கிளாலிக் கடற் பகுதியில் முன்பு தொழில் செய்த மக்கள் இப்போது அதே தொழிலைச் செய்வதற்கு அனுமதிக்கப் படவில்லை. தமது வீடு வாசல்களை இழந்த இந்தக் குடும்பங்கள் கடந்த சில வருடமாக இடம் பெயர்ந்து வாழ்ந்தனர். மிக அண்மையில் அவர்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டாலும் ஒரு வகை நிவாரண உதவிகளும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.
ஏறத்தாழ 150 குடும்பங்கள் கிளாலிக்கு வந்துள்ளன. தமது கையிருப்புக்களை மூலதனமாக்கி அவர்கள் நிலத்தைத் துப்பரவு செய்து குடிசைகளை அமைத்துள்ளனர். அரச உயரதிகாரிகளும் படையினரும் இவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிப்படி நடக்கத் தவறியுள்ளதால் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கின்றனர்.
கிளாலிக் கடலில் மீன்பிடித் தொழில் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்ற உறுதி மொழி கிடப்பில் போடப்பட்டுள்ளது. மீன்பிடியைப் பிரதான தொழிலாகக் கொண்ட இவர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். அரச அதிகாரிகளும் படையினரும் கையை விரித்துள்ளனர்.
இந்த மக்கள் மீண்டும்; இடம்பெயர்ந்து பழைய இடங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். படையினரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது கடற்படையினரின் முகாம் கிளாலியில் அமைக்கப்படுவதால் மீன்பிடி அனுமதி வழங்க முடியாதென்று கூறினார்கள். எதற்காக இந்தக் குடும்பங்களை குடியமர அனுமதித்தீர்கள் என்று கேட்டபோது அது மேலிடத்து உத்தரவு என்று சொன்னார்கள்.
இலங்கைக் கடற்படையினரின் பொழுதுபோக்கு தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரங்களோடு விளையாடுவது என்ற உண்மையை மன்னார் சம்பவங்கள் நிரூபிக்கின்றன. கடற்படையினர் தமிழீழ மீனவர்களை எல்லா வகையிலும் வதைக்கிறார்கள்.
மன்னாரில் கடந்த ஒரு வருடமாகக் கடலட்டை சங்கு போன்றவற்றை எடுப்பதற்கு முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கடற்படையினர் இந்தப் பிரச்சனையை வேறு விதமாகப் பார்க்கின்றனர்.
தமிழ் மீனவர்களின் வயிற்றில் அடித்தபடி புத்தளம், சிலாபம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த சிங்கள முஸ்லிம் மீனவர்களுக்கு மன்னார் கடலில் கடலட்டை சங்கு போன்றவற்றைப் பிடிப்பதற்கு அனுமதி வழங்குவதோடு அவர்களுக்குப் பாதுகாப்பும் வழங்குகின்றனர்.
மன்னார் மீனவர்கள் என்ன பாவம் செய்தார்களோ தெரியவில்லை. மன்னார் ஆயர் தலையிட்டும் நிலமை சீராகவில்லை. வெளியிட மீனவர்கள் 200க்கும் மேற்பட்டோர் 15 படகுகளில் வந்து கடற்படை முகாமிற்கு அருகாமையில் தங்கியுள்ளனர். கடற்படை மின்சார ஒளி இவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
கடந்த முன்று மாதமாக வெளியிட மீனவர் ஆக்கிரமிப்பு கடற்படை உதவியுடன் நடக்கிறது. தமிழ் மீனவர்களுக்கு விடிவு கிட்டவில்லை. இதே நிலவரம் மாதகல் திருவடிநிலை கரை யோரத்திலும் நடக்கிறது. இந்தப் பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்லும் பாதையை கடற்படையினர் முட்கம்பி வேலி போட்டுத் தடுத்துள்ளனர்
மாதகல் கடற்படையினருக்கு எதிராக நில அபகரிப்பைத் தடுக்கும் பேரணிகள் கடந்த சில மாதங்களாக நடக்கின்றன. மாதகல் கடற்படையினர் படிப்படியாக பொது மக்களுடைய குடிநிலங்களை அபகரிக்கின்றனர். மக்கள் துணிந்து விட்டார்கள் கடற்படைக்கு எதிரான குரல்கள் எழுந்துள்ளன. இதற்கு பதிலடியாக மீனவர்கள் கடலுக்குச் செல்லும் பாதைகளை வேலி போட்டு அடைத்து சுற்றுக் காவல் போட்டுத் தடுத்தும் உள்ளனர்.
முல்லைதீவு முகத்துவாரத்தில் சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப் படுகின்றன. 247 சிங்கள மீனவ குடும்பங்கள் படையினரின் பாதுகாப்போடு தென் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளனர். முகத்துவாரத்தில் வாழ்ந்த தமிழ் குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் குடியமரப் படையினர் தடை விதித்துள்ளனர். வடபகுதி ஆளுநர் ஏ.ஜி சந்திரசிறியின் நேரடி உத்தரவின்படி இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முல்லைத் தீவு முகத்துவாரப் பகுதியில் வாழ்ந்த 150 தமிழ் மீனவ குடும்பங்கள் 1983ம் ஆண்டில் வெளியேற்றப்பட்டனர். போர் முடிந்து விட்டதாக கூறும் அரசு முகத்துவாரத் தமிழர்கள் தமது இடங்களுக்குத் திரும்ப அனுமதிக்காமல் சிங்களவர்களை அதில் குடியேற்றத் தொடங்கியுள்ளது.
தமிழர் மீள்குடியேற்றத்தை ஏன் தடுக்கிறீர்கள் என்று தமிழர் பிரதிநிதிகள் கடற்படை அதிகாரிகளைக் கேட்ட போது வழமையான அலட்சியப் பதில் கிடைத்தது. கண்ணிவெடி அகற்றும் பணி இன்னும் முடியவில்லையாம். ஆனால் சிங்களக் குடியேற்றம் தான் துரிதமாக நடக்கிறது. நல்லிணக்கம் பேசும் அரசு தமிழர்களுக்குச் செய்யும் நயவஞ்சகத்திற்கு அளவே இல்லை
No comments:
Post a Comment