Translate

Thursday, 16 February 2012

‘சிறீலங்காவின் படைய நீதிமன்றம் ஓர் கபட நாடகம்’ – மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்!


இறுதிப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்யும் நிமித்தம் சிறீலங்கா அரசாங்கம் நிறுவுவதாக அறிவித்துள்ள படைய நீதிமன்றம் காலத்தைக் கடத்தும் ஓர் கபட நாடகம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

சனல்-4 தொலைக்காட்சியில் வெளியாகிய போர்க்குற்றக் காணொளிகள் உட்பட பன்னாட்டு மட்டத்தில் எழுந்துள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் நிமித்தம் ஐந்து பேர் கொண்ட படைய நீதிமன்றம் ஒன்றை விரைவில் தாங்கள் நிறுவ இருப்பதாக புதன்கிழமை (15.02.2012) சிறீலங்கா தரைப்படை தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய அறிவித்திருந்தார்.

இது குறித்து கருத்துரைத்திருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிறட் அடம்ஸ், போர்க்குற்றங்கள் தொடர்பாக பன்னாட்டு மட்டத்தில் எழுந்துள்ள அழுத்தங்களை திசைதிருப்பும் நோக்கத்துடனேயே இவ் அறிவித்தலை சிறீலங்கா தரைப்படை தளபதி வெளியிட்டிருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

போர்க்குற்றங்களை விசாரணை செய்வதில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு உண்மையான விருப்பம் இருந்திருக்கும் பட்சத்தில், அவ்வாறான விசாரணைகள் போர் முடிந்தவுடன் ஆரம்பித்திருக்கும் என்றும், யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் நெருங்கும் நிலையில் இதுவிடயத்தில் திடீரென அரசாங்கம் கரிசனை காட்டுவது அதன் கபட நோக்கத்தை உணர்த்தி நிற்பதாகவும் பிறட் அடம்ஸ் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள போர்க்குற்றத் தீர்மானத்தை திசைதிருப்பும் சதிநோக்கத்துடன் சிறீலங்கா அரசாங்கம் முன்னெடுக்கும் இக்கபட நாடகம் அர்த்தமற்றதொரு செய்கை என்றும், பிறட் அடம்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வன்னிப் போரில் தமிழீழ மக்கள் மீது பெரும் போர்க்குற்றங்களையும், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்களையும் இழைத்து இனவழிப்பை அரங்கேற்றிய சிங்கள ஆயுதப் படைகளை களத்தில் நின்று நேரடியாக வழிநடத்திய தளபதிகளில் ஒருவராக லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய விளங்கியதை இங்கு சங்கதி இணையம் சுட்டிக் காட்ட விரும்புகின்றது.

No comments:

Post a Comment