சர்வதேச நெருக்கடிகளிலிருந்து தன்னைப் பாதுகாப்பதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் துடித்துக்கொண்டிருக்கும் சிங்கள அரசாங்கம் வழமைபோன்று இம்முறையும் தனது புலிப் பூச்சாண்டி காட்டும் வேலையை முன்னெடுத்திருக்கிறது. இந்தியாவின் இரகசிய முகாம்களில் பயிற்சி பெற்ற 150 புலி உறுப்பினர்கள் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளனர் என்று கதையைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலம் உலகின் பார்வையைத் தன் பக்கம் திருப்ப முயன்ற சிறீலங்கா அரசு இதிலும் தோல்வி கண்டிருக்கிறது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து சிறீலங்கா அரசு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு இராஜதந்திர நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றது. சிங்கள மக்கள் மத்தியிலும் மகிந்தவின் செல்வாக்கு சரியத் தொடங்கியிருக்கிறது. இதனால் மகிந்ந குடும்பம் பெரும் அச்சத்திலுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறான நெருக்கடிகள் சூழ்ந்த நிலையிலேயே மகிந்ந அரசு ஒரு புரளியைக் கிளப்பி விட்டிருக்கிறது. தனக்குப் சார்பான ஊடகமொன்றின் மூலம் புலிப் பூச்சாண்டிக் கதையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. அதாவது, சிங்களப் பத்திரிகையாகிய ஐலண்ட் பத்திரிகையில் சிறீலங்கா இனவாத அரசு செய்தியன்றைக் கசிய விட்டது.
‘இந்தியாவிலுள்ள இரகசிய முகாமில் பயிற்சி பெற்ற 150 வரையான புலி உறுப்பினர்கள் நாட்டுக்குள் நுழைந்துள்ளார்கள். அவர்கள் நாட்டின் சில இடங்களில் தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும். இந்தியாவிலிருந்த வந்த ஒருவரைக் கைது செய்ததன் மூலம் இந்த உண்மை வெளிப்பட்டுள்ளது’ என்று ஐலண்ட் பத்திரிகை தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தது. கிழக்கு மாகாணத்தில் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டதன் பின்னணியிலேயே இந்தப் புலிப் பூச்சாண்டிக் கதை கட்டவிழ்த்து விடப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியாகியவுடன் கிழக்கு மாகாணம் முழுவதும் சோதனைகள் அதிகரிக்கப்பட்டன. யுத்த காலத்தைப் போன்று இராணுவம் வீதிக்கு இறக்கப்பட்டது. பொது மக்கள் மீதான கெடுபிடிகள் அதிகரித்தன. இரவு பகலாக வீதிச் சோதனைகள் இடம்பெற்றன. இதேபோன்றே யாழ். குடாநாட்டிலும் சோதனைகள் அதிகரித்தன. மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கரையோரப் பாதுகாப்புகளும் அதிகரிக்கப்பட்டன.
சிறீலங்கா அரசும் இராணுவமும் இத்தனை அடாவடிகளை மேற்கொண்ட போதிலும் இந்த விடயம் குறித்து சர்வதேசம் எந்த விதத்திலும் அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் சிறீலங்கா அரசு தொடர்பாகவும் அதன் இராணுவம் தொடர்பாகவும் சர்வதேசத்திற்கு நீண்ட படிப்பினைகள் உண்டு. கடந்த காலங்களில் சிறீலங்கா அரசாங்கம் ஏதாவது காரியத்தைச் சாதிக்க முற்படுகின்ற போது முதலில் புலிப் பூச்சாண்டிக் கதையையே கட்டவிழ்த்து விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது.
தனக்கு விரோதமான வெளிநாட்டு இராஜதந்திரிகளின் கொழும்பு வருகை, வெளிநாடுகளில் கடன் பெறுதல், ஆயுதக் கொள்வனவு, மற்றும் வெளிநாடுகளின் அனுகூலங்களைப் பெறுதல் போன்ற பல சந்தர்ப்பங்களிலும் அரசாங்கம் தென்னிலங்கையில் புலிப் பூச்சாண்டி என்ற கதையைப் பரப்புவதையும் அதனைக் காரணம் காட்டி சோதனைகளை அதிகரிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தது.
ஏன், அரசாங்கம் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு கூட தென்னிலங்கை மக்களிடையே புலிப் பூச்சாண்டி காட்டிய வரலாறுகள் உண்டு. மகிந்த அசாங்கம் மட்டுமல்ல. இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த பிரேமதாச, விஜயதுங்க, சந்திரிகா அரசாங்கங்களும் இதே கொள்கையைக் கடைப்பிடித்தே தமது ஆட்சியைத் தக்க வைத்தனர். இந்த நிலையில் தான் தற்போதும் மகிந்த அரசு புலிப் பூச்சாண்டிக் கதையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.
சிறீலங்கா அரசு தற்போது பல்வேறு விதமான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட ஜெனீவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு அரசக்கு சர்வதேச ரீதியான அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.
சர்வதேச இராஜதந்திரச் செயற்பாடுகளிலும் சிறீலங்கா தொடர்ந்தும் தோல்விகளையே சந்தித்துக்கொண்டிருக்கின்றது. இதற்கு மேலாக சிறீலங்காவில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மலைபோல உயர்ந்துள்ளன. இதனால் தென்னிலங்கையிலுள்ள சிங்களக் கிராமப்புற மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். விலை அதிகரிப்புகளுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவதற்கும் முஸ்தீபுகள் இடம்பெறுகின்றன.
இந்த நிலையில் சர்வதேசத்தை திசை திருப்புவதற்காகவும் சிங்கள மக்களைச் சமாளிப்பதற்காகவுமே இலங்கைக்குள் புலிகள் ஊடுருவி விட்டார்களென்ற கட்டுக் கதையை சிங்கள அரசு திட்டமிட்டுப் பரப்பியது. சிங்கள மக்கள் மத்தியில் இந்தக் கதை எடுபட்டதோ என்னவோ, சர்வதேச ரீதியாக இது எந்தவொரு அதிர்வலைகளையும் ஏற்படுத்தவில்லை. தனது கட்டுக் கதையை நம்பி இந்திய அரசும் தனது கரையோரப் பாதுகாப்புக்களைத் தீவிரப்படுத்துவதுடன் உள்ளக சோதனைகளையும் மேற்கொள்ளுமென்றே சிறீலங்கா கருதியிருந்தது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் உண்மையற்றதென்று இந்தியப் காவல்மா அதிபர் உடனடியாகவே தெரிவித்தார். இந்தியாவில் தடை செய்யப்பட்ட எந்தவொரு அமைப்பின் பயிற்சி முகாமும் இந்தியாவில் இல்லையென்று அவர் உறுதிபடக் கூறினார். எதுவுமே செய்ய முடியாத இக்கட்டான நிலையில் ஒருவாரம் கழித்து சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வர்ண குலசூரியர் அறிக்கையன்றை வெளியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அதாவது வடக்கு கிழக்கில் புலிகளின் அச்சுறுத்தல் இல்லையென்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆட்சியை நடத்துவதற்கு கருப்பொருள் எதனையும் கண்டுபிடிக்க முடியாத சிறீலங்கா அரசாங்கம் காலத்திற்கு காலம் புலிகளின் பெயரைப் பயன்படுத்தியே ஆட்சியைத் தக்க வைத்து வருகின்றது. போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக அரசாங்கம் கூறுகின்ற போதிலும் இன்றுவரை புலிகளின் நாமத்தைப் பயன்படுத்தியே அரசு ஆட்சியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. புலிகள் ஏதோ வானத்திலிருந்து வந்தவர்கள் என்பது போலவும் அவர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்திவிட்டதாகவும் சிறீலங்கா அரசு மார்தட்டிக்கொண்டிருக்கிறது.
முள்ளிவாய்க்காலுடன் எல்லாம் கிள்ளியெறியப்பட்டுவிட்டதாகவே சிங்களம் சிந்தித்துக்கொண்டிருக்கிறது. புலிகள் அயல் நாட்டிலிருந்து வந்து இங்கு யுத்தம் செய்யவில்லை. ஆதிக்கம் செலுத்துவதையும் அவர்கள் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மண்ணில், தமிழீழப் பெற்றோரின் வயிற்றில் பிறந்தவர்கள். இனப்பற்றோடு பிறந்ததால் அவர்கள் இனமானம் காக்கப் புறப்பட்டார்கள். நெஞ்சத்தில் வீரம் விளையாடியதால் அவர்கள் விடுதலை வேட்கையுடன் வெகுண்டெழுந்தர்கள்.
தாயை நேசித்ததால் தாய் நாட்டை நேசிக்க வேண்டி ஏற்பட்டது. ஆயிரமாயிரமாய் ஆர்ப்பரித்து வந்த எதிரியின் முன்னே அணை போட்டுநின்று மக்களைப் பாதுகாத்தவர்கள் தான் புலிகள். கெரில்லாப் புலிகளாகத் தோற்றம் பெற்று கடற் புலிகளாக, கரும் புலிகளாக, வான் புலிகளாக, தரையிலே மரபு வழிச் சமராடும் மறவர்களாக வளர்ச்சி பெற்றவர்கள் தான் தமிழீழ விடுதலைப் புலிகள். தமிழ் மக்களுக்கான விடுதலை ஒன்றையே தமது இலக்காகக் கொண்டு இவர்கள் பயணித்தார்கள்.
புலிகளை வளர்த்தெடுத்த தலைவர் இன்றுவரை யாரிடமும் விலை போனதாக வரலாறு இல்லை. இத்தகைய சிறந்த தலைவரின் காலத்தில் வாழ்ந்த தமிழீழ மக்களும் எதிரிக்கு என்றுமே அடிபணிய மாட்டார்கள். வீரம் செறிந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் எந்தவொரு வீணர்களுக்கும் அடிபணிய மாட்டார்கள்.
சிறீலங்கா அரசாங்கம் நினைப்பதைப் போன்று புலிகள் எங்கும் செல்லவில்லை. அவர்கள் தமிழ் மக்களுக்குள்ளேயே இருக்கிறார்கள். காலம் வரும்போது அவர்கள் வெளியேவருவார்கள். தலைவரின் கட்டளை கிடைத்தவுடன் அவர்கள் தாயக மண்ணில் வலம் வருவார்கள். அதுவரை காலமும் தலைவரின் கட்டளைப்படி புலம்பெயர் தமிழ் மக்கள் தற்போது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தலைவரின் வழிகாட்டலில் புலம்பெயர் மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற எமது விடுதலைப் போராட்டம் தற்போது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. மிக விரைவில் தாயகத்திலும் ஐ.நா முற்றத்திலும் தமிழீழ தேசியக் கொடி அசைந்தாடும். அப்போது சிறீலங்கா அரசு வாய்மூடி மௌனியாக இருக்கும் என்பதில் தமிழீழ மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் உள்ளனர்.
நன்றி : ஈழமுரசு
No comments:
Post a Comment