பிரபாகரன் போராட்டம் சரியானதே! தமிழீழம் மலர வேண்டும் என்பதே எனது வாழ்நாள் லட்சியம்: கருணாநிதி
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து கருத்து தெரிவித்த கருணாநிதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைத் தமிழர்களுடைய வாழ்வின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் யோசித்து, முடிந்தால் தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளுடைய துணையோடு இப்போது எப்படி இந்தத் தீர்மானத்தில் இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று குரல் கொடுத்தோமோ அதைப் போல ஒருமித்த குரலைக் கொடுத்து ஆவன செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனால் இலங்கை இதுவரை தமிழர்களுக்குப் புரிந்த கொடுமைகளுக்கு பரிகாரம் தேடுகின்ற நெருக்கடி ஏற்படும்.
ஏனென்றால் சிசுக்கள், இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், முதியவர்கள் என்று ஆயிரக்கணக்கான தமிழ்த் தாய்மார்களும், தமிழர்களும் சித்திரவதைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
சவக்குழிக்களுக்குச் சென்றிருக்கிறார்கள். இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் பரிகாரம் ஏற்படவும், உலக நாடுகள் முன்னால் தலை குனிந்து நின்று காரண காரிய விளக்கங்கள் சொல்லவும் இலங்கை அரசு கடமைப்பட்டிருக்கிறது.
இப்போது தான் பெரும்பாலான நாடுகளுடைய தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த நாடுகள் தான் என்ன நடவடிக்கை எடுப்பது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றார் கருணாநிதி.
பிரபாகரன் போராட்டம் சரியானதே.. ஆனால் சகோதர சண்டைதான் ஈழம் அமைவதைக் கெடுத்தது - கருணாநிதி
தனி ஈழத்துக்கான பிரபாகரன் போராட்டம் தவறானது என்று கூறும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. அவர் போராட்டம் சரியானதே. ஆனால் சகோதரச் சண்டைதான் தமிழ் ஈழம் அமைவதைக் கெடுத்தது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் கேட்கப்பட்ட முக்கிய கேள்வி, தமிழ் ஈழம் பற்றியதுதான். அதற்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பு:
ஈழத்தில் நடந்த சகோதர யுத்தம்தான் தமிழீழம் உருவாவதைத் தடுத்துவிட்டது என்பது என் கருத்து என்றார் கருணாநிதி.
அப்போது, புலிகள் நடத்திய சகோதர யுத்தம் தவறானது என்று சொல்கிறீர்கள். தந்தை செல்வா போன்றோர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் தமிழர்கள் மீது அத்துமீறல்கள் நடந்தன. அதனால்தான் நாங்கள் போராடத் தொடங்கினோம்' என்று பிரபாகரன் சொல்லியிருந்தாரே?அது தவறா? என்று ஒரு நிருபர் கேட்டார்.
உடனே பதிலளித்த கருணாநிதி: "பிரபாகரன் போராட்டத்தைக் குறை கூறும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல. அவர் முன்னெடுத்த போராட்டம் சரியானதே. அதை திமுகவும் ஆதரிக்காமலில்லை. புலிகள் நடத்திய சகோதர யுத்தம் என்று நான் சொன்னது அவர்களைப் பற்றி மட்டுமே அல்ல.
ஆனால் பிரபாகரனும் முகுந்தனும், பத்நாபாவும், ஸ்ரீசபாரத்தினமும் மோதிக் கொண்டு அதில் இரத்த ஆறு ஓடியதைத்தான் நான் மிகுந்த வேதனையோடு அப்போதும் தடுத்தேன். இப்போதும் அந்த நிலை வரக்கூடாது" என்று வேண்டுகிறேன் என்றார் கருணாநிதி.
No comments:
Post a Comment