Translate

Sunday 25 March 2012

பொறுத்தார் பூமி ஆள்வார்! ச.வி.கிருபாகரன் .


பொறுத்தார் பூமி ஆள்வார்! ச.வி.கிருபாகரன் .

இலங்கைத் தீவில் எத்தனை இனக்கலவரங்கள், எத்தனை அரசியல் போராட்டங்கள், எத்தனை படுகொலைகள், எத்தனை இடப்பெயர்வுகள், பட்டினிச்சாவுகள், எத்தனை தசாப்தங்களாக நடைபெற்று முடிந்துள்ளன.
ஆனால், தற்போதுதான் சர்வதேசத்தின் கண்கள் இவற்றின் மீது பதிந்துள்ளன. சட்ட ரீதியாக வலிமை படைத்த ஐ.நா. அங்கத்துவ நாடுகளினால் மேற்கூறப்பட்டவற்றை கவனத்திற் கொண்டு ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைச் சபையின் 19 ஆவது கூட்டத் தொடரில் கடந்த 22 ஆம் திகதி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத் தீர்மானத்தில் எவ்வகையான பாதக, சாதக நிலைமை உள்ளது என்பதை ஆராயும் முன் இத் தீர்மானத்தினால் எந்தப் பாதகம் எவருக்கும் இல்லையென்பதே தெட்டத் தெளிவானது.
அரசியலில் வளரத் துடிக்கும் அரசியல்வாதிகளினால் யாவற்றிலும் வலிந்து பிழை பிடித்து அவற்றைக் காண்பித்தால்தான் வளர முடியுமென்ற தப்பான அபிப்பிராயம் நிலவுவது தவிர்க்க முடியாதென பல அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜெனீவாவில் மனித உரிமை அமர்வில் இலங்கை படுதோல்வியடைந்துள்ளது என ஒரு கருத்தும், தமிழர்கள் வெற்றியடைந்து விட்டார்களென வேறு ஒரு கருத்தும் நிலவுவது தவிர்க்க முடியாதெனக் கூறும்வேளை தமிழர்கள் உண்மையில் வெற்றியடைந்தார்களா? என ஆராய்வது முக்கியமானது.
கடந்த வியாழக்கிழமை மார்ச் 22 ஆம் திகதி ஜெனீவாவில் குளிர் குறைந்து வெப்பம் கூடிய நாள்! காலை 10.00 மணிக்கு ஆரம்பமாக வேண்டியிருந்த 19 ஆவது கூட்டத்தொடர் 10.30 ஆகியும் ஆரம்பமாகவில்லை. பலவித ஊகங்கள் பலவித காட்சிகள். மண்டபத்தில் முக்கியமாக 47 அங்கத்துவ நாடுகளின் எந்த இராஜதந்திரியும் தமது ஆசனத்தில் இருக்கவில்லை.
இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த அரச பிரசார பீரங்கிகள், தொடர்ந்தும் தமக்கு ஆதரவு தரவுள்ள நாடுகளுடனேயே இலங்கை ஜனாதிபதியை திருப்திபடுத்தும் போர்வையில் கடுமையான கலந்துரையாடல்களை நடத்தினார்கள்.
புலம்பெயர் வாழ் தமிழ் செயற்பாட்டாளர்களிடையே பல ஏக்கங்கள். சிலர் இலங்கை மீதான பிரேரணை நின்று விடுமா என்ற பதற்றமடைந்தனர்.
கூட்டம் ஆரம்பம் 19 ஆவது கூட்டத் தொடரின் தலைவி உருகுவே நாட்டின் தூதுவர் திருமதி லோற சரியாக 10:37 ற்கு பிரசன்னமாகி யாவரையும் ஆசனங்களில் அமருமாறு கூறி கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார். மண்டபத்தில் எந்த ஆசனமும் வெறுமையாகக் காணப்படவில்லை. பொதுவாக இம் மண்டபத்தில் நிற்பதற்கு யாரையும் அனுமதிப்பதில்லை. ஐ.நா.
பாதுகாவலர்கள் இராஜதந்திரிகளுடைய அடையாள அட்டையுடன் வருபவர்கள் யாரையும் தடுத்து நிறுத்த முடியாத காரணத்தில் மண்டத்தில் ஏறக்குறைய 25 பேர் வரையில் நின்றார்கள். இவர்களில் 13, 14 பேர் இலங்கையிலிருந்து வருகை தந்த அரச குழுவினர்கள், இவர்கள் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டார்கள். மண்டபம் நிறைந்த காரணத்தினால் ஊடகவியலாளர்கள் தவிர்ந்த மற்றைய யாவருக்கும் உள்ளே வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக இம் மண்டபத்தில் நடைபெற்ற சில அசிங்கமான சம்பவம் காரணமாக மனித உரிமைச் சபையிலும் வெளியிலும் பெருவாரியான ஐ.நா. பாதுகாவலர்கள் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
இலங்கைக்கான ஆசனத்தின் முன் வரிசையில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸும் வீற்றிருந்தார்கள். இரண்டாவது வரிசையில் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸும் டக்ளஸ் தேவானந்தாவும் வீற்றிருந்தார்கள். மற்றைய அமைச்சர்களான சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா, ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் மற்றும் பலர் அங்கும் இங்குமாக வெற்றிடம் கண்ட ஆசனங்களில் இருந்து கொண்டனர்.
சபைத் தலைவி கூட்டம் ஆரம்பமாகியதும் பிரேரணைகள், பிரேரணைக்கான வாக்கெடுப்பு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதும் இலங்கை மீதான அமெரிக்காவின் பிரேரணையை தாம் முதலாவதாக விவாதத்திற்கு எடுப்பதாக அறிவிக்கப்பட்டதும் அமெரிக்காவின் தூதுவர் திருமதி டொனாக் அமெரிக்கா சார்பாக தமது பிரேரணைக்கான பல காரணங்களைக் கூறி இதற்கு சார்பாக சகல அங்கத்துவ நாடுகளையும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அத்துடன் அமெரிக்க தூதுவர் தமது பிரேரணைக்கு 40 நாடுகள் தம்முடன் இணைந்து முன்மொழிவதாகவும் கூறியிருந்தார். இதில் முக்கிய குறிப்பு என்னவெனில் ஓர் பிரேரணை முன்மொழியப்படும் பொழுது ஐ.நா. அங்கத்துவ நாடுகள் யாரும் இணைந்து செயற்படலாம். இந்த வகையில் அமெரிக்காவின் இப்பிரேரணைக்கு ஐ.நா. அங்கத்துவ நாடுகளின் 23 வீதமானோர் ஆதரித்து முன்மொழியப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அமெக்கத் தூதுவரின் உரையைத் தொடர்ந்து கியூபாவின் தூதுவர், தாம் 14 நாடுகளின் துணையுடன் இவ் அமெரிக்காவின் பிரேரணையை விவாதத்திற்கு எடுக்கப்படக் கூடாதென சில அர்த்தமற்ற காரணங்களைக் கூறினார்.
உடன் சபைத் தலைவலி, இவ்விடயமாக அமெரிக்காவிடம் வினவியபொழுது அமெரிக்கத் தூதுவர், கியூபாவின் கருத்து அர்த்தமற்றது. நாம் கடந்த மூன்று வருடங்களாக எடுத்த முயற்சி எதுவும் பலன் தரவில்லை. ஆகையால், தாம் கியூபாவின் வேண்டுகோளை நிராகரிப்பதாகக் கூறினார்.
இவ்வேளையில், கியூபா விரும்பியிருந்தால் தாம் முன்வைத்த விடயமாக ஓர் வாக்கெடுப்பிற்கு விடுமாறு வேண்டியிருக்கலாம்! ஆனால், அவர்கள் வாக்கெடுப்பின் முடிவு என்னவாகுமென்பது தெரிந்த காரணத்தினால் கியூபா அவ்வேண்டுகோளை முன்வைக்க விரும்பவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியன் சார்பாக பெல்ஜியத்தின் பிரதிநிதி தாம் அமெரிக்காவின் பிரேரணையை ஆதரிக்கும் இதேவேளை, இலங்கை அரசினால் மனித உரிமை ஆர்வலர்கள், காவலர்கள் மீதான இலங்கை, ஜெனீவா ஆகிய இடங்களில் இடம்பெறும் சம்பவங்களை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் கூறியிருந்தார். தொடர்ந்து செக் குடியரசின் பிரதிநிதி இப்பிரேரணைக்கு சார்பாக உரையாற்றினார்.
இலங்கை, சீனா, கியூபா ஆகிய நாடுகள் தாம் இப்பிரேரணையை எதிர்ப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து பிரேரணையை எதிர்கொள்ளும் நாடான இலங்கை, பிரேரணை மீதான கருத்துக்களைக்கூற சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இவ்வேளையில் பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்ர் மஹிந்த சமரசிங்க வழமையான தனது சிம்மப் பிரசங்கத்தை ஏறக்குறைய 5 – 7 நிமிடம்வரை நிகழ்த்தியபொழுது இலங்கையின் வெளிநாட்டு அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மிக அமைதியாகப் பின்வரிசையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தார்.
இக்கூட்டத் தொடரில் இவர்கள் வெளிநாட்டு அமைச்சோ, அமைச்சரோ ஐ.நா. விற்கான தூதுவர் செல்வி தமரா குணநாயகம், அவரின் குழுவினர்கள் யாவரும் ஓரங்கட்டப்பட்டிருந்ததை எல்லோரும் வெளிப்படையாகக் காணக்கூடியதாகவிருந்தது.
மஹிந்த சமரசிங்கவின் உரையைத் தொடர்ந்து சபைத் தலைவி, வாக்கெடுப்பை தொடங்க முன்னர் அங்கத்துவ நாடுகள் மாத்திரம் கருத்து கூற விரும்பினால் கூறலாம் என தெரிவித்தார்.
அப்போது ரஷ்யா, ஈக்குவடோர், பிலிப்பைன்ஸ், உகண்டா, மாலைதீவு, இந்தோனேசியா, லிபியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாம் இப்பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதாகக் கூறினர்.
அதேவேளை, நைஜீரியா, மெக்சிக்கோ, உருகுவே ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாம் இப்பிரேரணைக்கு சார்பாக வாக்களிப்பதாகக் கூறிய வேளையில் கிர்கிஸ்தான், அங்கோலா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாம் நடுநிலை வகிக்கவுள்ளதாகவும் கூறினார்கள்.
இதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு ஆரம்பமாகியதும் வாக்கெடுப்பின் முடிவுகள் உடன் திரையில் காண்பிக்கப்பட்டன.
அமெரிக்காவின் பிரேரணைக்கு சார்பாக 24 நாடுகளும், எதிராக 15 நாடுகளும் நடுநிலையாக எட்டு நாடுகளும் வாக்களித்து, சபையில் இலங்கை மீதான பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
வாக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் சபையில் பலத்த கைதட்டல்களும் கரகோஷங்களும் ஒலித்தன.
சில நிமிடம் இடைவேளையின் பின்னர் சபை மீண்டும் கூடியபொழுது இந்தியா, தான் பிரேரணைக்குச் சார்பாக வாக்களித்த காரணங்களை சபையில் பிரஸ்தாபித்திருந்தது.
இப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பிரேரணைக்கு சார்பாக வாக்களித்த ஒரே ஒரு ஆசிய நாடாக இந்தியா இன்று திகழ்கிறது மட்டுமல்லாது, உலகத் தமிழரின் ஆதரவு, விசேடமாக இலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தாம் கொண்டுள்ள அக்கறைகளை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
இப்பிரேரணை பற்றி அனுபவமற்ற அரசியல்வாதிகள் கூறுவதுபோல் யாருக்கும் எந்த பாதகத்தையும் உருவாக்க முடியாது. காரணம் இப் பிரேரணை என்பது பல தசாப்தங்களாக பசி பட்டினியால் இருந்த ஒருவருக்கு பாணும் சம்பலும் கிடைத்தது போலானது.
பாணும் சம்பலிலும் நிச்சயம் புரத சத்துக்கள் இருக்க முடியாது. ஆனால் பசி, பட்டினியாக இருந்தவர் உயிர் வாழ்வதற்கு ஏற்ற சத்துகளை உயிரையும் அவருக்கு கொடுப்பது போலானது.
அனுபவமற்ற அரசியல்வாதிகள் கூறுவது போல் பசி, பட்டினியுள்ளவர் தனக்கு கோழி, ஆடு, மாடு, புரியாணி வரும்வரை காத்திருப்போம். பாணும் சம்பலும் தேவையில்லையென்றால் மரணம், அழிவுதான் இறுதி முடிவாக இருக்கும்.
ஆகையால் இப்பிரேரணையை சாதகமாக்கி இவற்றைச் சரியான வழிமுறைகளில் கொண்டு செல்வதே முதிர்ச்சியான அரசியல் இராஜதந்திரம் தெரிந்தவர்களின் வேலைகளாகும். அடுத்து தமிழர்களோ, ஈழத் தமிழர்களோ இப்பிரேரணை மூலம் எந்த வெற்றியையும் அடையவில்லை என்பதும் உண்மை.
காரணம் இதுவரையில் ஏறக்குறைய 2 இலட்சம் மக்களின் உயிரைக் கொடுத்து நிலத்தைப் பறிகொடுத்து இன்னும் பலவற்றைப் பறிகொடுத்து உருவாகியதே இந்த பிரேரணை. ஆகையால் நாம் இதை வெற்றியாகக் கொண்டாடுவதும் தவறு.
இதே நேரம் கடந்த 22 ஆம் திகதி ஓர் நிரந்தரக் கட்டடம் எழுப்புவதற்கான அத்திவாரக்கல் நாட்டப்பட்டு விட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆகையால், யாவரும் இனியும் பிரிவுகள் பகைமைகளைக் காட்டாது ஒன்றுபட்டு இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பாவித்து சர்வதேச சமூகத்தினாலும் இந்தியாவினாலும் எமக்கு கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி எமது இனம், நிலம் இலட்சியத்தைக் காப்பாற்ற வலுச்சேர்ப்போம்.
பிராந்திய வல்லரசான இந்தியாவின் ஆதரவு, உலக வல்லரசான அமெரிக்காவின் ஆதரவு எமது வாசலைத் தேடி வந்துள்ளன.
இவற்றை நாம் சரியான முறையில் வரவேற்று அணுக வேண்டியது, எமது கெட்டித்தனங்கள், இராஜதந்திரங்களில் உள்ளன.
தயவு செய்து இவற்றை மேலும் சந்தேகக் கண்களுடன் நோக்குவதை நிறுத்தி, எமது விடிவு காலத்திற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளதாக எண்ணுங்கள்.

No comments:

Post a Comment