்கா இராணுவம் RPG தாக்குதலை மேற்கொண்டது. நான் "ஊடகவியலாளர், ஊடகவியலாளர்" என கத்தும் வரை அவர்கள் தாக்குதலை மேற்கொண்டனர். இதில் நான் காயமடைந்தேன்.
2001 ல் நான் தமிழ் மக்களுடன் தொடர்பைப் பேண ஆரம்பித்ததிலிருந்து அண்மைய மாதங்களில் அவர்களின் தலைமையிலிருந்து தொலைபேசி அழைப்புக்கள் பெறும் வரையான இடைப்பட்ட காலத்தில் தமிழ் மக்களுடன் ஆழமான நெருங்கிய தொடர்பை நான் பேணிக்கொண்டேன்.
எந்தவொரு கருத்துக்கணிப்பையும் புலிகள் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும், யுத்த நிறுத்தம் ஒன்று மேற்கொள்ள வேண்டிய தேவையிருப்பதாகவும் நடேசன் என்னிடம் தொலைபேசி அழைப்பின் மூலம் தெரிவித்திருந்தார். ஆனால் இவரது வேண்டுகோள் பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது.
The Sunday Timesல் இருந்து எடுக்கப்பட்ட இச்செய்திக் கட்டுரையை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
No comments:
Post a Comment