Translate

Monday, 19 March 2012

மார்ச் 23 போராட்டம் நிறுத்திவைப்பு: நெடுமாறன் அறிவிப்பு

சென்னை: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கப்போவதாக அறிவித்திருப்பதால், மார்ச் 23-ம் தேதி நடத்தவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் நிறுத்திவைக்கப்படுவதாக, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கமும் மற்றும் தமிழக அரசியல் கட்சிகளும் இணைந்து ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கை அரசுக்கு எதிரான போர்க் குற்றத் தீர்மானம் முன்மொழியப்படும் மார்ச் 23ஆம் தேதியன்று  தமிழகம் தழுவிய அளவில் வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

ஆனால், இந்திய அரசு இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. அதை நாங்கள் வரவேற்று நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். 

அதேவேளையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவில் இன அழிப்புப் போர்க் குற்றத்திற்காக ராஜபக்ஷே அரசாங்கத்தின் மீது சர்வதேச விசாரணைக் குழுவின் நேரடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றத் திருத்தத்துடன் இந்தியா இத்தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

வரும் 23ஆம் தேதியன்று நடத்தப்படவிருந்த போராட்டம் நிறுத்திவைக்கப்படுகிறது. இப்போராட்டத்துக்கு ஆதரவுதர முன்வந்த அனைத்துக்கட்சிகள், அனைத்துத் தமிழ் அமைப்புகள், வணிகர் சங்க பேரவை மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகிய அனைத்துக்கும் பொது மக்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று நெடுமாறன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment