Translate

Sunday, 18 March 2012

ஜெனிவா தீர்மானம்: இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி 21ந்தேதி விடுதலைச் சிறுத்தைகள் நாடு தழுவிய அளவில் உண்ணாநிலை அறப்போர் - தொல்.திருமாவளவன்




ஜெனிவா தீர்மானம்:
இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி
21ந்தேதி விடுதலைச் சிறுத்தைகள் நாடு தழுவிய அளவில் 
உண்ணாநிலை அறப்போர்
- தொல்.திருமாவளவன் 
--------------------------------------

ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக அமெரிக்க வல்லரசு முன்மொழிந்துள்ள வரைவுத் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டுமென தமிழக மக்களும் உலகத் தமிழினமும் ஒட்டுமொத்தமாகக் குரல் எழுப்பி வருகின்றன. 

ஆனாலும், இந்திய அரசு அத்தீர்மானத்தை ஆதரிக்கும் என்பதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்து வற்புறுத்தியும்கூட இந்திய அரசின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்படவில்லை. மாறாக, அத்தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வாய்ப்பில்லை என்கிற வகையில் வெளியுறவுத்துறை அமைச்சரின் அறிக்கை அமைந்துள்ளது. 

இந்நிலையில், இந்திய அரசு அத்தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென்று வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் எதிர்வரும் 21-3-2012 புதன்கிழமை அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஒரு நாள் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அத்துடன் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் ஒருங்கிணைந்து 23-3-2012 அன்று நடத்தவுள்ள பொது வேலை நிறுத்தத்தில் விடுதலைச்சிறுத்தைகள் முழுமையாகப் பங்கேற்கும் என்றும் அறிவித்துக்கொள்கிறோம்.
விடுதலைச் சிறுத்தைகளின் உண்ணாநிலை அறப்போராட்டத்திலும் பொதுவேலைநிறுத்தத்திலும் உழைக்கும் தமிழக மக்கள் பெருவாரியாகப் பங்கேற்று நமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவண்
தொல்.திருமாவளவன்

No comments:

Post a Comment