Translate

Thursday 16 February 2012

வலி.வடக்கில் 26ஆயிரம் மக்களின் நிலங்களை நிரந்தரமாக ஆக்கிரமிக்கிறது இராணுவம்?!

வலிகாமம் வடக்கு முன்னரங்கப் பகுதியில் பலாலி படைத் தளத்தின் முன்னரங்க நிலைகளாக விளங்கும் ஒட்டகப்புலத்திலிருந்து வயாவிளான் ஊடாகத் தெல்லிப்பழைச் சந்தி வரைக்கும் அங்கிருந்து காங்கேசன்துறை வரை நிரந்தரத் தடுப்பு வேலிகளை இராணுவத்தினர் அமைத்து வருகின்றனர். 

இதனால் வலி.வடக்கில் பலாலி இராணுவத் தலைமையகத்தை அண்மித்த இடங்களில் உள்ள 23 கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் மீளக்குடியமர்வதற்கான சாத்தியங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
நிரந்த தடுப்பு வேலிகளை அமைப்பதற்கான தூண்கள் இப்போது “கொங்கிறீட்” போட்டு நடப்பட்டு வருகின்றன. இந்த பாதுகாப்பு வேலிக்குள் 23 கிராம அலுவலர் பிரிவுகள் அடங்கி உள்ளன. 7,273 குடும்பங்களைச் சேர்ந்த 26,281 பேர் இப்பகுதிகளில் மீள்குடியமர்வுக்காகக் காத்திருக்கின்றனர்.
பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுவரும் பகுதிக்கு அப்பால் குறைந்தது ஒன்றரை வருடங்களுக்கு யாரையும் அனுமதிக்கப் போவதில்லை என்று படையினர் தமக்குத் தெரிவித்திருக்கின்றனர் என மக்கள் சிலர் கூறுகின்றனர். இது உறுதிப்படுத்தப்படாத போதும், முன்னரங்குகளில் நிரந்தர வேலிகள் அமைக்கப்படுவதானது மக்களின் மீள்குடியமர்வு குறித்த பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
வலி. வடக்கில் இருந்து 1990 ஆம் ஆண்டு மக்கள் இடம்பெயர்ந்தனர். போர் முடிந்ததன் பின்னர் இந்தப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள 12 கிராம அலுவலர் பிரிவுகளில் மட்டுமே மக்கள் மீளக்குடியமர் அனுமதிக்கப்பட்டனர். கடந்த வருட இறுதிக்குள் எஞ்சியவர்களும் மீளக்குடியமர்த்தப்படுவர் என்று அமைச்சர்களும் அதிகாரிகளும் தெரிவித்து வந்தனர். ஆனால் 2011மே மாதத்தின் பின்னர் எந்தவிதமான மீள்குடியமர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் புனரமைக்கப்பட்டு வரும் ஒட்டகப்புலம் கட்டுவன் வீதியின் இடையே உள்ள 4 கிலோ மீற்றர் தூரமும் இந்த பாதுகாப்பு எல்லை வேலிக்குள் அடங்குவதால் அதன் புனரமைப்பு வேலைகள் கைவிடப்பட்டுள்ளன.
அந்த 4 கிலோ மீற்றர் வீதியையும் தனியாரின் காணிகளுக்கு ஊடாகப் புதிதாக அமைக்குமாறு படைத்தரப்பினரால் தெரிவிக்கப்பட்ட யோசனை நிராகரிக்கப்பட்டதை அடுத்து குறிப்பிட்ட துண்டு வீதியைப் புனரமைப்பதைத் தாம் நிறுத்திக் கொண்டு விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவினால் வல்வை அராலி வீதிக்குக் “கார்ப்பெற்” போடும் இந்தத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment