ஈரானிற்கும் அமெரிக்காவிற்குமிடையே தீவிரமடையும் இராஜதந்திரப் போர், இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும்பாதிப்பினை ஏற்படுத்தப் போகிறது.
சர்வதேச அளவில் இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணைக்கான அழுத்தங்கள் அதிகரிக்கும் அதேவேளை, மத்திய கிழக்கு நெருக்கடியும் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவும் இலங்கையின் திறைசேரியை ஆட்டம் காண வைக்கிறது.
இந்த வாரம், அனைத்துலக குற்றவியல் நீதித்துறை மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி ஸ்டீபன் ராப் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.அத்தோடு மத்திய மற்றும் தெற்காசிய பிராந்தியத்திற்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உதவிச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக்கும், அமெரிக்க மக்கள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பான உதவிச் செயலர் மரி ஒட்டேரோ (Marie Otero) அவர்களும் வருகை தர உள்ளனர்.
பெப்ரவரி 27ஆம் திகதியிலிருந்து மார்ச் 23 ஆம் திகதிவரை நடைபெறும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்த விவகாரம் எழுப்பப்படாலாமென்று எதிர்வு கூறப்படும் நிலையில் இம்மூவரின் வருகையும் முக்கியத்துவமடைகிறது. மானுடத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாளும் ஸ்டீபன் ராப்பினதும், மரி ஒட்டேரோவினதும் பயணமானது, மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடர் பற்றி பேசுவதற்கானதென ஊகிக்கப்படுகிறது.
அதாவது இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸிற்கு அமெரிக்க இராஜாங்க திணைக்கள செயலாளர் ஹிலாரி கிளின்டன் வரவேற்புக் கடிதம் அனுப்பிய பின்னரே இம்மூவரின் தொடர் விஜயங்கள் மேற்கொள்ளப்படுவதை அவதானிக்கலாம்.
அனேகமாக மனித உரிமைப் பேரவையில் இலங்கை குறித்து மேற்கொள்ளப்படும் விவாதங்கள் அல்லது பிரேரணைகள் என்பன, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் அமையுமென எதிர்பார்க்கலாம்.
சுயாதீன சர்வதேச போர்க் குற்ற விசாரணையொன்று நடத்தப்பட வேண்டுமென்கிற முடிவினை மேற்குலகம் ஏற்கனவே தீர்மானித்திருந்தால், இத்தகைய இணக்கப்பாட்டு விஜயங்கள் தேவையற்றது. ஆகவே, நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதியறிக்கையை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்க மாட்டோமென அரசு உறுதிப்படக்கூறியுள்ள நிலையில், அதிலுள்ள பரிந்துரைகளையாவது நிறைவேற்றுங்கள் என்கிற அழுத்தத்தை முதல் கட்டமாக பிரயோகிக்க
மேற்குலகம் விரும்புகிறது.சுயாதீன விசாரணைப் பொறிமுறை என்கிற ஆயுதத்தை, இறுதியாகப் பயன்படுத்தவே மேற்குலகம் முனையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து நோக்க வேண்டும்.
வாங்கிய கடனை அடைப்பதற்கு, மேலதிக கடனை வாங்கும் வழிமுறைகள் பற்றியே மத்திய வங்கி ஆளுனரும் திறைசேரிச் செயலாளர்களும் மூளையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள் போல் தெரிகிறது. பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மொத்த உள்ளூர் உற்பத்தியின் (GDP) 4 சதவீதத்தை தொடுவதால், அரசிறை ஒருங்கிணைப்பு (Fiscal Consolidation) கடினமாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.அதேவேளை, உட்கட்டுமானத் திட்டங்களுக்கு கூடுதல் முதலீடுகளை செலவிட்டாலும், அதிலிருந்து பெறும் வருவாய் குறைவாக உள்ளது.
முதிர்ச்சியடையும் அரச முறிகளுக்கு நிதி தேவைப்படுகிறது. அதாவது பத்திரங்களைக் கொடுத்து காசு வாங்கலாம். அதற்கான வட்டியையும் செலுத்தலாம். ஆனால் அதற்கான கால எல்லை அல்லது முதிர்ச்சி நிலை அண்மிக்கும்போது வாங்கிய கட னைத் திரும்பவும் கொடுக்க வேண்டும்.ஆகவே மறுபடியும் புதிய அரச முறிகளை விற்று அதிலிருந்து பெறப்படும் நிதியைக் கொண்டு பழைய முதிர்ச்சியுறும் முறிகளுக்கு செலுத்தலாம்.
ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான புதிய அரச முறிகள் விற்பனை செய்யப்படுமென மத்திய வங்கி அண்மையில் வெளியிட்ட செய்தி இதனை உறுதி செய்கிறது.
மூலதனச் சந்தையில் இத்தகைய முறி வியாபாரத்தில் தவிர்க்க முடியாமல் ஈடுபடும் அரசு, சர்வதேச நாணய நிதியத்தோடு வேறு வகையான பேரம் பேசலில் ஈடுபவதைக் காணலாம்.
ஏற்கனவே 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை 1.1 சதவீத வட்டிக்கு சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கியுள்ளது. அடுத்த தவணை கொடுப்பனவான 800 மில்லியன் கடன் தொகை 3.1 சதவீத வட்டிக்கு வழங்கப்படுமென அந்நிதியம் கூறியதால், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்
குழப்பமடைந்துள்ளார். ஒட்டுமொத்த கடனிற்கும் 3.1 சதவீத வட்டி அறவிடப்படுமென்றும் அவர் நினைத்ததால் வந்த குழப்பம் இது. ஆனாலும் 3.1 சதவீத வட்டி, இனிமேல் வழங்கப் போகும் 800 மில்லியன் டொலர்களுக்கு மட்டுமே என்று மின்னஞ்சல் ஊடாக உறுதிப்படுத்தியவுடன் சிக்கல் தீர்ந்துவிட்டது.
இவை தவிர இலங்கை நாணயத்தின் மதிப்பிறக்கம் தொடர்பான புதிய சிக்கலொன்றும் உருவாகிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
உண்மையான பெறுமதியைவிட, இலங்கை நாணயத்தின் மதிப்பு 20 சதவீதத்தால் அதிகரித்துக் காணப்படுவதால் அதனை இயல்பான முதிர்வுக்கு அனுமதிக்க வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சீனா தனது நாணயத்தின் பெறுமதியை குறைத்து வைத்து ஏற்றுமதியை அதிகரிக்கிறது என்பதோடு ,அதன் யுவானை இயல்பான முதிர்ச்சிக்கு அனுமதிக்க வேண்டுமென்கிற அமெரிக்காவின் நீண்டகாலக் குற்றச்சாட்டை நினைவிற் கொள்வது பொருத்தமானது.
கடந்த வருடம் நவம்பரில் 3 சதவீதத்தால் இலங்கை ரூபாய் மதிப்பிறக்கம் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். மறுபடியும் இம்மாதம் 2 ஆம் திகதி, நாணயத்தின் பெறுமதியை 20 சதத்தால் [cents] குறைத்து, அமெரிக்க டொலர் ஒன்றிற்கு 114.10 ஆக நிர்ணயித்தது இலங்கை மத்திய வங்கி.
ஆனாலும் நிர்ணயம் அல்லது மாற்றத்தைத் தடுப்பது (Pegging) என்பதைப் பிரயோகிக்காமல்,நெகிழ்வான நாணய மாற்று விகிதக் கொள்கையை (Flexible Exchange Rate Policy) கடைப்பிடிக்க வேண்டுமென்பதைத் தொடர்ந்தும் வலியுறுத்துகிறது நாணய நிதியம்.
அதேவேளை, இம்மாதம் 3 ஆம் திகதியன்று, அரச வட்டி வீதத்தை 0.5 வீதத்தால் அதிகரித்துள்ளது மத்தியவங்கி. நாணயமாற்று விகிதத்தை நிர்ணயிப்பது மற்றும் வட்டி வீதத்தை உயர்த்துவது போன்ற நகர்வுகள், அதிகரிக்கும் இறக்குமதியை மட்டுப்படுத்துவதோடு, அமெரிக்க டொலருக்கான தேவையையும் குறைத்து விடுமென மத்திய வங்கி எண்ணுவது போலுள்ளது.
இலங்கையின் தற்போதைய நடப்பு கணக்கு பற்றாக்குறையானது (Current Account Deficit),மொத்த உள்ளூர் உற்பத்தியின் 20 சதவீதத்தை எட்டியுள்ளது.ஆகவே வளர்ச்சியடையும் வர்த்தக பற்றாக்குறையை எவ்வாறு குறைப்பது என்கிற சிக்கலில் திணறுகிறது இலங்கையின் திறைசேரி.
இறக்குமதியின் தேவை அதிகரிக்கும்போது, சேமிப்பிலுள்ள டொலரை பயன்படுத்தி, ரூபாவின் பெறுமதி மதிப்பிறக்கமடையாமல் எவ்வாறு தடுப்பது என்கிற பிறிதொரு நெருக்கடிக்குள்ளும் மத்திய வங்கி தள்ளப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.
ஏற்கனவே கடந்த வருடத்தில் மட்டும், மத்திய வங்கியின் ஒரு பில்லியன் டொலரிற்கு மேற்பட்ட நிதியினை சர்வதேச நாணயச் சந்தை விழுங்கிய நிலை ஏற்பட்டது.
2011 ஆம் ஆண்டு ஆகஸ்டில், 8 பில்லியன் டொலர்களாவிருந்த வெளிநாட்டு நாணயக கையிருப்பு, அதேவருடம் டிசெம்பரில் 5.9 பில்லியனாக வீழ்ச்சியடைந்தது.அதேவேளை இக் கையிருப்பு இன்னமும் குறைவடையக் கூடிய நிலை காணப்படுவதாக கலாநிதி அர்ச்சுனா சிவானந்தன் போன்ற பொருளியலாளர்கள் எச்சரிக்கின்றார்கள்.
அத்தோடு விலையுயர்ந்த நுகர்வுப் பொருட்களின் இறக்குமதியும் திறைசேரிக் கையிருப்பை வற்றச் செய்கிறது. உதாரணமாக 2010 ஆம் ஆண்டை விட 2011 இல் பதிவு செய்யப்பட்ட கார்கள் 60.14 சதவீதமாகவும், முச்சக்கர வண்டி 39.96 சதவீதமாகவும், மோட்டார் சைக்கிள்கள் 11.72 சதவீதமாகவும் உயர்வடைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, அரச வட்டி வீத அதிகரிப்பால் இறக்குமதியாகும் பொருட்களின் விலைகளும் உயர்வடையும். இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம் எரிசக்தி துறையாகும். இந்த வட்டி அதிகரிப்பு, எண்ணெய் இறக்குமதி பெரியளவில் தங்கியிருக்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை அதிகம் பாதிக்கும். அந்தப் பாதிப்பும் அதனால் உருவாகும் சுமையும் மக்கள்மீதே இறக்கி வைக்கப்படுமென்பதை சுட்டிக்காட்டத் தேவையில்லை.
அத்தோடு ஈரான் மீதான மேற்குலகின் பொருளாதாரத்தடை மேலும் பல நெருக்கடிகள உருவாக்கப் போகிறது என்பதில் ஐயம் இல்லை. இத்தடை குறித்து 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானம், 2012ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி நடைமுறைக்கு வருகிறது.
இலங்கையைப் பொறுத்தவரை அதன் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தேவையான 93 சதவீதமான மசகு எண்ணெய் ஈரானிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. ஏனைய நாடுகளில் உற்பத்தியாகும் எண்ணெய் உடன் ஒப்பிடுகையில், இதன் சல்பர் (Sulphur) அளவும், அடர்த்தியும் மிக அதிகமானது. இந்த எண்ணெயைச் சுத்திகரிக்கக் கூடிய வகையிலேயே சப்புகஸ்கந்த இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது தான் இங்கு எழும் சிக்கல் நிலைமைக்கான
காரணியாகவிருக்கிறது.
ஏப்ரல் 2008இல், சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு மையத்தைத் தரமுயர்த்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈரான் ஈடுபட்டதோடு, இலங்கையின் உட்கட்டுமானப் பணிகளுக்காக
1.5 பில்லியன் டொலர்களை கடனடிப்படையில் வழங்க முன்வந்தது. ஆனால் சபுகஸ்கந்த நிலையத்தின் செயற்திறனை இரட்டிப்பாக உயர்த்தும் திட்டத்தில் 500 மில்லியன் டொலர்களை தனது பங்காக இலங்கை அரசு செலுத்த வேண்டுமென்கிற நிபந்தனையை ஈரான் விதித்தது. இதனை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளாததால் தரமுயர்த்தும் இத்திட்டம் கைவிடப்பட்டது.
ஆயினும் தற்போது எழுந்துள்ள சிக்கல் என்னவென்றால், மேற்குலகின் ஈரான் மீதான பொருளாதாரத் தடையை மீறி ரஷ்யா, சீனா போன்று இலங்கையாலும் செயற்பட முடியுமா என்பதுதான்.இத்தனை காலமாக ஏ.சி.யூ. (ACU) என்றழைக்கப்படும் ஏசியன் கிளியறிங் யூனியன் (Asian Clearing Union) ஊடாகவே ஈரானிற்கான நிதிப் பரிவர்த்தனைகளை இலங்கை மேற்கொண்டு வருகிறது.
1974 ஆம் ஆண்டு டிசெம்பர் 9 ஆம் திகதி, ஐ.நா. சபையின் ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான சமூக பொருளாதார ஆணைக்குழுவின் முயற்சியினால் இந்த ஒன்றியம் உருவானது. பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, ஈரான், மாலைதீவு, மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையை உள்ளடக்கிய இவ்வொன்றியத்தின் தலைமைப் பணிப்பாளராக இந்தியாவைச் சார்ந்த கலாநிதி டி. சுப்பராவும், செயலாளர் நாயகமாக ஈரானைச் சார்ந்த திருமதி லிடா போர்ஹன் அசாத்தும் செயற்படுகின்றார்கள்.
இதன் இலக்காக, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஒன்றிய அங்கத்துவ நாடுகளுக்கிடையிலான நாணய பரிவர்த்தனை என்பன அமைகின்றன. ஆகவே
அமெரிக்காவின் தடை விவகாரத்தால் ஜூலை மாதம் வரையான ஏற்றுமதி-இறக்குமதிக்கான நிதிப் பரிவர்த்தனையை எவ்வாறு கையாள்வது என்பதோடு, அடுத்து வரும் நாட்களில் எங்கிருந்து எண்ணெயை கொள்வனவு செய்வது என்பதையிட்டு இலங்கை அரசு கலக்கமடைவதை நோக்கலாம்.
அத்தோடு இந்த ஒன்றியத்தின் ஊடாக இலங்கை மேற்கொள்ளும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை எடுத்துக் கொண்டால், கடந்த டிசெம்பர் மட்டும், இலங்கை பெற்ற கடன் தொகை 279.83 மில்லியன் டொலர்களென்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
அதாவது 2011 இல் இலங்கை பெற்ற மொத்த கடன் 4065 மில்லியன் டொலர்களாகும். 2010இல் இத்தொகை 2552 மில்லியன் டொலர்களாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆகவே தினமும் 50,000 பீப்பாய் எண்ணெய் தேவைப்படும் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு, அதன் பயன்பாட்டிற்கு உகந்த செறிவான மசகு எண்ணையை ஓமான், சவூதி போன்ற நாடுகளிலிருந்து சிறிதளவு பெற்றுக் கொள்ள முயன்றாலும், நாட்டின் கடன் அதிகரித்துச் செல்வதைத் தடுக்க முடியாதென்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இத்தகைய பெரும் சிக்கலில் இலங்கை மாட்டித் தவிக்கும்போது, இம்மாதம் 2 ஆம் திகதியன்று அமெரிக்க திரைசேரியின் பிரதி உதவிச் செயலாளர் லூக் புரோனின் (Luke Bronin) அவர்கள், எண்ணெய் இறக்குமதி விவகாரம் குறித்து உரையாட கொழும்பிற்கு விஜயம் செய்திருந்தாரென கொழும்புச் செய்திகள் கூறுகின்றன.
இறக்குமதி செய்வதற்கான பணத்தை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்து அரச உயர் அதிகாரிகளுடன் புரோனின் உரையாடியுள்ளார்.ஆயினும் அமெரிக்க டொலர் நாணயத்தில் இந்த வர்த்தக நிதிப் பரிமாற்றம் நிகழக்கூடாது என்பதை வலியுறுத்தவே அவர் அமெரிக்காவிலிருந்து வருகை தந்தார் என்பதை அரச அதிகாரிகள் புரிந்து கொண்டார்கள்.
இந்தியாவும் தனது சொந்த நாணயத்தில் ஈரானுடன் வர்த்தகத்தை மேற்கொள்ளுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், ரூபாய் நாணயத்தின் பெறுமதியை மதிப்பிறக்கம் செய்துள்ளதோடு திறைசேரியின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பை கீழிறக்கி வைத்துள்ள இலங்கை என்ன நகர்வினை மேற்கொள்ளப் போகிறது என்பதே பலரிடம் எழும் காத்திரமான கேள்வியாகும்.
அமெரிக்க பிரதிநிதி லூக் புரோனின் வருகையைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமையன்று இந்திய பெற்றோலிய அமைச்சின் உயர்நிலை அதிகாரிகள் குழுவொன்றும் கொழும்பிற்கு வந்திறங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வந்தவர்கள், சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு மையத்தைத் தரமுயர்த்த தாம் தயாரென்கிற விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர். அத்தோடு இதற்கு அரசு உடன்பட்டால் தமது தொழில்நுட்ப பிரிவினர் விரைவில் இலங்கை வருவார்களென்றும் கூறிச் சென்றுள்ளனர்.
ஆனாலும் இச்சிக்கலை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து அரசின் உயர் மட்டங்களில் வேறு பல சிந்தனைகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஓமான், சவூதி அரேபியா மற்றும் கட்டார் போன்ற அரபு நாடுகளிலிருந்து சபுகஸ்கந்தவிற்கு உகந்த எண்ணெயை இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தையில் ஈடுபடலும் அடுத்த தெரிவாக சீனக் கம்பனி ஒன்றினூடாக ஈரானின் எண்ணெயை இறக்குமதி செய்வதும் அதற்குச் செலுத்தும் பணத்தை நீண்டகால கடனாக மாறிக் கொள்ளலுமாகும்.
இவை எவ்வாறு இருப்பினும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுக்கலாமென எதிர்வு கூறப்படும் நிலையில், அவ்வாறானதொரு மோதல் உருவானால் சவூதி, ஓமான், கட்டாரிலிருந்து இறக்குமதி செய்யும் கனவும் சிதைக்கப்படலாம்.
இம்மோதலால் ஹொர்மூஸ் கால்வாயில் (Strait of Hormuz) ஏற்படும் பதட்டம், சீனாவிற்கு மேற்கொள்ளும் எண்ணெய் ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆகவே மத்திய கிழக்கில் உருவாகும் முறுகல் நிலையால் இலங்கையின் பொருளாதாரம் ஆட்டம் காணும் நிலையை நோக்கி நகரப் போவதை ஊகிக்கக் கூடியதாகவுள்ளது.
இலங்கையின் இவ்வாறான சரிவு நிலையை இந்தியா எவ்வாறு தனது பிராந்திய நலனிற்குப் பயன்படுத்தப் போகிறது என்பதனை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
சீபா ஒப்பந்தம் கைகூடாத நிலையில், நாட்டின் இயங்கு நிலைக்கு ஆதாரமாக விளங்கும், எரிபொருள் உற்பத்தி மையத்தை கையகப்படுத்த இந்தியா முயற்சிக்கிறதா என்பதை அடுத்து வரும் மாதங்களில் காணலாம்.
நன்றி - வீரகேசரி
No comments:
Post a Comment