
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் எதிர்வரும் பதினொராம் திகதி கொழும்பு வருகிறார்.
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள் நெருங்கிவரும் நிலையிலும் அந்தக் கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாகக் கொண்டுவரப்பட உள்ள தீர்மானத்துக்கான முன்மொழிவை ஆதரிக்க வோஷிங்ரன் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் பிளேக் கொழும்பு வருகிறார். அவரது இந்த அவசர பயணத்தின் பின்னணி குறித்து உடனடியாக விவரம் வெளிவரவில்லை. எனினும் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட பல முக்கிய தரப்புகளுடன் பேச்சு நடத்த உள்ள பிளேக், ஆளுங்கட்சியின் உயர்மட்டத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.
பிளேக் இலங்கைக்கு வருகையில்:
தனிப்பட்ட பயணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் செல்லவுள்ளார். இதனால் கொழும்பில் இரண்டு நாள்கள் மட்டுமே தங்கியிருக்கும் பிளேக்கிற்கும், ஜனாதிபதி மஹிந்தவிற்குமிடையில் நேரடிப் பேச்சுகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவென உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன. அரசு கூட்டமைப்பு பேச்சு, ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வில் இலங்கையின் பங்கு உட்பட்ட பல விடயங்கள் குறித்து பிளேக் கொழும்பில் பேச்சு நடத்துவாரென்றும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.
No comments:
Post a Comment