Translate

Monday, 19 March 2012

இலங்கையின் அரசியல் சாசனத்தை தீயில் எரிப்போம் – மே 17 இயக்கத்தின் கோரிக்கை


இலங்கையின் அரசியல் சாசனத்தை தீயில் எரிப்போம் – மே 17 இயக்கத்தின் கோரிக்கை




சர்வதேசத்திற்கு தமிழரின் கோரிக்கைகளை முதன்மைபடுத்துவோம். இலங்கை ஒரு தோல்வியுற்ற சனநாயக நாடு என்பதை அம்பலப்படுத்துவோம். இலங்கையின் அரசியல் சாசனத்தை தீயில் எரிப்போம் –
சர்வதேச தமிழ்ச் சமூகங்களிற்கு மே 17 இயக்கத்தின் கோரிக்கை.

மீண்டும் ஒருமுறை சர்வதேச நாடுகள் தமிழரின் துன்பத்தை முன்வைத்து இலங்கையை நெருக்குவதாக பேசுகின்றன. இரண்டு முறை கடந்த 25 ஆண்டுகளில் இப்படியான தலையீடுகள் நமக்கு நடந்து இருக்கிறது. 1987இல் இந்தியா தமிழர்களுக்கு உதவுகிறோம் என்கிற பெயரில் இராணுவத்தை அனுப்பி, பின் அதுவே தமிழர்களை வேட்டையாடியது என்பதை நாம் மறக்க முடியாது. சிங்களம் தமிழருக்கு உதவி செய்ய வந்தவர்களின் பின்புறமாக நின்று தனது காரியத்தை சாதித்தது. இதன் பிறகு 2001இல் நார்வேயின் மூலமாக மேற்குலக நாடுகளும், பின்னனியில் இந்தியாவும் செயல்பட்டு அமைதி ஒப்பந்தம் என்கிற பெயரில் விடுதலைப் புலிகளை ஒடுக்குவதில் 6 ஆண்டுகள் திட்டமிட்டு காய் நகர்த்திய பின்னர் சிங்களம் இனப்படுகொலை போரை நடத்தி தமிழரின் இராணுவ – அரசியல் தலைமையை அழித்தது. தமிழருக்கு உதவி செய்ய வந்தவர்கள் , இம்முறையும், நம் மீது போர் நடத்தி நம்மை அழித்தார்கள். என ஒவ்வொருமுறையும் தமிழர் நலன் சார்ந்து நுழைகிறவர்கள் இறுதியில் தமிழருக்கு எதிரியாக மாறினார்கள்.


இந்தப் பின்னனியில், அமைதி ஒப்பந்தம் முன்வைத்ததற்கு 11 வருடங்களுக்கு பிறகு இந்த தீர்மானத்தை மேற்குலகு ஐ. நாவில் முன்வைக்கிறது. கடந்த இரண்டு தலையீடுகளின் போதும் தமிழருக்கு பாதுகாப்பாக இருந்து வட்டுக்கோட்டை தீர்மானத்தில் தமிழர்கள் முன்மொழிந்த கோரிக்கைகளை காக்கும் வண்ணம் போரிட்ட தலைமை தற்போது வெளிப்படையாக நம்மிடம் செயல்படாத பொழுது நாம் தான் அந்தப் பொறுப்பை முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையாக இருக்கிறது.

ஐ. நாவில் கொண்டு வரப்பட இருக்கிற தீர்மானம் அதன் உள்ளடக்க அளவிலும் செயல்பாட்டளவிலும் தமிழர்களின் நீண்ட நாள் துயரத்தையும், அவர்களுக்கு இழைக்கப்படுகிற அரசியல்-சமூக அநீதியையும் தீர்ப்பதற்கான வலிமை குறைவாக இருக்கிறது என்பதை தமிழர் உலகம் அறிந்தே இருக்கிறது. இலங்கை அரசின் நீதி பரிபாலனைகளுக்குள்ளாக நீதி வழங்கப்படுவதென்பது உலக நீதி வரலாற்றில் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. என்றாலும் இந்த தீர்மானம் நமக்கான நீதி நோக்கிலான தீர்மானம் என்கிற பிம்பம் மேற்குலக நாடுகளின் ஊடகங்களின் மூலம் கட்டமைக்கப்படுகிறது. நமது துன்பம் ஒரு வியாபாரப் பொருளை போல விற்பனைக்குள்ளாக்கப்பட்டு இலங்கைக்குள் நுழைவதற்கான முன்னெடுப்புகள் விரிவாக நகர்த்தப்படும் இந்த காலகட்டம் வரையிலும் தமிழரின் கோரிக்கைகளை பற்றிய எந்த ஒரு அக்கரையும், கவனிப்பும் இல்லாமல் தீர்மானம் நகர்கிறது. தாங்கள் விரும்பாத ஒரு அதிபரையும், அவரது அதிகாரவர்க்கத்தையும் மாற்றி தனக்கு தேவைப்படுபவர்களை அரசில் அமைக்க தமிழரின் துன்பம் மேற்குலகிற்கு தேவைப்படுகிறது, இதில் தமிழரின் துன்பத்திற்கான தீர்வும், விடிவும் இல்லை. இந்த தீர்மானம் முக்கியமான தீர்மானமாக பேசப்பட்டாலும் இது முழுமை பெறாத தீர்மானம். இலங்கை அரசின் நெருங்கிய இந்தியாவின் நண்பர் சிவசங்கர் மேன்ன் அமெரிக்காவின் தூதராக பணியாற்றிக் கொண்டிருக்கும் இந்த காலகட்ட்த்தில் அமெரிக்கவின் நகர்வில் இந்தியாவின் நலனும், பங்களிப்பும் இருக்காது என நாம் நம்ப முடியாது. ஆக இந்த நாடுகள் ராசபக்சேவின் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தி தமிழருக்கு நீதி வழங்கிவிட்டதாக ஒரு போலி தோற்றத்தை உருவாக்கி ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வை நமக்கு வ்ழங்கிவிடும் அபாயம் நிறையவே உண்டு.

தற்போது முன்மொழியப்பட்டு இருக்கும் தீர்மானம் உள்ளடக்க அளவில் இலங்கையை ஒரு சன நாயக நாடாக அங்கீகரிக்கவே செய்கிறது. மேற்குலகின் உள் நோக்கமான தமிழீழ விடுதலை மறுப்பு என்பதை வெளிப்படையாக வைக்காமல், அந்த கோரிக்கையை புதைக்கும் விதமாகவே தற்போது இந்த கோரிக்கையின் சாரம்சம் வடிவமைக்கப்பட்டதாக தோன்றுகிறது. இலங்கையின் நீதித்துறை, காவல்துறையை முதன்மை படுத்துவதன் மூலம் இலங்கையின் சனநாயகம் உயிர்ப்போடு இருப்பதாக காட்டப்படுகிறது..

ஆனால் இலங்கையின் சனநாயக கட்டமைப்புகள் சிங்களவாதம் சார்ந்ததாகவும், சர்வதேச விதிகளின் படி அமையவில்லை எனவும் பல்வேறு அறிஞர்கள் பல்வேறு சமயங்களில் ஆதாரபூர்வமாகவும், அனுபவப்பூர்வமாகவும் உலகிற்கு அறிவித்து இருக்கிறார்கள். மேலும் தோல்வியடைந்த இந்த சனநாயக அரசு கட்டமைப்பு தொடர்ந்து தமிழர்களுக்கு நீதி வழங்காது என்பது பல்வேறு மனித உரிமை மீறல் குறித்த இலங்கையின் உள் நாட்டு விசாரணை மூலமாக அறியப்பட்டு இருக்கிறது. உதாரணமாக இலங்கையில் 2006இல் அமைக்கப்பட்ட கிட்ட்தட்ட எட்டு விசாரணை கமிசன்கள் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், ஊழல், திரு.ஜோசப் பரராஜசிங்கம்-- பாராளுமன்ற உறுப்பினரின் படுகொலை உள்ளிட்டவற்றை விசாரிக்க அமைக்கப்பட்டன. இவை நேர்மையாக சர்வதேச தரத்தின் படி நடத்தப்படுகின்றனவாஎன அறிய பன்னாட்டு அறிஞர்கள் குழு (இண்டர்னேசனல் க்ருப் ஆப் எமினண்ட் பர்சனாலிட்டீஸ்) இந்தியாவின் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி பி.என். பகவதி தலைமையில் அமைக்கபட்ட்து. ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் 2007இல் இவர்கள் வெளியேறினார்கள். இவர்கள் தங்கள் அறிக்கையில் இலங்கையில் நேர்மையான நீதி பரிபாலனை நடக்க இயலாது ஏனெனில் பல்வேறு காரணிகளில் ஒன்றான “இலங்கையில் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சாட்சிகளுக்கும் பாதுகாப்பு கிடையாது” என்பது முக்கியமானது என்று அறிவித்தார்கள். இதன் மூலமாக இலங்கையின் நீதிதுறை அதாவது சனநாயக தூண்களில் ஒன்று, நேர்மையற்றதாக இருக்கிறது என நிரூபணமானது. இவ்வாறே இலங்கையின் பாராளுமன்றமும், இலங்கையின் அதிகாரவர்க்கமும், செயலற்றதாக இருக்கிறது. அதே போல மற்றொரு தூணான பத்திரிக்கையும் சுதந்திரம் இழந்து நிற்கிறது. ஆக இலங்கை ஒரு தோல்வியடைந்த சனநாயக நாடாக உலகின் முன் நிற்கிறது. இதன் வரிசையில் இலங்கையின் அரசியல் சாசனமும் சனநாயகமற்று தமிழர்களுக்கு எதிராக இருக்கிறது என்பது தந்தை செல்வாவின் காலகட்டத்திலேயே அறியப் பட்ட ஒன்று. ஆக நமது போராட்டம் என்பதும் இந்த புள்ளியில் ஆரம்பிக்கிறது.

இதே நேரத்தில் சர்வதேச அளவில் நமது கோரிக்கைகளை நாம் தெளிவாகவும், தீர்க்கமாகவும், ஒரே குரலில் வைப்பது அவசியம். அப்பொழுது தான் நமது கோரிக்கைகளை இந்த சர்வதேசம் கணக்கில் எடுத்துக் கொண்டதா அல்லது மறுத்ததா என்கிற வாததை நாம் எழுப்ப முடியும், நமக்கு நீதி கிடைக்காது என தெரிந்த சமயத்தில், இவர்களுக்கு எதிரான நமது போராட்டமும் இங்கிருந்து துவங்கும்.ஆக உலகச் சமூகம் நமது கோரிக்கைகளை அறியட்டும்.அதனூடாக நமது அடுத்த கட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படும். நமது சனநாயக போராட்டங்களை இலங்கையின் தோல்வியடைந்த சன நாயகத்தை உலகுக்கு புரிய வைப்பதுடன், இலங்கையை நாம் நேர்மையான சன நாயக நாடாகவோ, தாய் நாடாகவோ ஏற்க முடியாது என்பதை முன்னிறுத்துவதில் துவங்கும். ஆகவே நமது கோரிக்கைகளை நாம் வரையறுப்போம். இதில் இரண்டு கோரிக்கைகள் நமக்கு விடுதலையையும், அதே சமயத்தில் இலங்கையுடனாக சேர்ந்து நடக்கும் போலி போர்குற்ற விசாரணை என்பதன் அடிப்படையை தகர்ப்பதாகவும் அமையும்.

அவை

ஐ. நாவின் மேற்பார்வையில் தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்

சுயாதீனமான- சுதந்திரமான சர்வதேச புலனாய்வு இலங்கைஅரசு மீது நடத்தப்பட வேண்டும்

என்ற இரு கோரிக்கைகள் இப்பொழுது ஐ. நாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் இலங்கைக்கு சாதகமாக இருக்கும் அம்சங்களை உடைப்பது மட்டுமல்லாமல் நமக்கான நீதியையும் பெற்றுத் தருவதற்கான சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறையுமாகும். ஆகவே இவற்றை நாம் ஒற்றைக் குரலில் முன்னெடுப்பது அவசியம். இந்த கோரிக்கைக்களுக்கு சர்வதேசம் பதில் சொல்ல வைப்பது அவசியம்

மேலும் நமது போராட்டம் இந்த கோரிக்கைகளை முன்னெடுப்பதுடன் இலங்கை அரசினை பலவீனப்படுத்தும் நோக்கில் நகரவேண்டும். ஏனெனில் சர்வதேசத்தின் தற்போதய நகர்வு இலங்கையில் வெறும் ஆட்சி மாற்றத்தை மட்டுமே தரும் பட்சத்தில் நமக்கு எந்த வித உதவியாகவும் இது அமையாது. நமது கோரிக்கையை முன்னெடுப்பது என்பது இலங்கை அரசும், அரசியல் சாசனமும், அதன் சனநாயக தூண்களும் தமிழர்களால் ஏற்கப்படவில்லை என்பதே நம்மை மேலும் நமது கோரிக்கை நோக்கி நகர்த்தச் செய்யும் வழியாகும். இதைச் செய்ய நாம் இலங்கையின் அரசியல் சாசனத்தை, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள், குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் தங்களது நாட்டிலும், ஊர்களிலும், வீதியிலும் பொது இடத்தில் தீயில் எரிக்க வேண்டும். இதன் மூலமாக இலங்கையின் அரசியல் சாசனத்தை நாம் எற்கவில்லை என்பது புலப்படும். இந்த குறியீட்டு போராட்டம் இலங்கை சன நாயகத்தைப் பற்றி ஒரு புரிதலை உலகிற்கு, குறிப்பாக மக்கள் சமூகத்திற்கு ஏற்படுத்தும். இதன் மூலமாக நாம் சர்வதேசத்தின் சதியையும் , இலங்கை அரசினையும், இந்தியாவையும் முறியடிக்க முடியும். இதனூடாக உலகம் முழுவதும் இலங்கையின் நல்லிணக்க ஆணையத்தின் அறிக்கை எரிக்கப்பட்டால் அது மிக வலிமையாக உணரப்படும். நமது எதிர்ப்பையும், எதிர்பார்ப்பையும் தீர்க்கமாக சொல்லிவிடமுடியும். இது நமது போராட்ட்த்தை மேலும் கூர்மையாக்கும் என உறுதியாக நம்புகிறோம். ஆகவே தமிழர்களே நமது போராட்ட்த்தை இலங்கை நோக்கியும், நம்மை கலந்தாலோசிக்காது, நமது கோரிக்கையை பற்றி கவலைப்படாது செயல்படும் அரசுகளின் வாதங்களை முறியடிப்பதாக இருக்கட்டும். ஆகவே இலங்கையின் அரசியல் சாசன எரிப்பு நமது போராட்டத்திற்கு தீ மூட்டட்டும்.

இலங்கையின் அரசியல் சாசனத்தையும், நல்லிணக்க ஆனையத்தின் தீர்ப்பையும் எரிப்போம். ஐ. நாவில் கோரிக்கை பற்றிய விவாதம் வரும் முன்னர், ஆயிரக்கணக்கில் கோரிக்கைகள் எரிக்கப்பட்டும்.

தமிழீழம் வெல்லும். நாம் வெல்வோம்.
மே பதினேழு இயக்கம்
  

No comments:

Post a Comment